தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல துறைகளிலும் கால் பதித்து வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது.அதன் தொழில்நுட்பம் அடிப்படையிலான பல்வேறு ஸ்டார்ட் அப்ப்புகள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்படுகின்றன. பெரும்பாலான இளம் தலைமுறையினர் ஏஐ நுட்பத்தைக் கொண்டு பல சாதனைகளை புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த 19 வயது மாணவர் ஒரு ஏஐ நிறுவனத்தை உருவாக்கி கூகுள் , ஓபன் ஏஐ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த மூத்த அதிகாரிகளை அதில் முதலீடு செய்ய வைத்துள்ளார்..இதன் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார்.
மும்பையைச் சேர்ந்த 19 வயது மாணவர் திரவ்யாஷா என்பவர், சூப்பர் மெமரி என்ற பெயரில் ஸ்டார்ட் ஆப் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்.
முதலில் இவர் ஐஐடியில் நுழைவுத் தேர்வினை எழுத் தயாராக முற்பட்டார். இதற்காக தனது பெற்றோரிடம் தனக்கு ஒரு லேப்டாப் வேண்டும் என கேட்டிருக்கிறார். அவருடைய பெற்றோரும் அவருக்கு லேப்டாப் ஒன்றினை வாங்கி கொடுத்திருக்கின்றனர். தேர்வுகளுக்கு படிக்கத் தயாராகி இருக்கிறார்.அப்போதுதான் அவருக்கு கோடிங் குறித்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாம். கோடிங் குறித்து சுயமாக கற்றுக் கொண்ட அவர் தானாகவே ஒரு ஏஐ சாட் பாட்டை உருவாக்கி இருக்கிறார். பின்னர் அதனை விற்பனையும் செய்திருக்கிறார். இப்படி சிறியதாக ஏஐ சாட் பாட்டுகள், செயலிகள் பலவற்றை உருவாக்கிய அவர் அவற்றை விற்பனையும் செய்திருக்கிறார் .
இதன் மூலம் அவருக்கு பெரிய அளவிலான தொகை வந்திருக்கிறது. ஏஐ சம்பந்தப்பட்ட பிரிவுகள் சிறந்த தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்பதை உணர்ந்து கொண்டார். அவர் தனது ஐஐடி கனவை கைவிட்டு விட்டு தான் உருவாக்கிய செயலிகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அமெரிக்காவிற்கு பயணம் செய்திருக்கிறார் .
தற்போது அமெரிக்காவில் 0-1 விசாவில் தங்கியிருக்கும் இவர் அடுத்த நாற்பது வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதிதாக ஒரு ஏஐ தயாரிப்பை கொண்டு வர வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.அப்படித்தான் சூப்பர் மெமரி என்ற ஒரு ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்க தொடங்கி இருக்கிறார்.
இந்த தொழில் நுட்பத்தில் ஏஐ கருவிகள் தாங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்களை நீண்ட காலத்திற்கு நினைவில் தக்க வைத்துக் கொள்லும். பின்னர் அவற்றை சரியான முறையில் தேவைப்படும் போது பயன்படுத்தக்கூடிய ஒரு தொழில்நுட்பம் . சூப்பர்மெமரி ஒரு வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அனுப்புவது தொடங்கி ஒரு வீடியோ எடிட்டர் வரை அனைவருக்குமே பெரிய அளவில் பலன் தரும் என அவர் கூறுகிறார்.
தற்போது இந்த சூப்பர் மெமரி நிறுவனத்திற்கு அவர் நிதி திரட்டி இருக்கிறார். இதில் கூகுள் ஏஐ பிரிவின் தலைவர், டீப் மைண்ட் பிரிவு மேனேஜர் , ஓபன் ஏஐ, மெட்டா ஆகிய நிறுவனங்களின் ஏஐ பிரிவு மூத்த அதிகாரிகள் பலரும் முதலீடு செய்து இருக்கின்றனர்.கிட்டத்தட்ட 23 கோடி ரூபாய் முதலீட்டை இவர் ஈர்த்து இருக்கிறார். இவரைப் போன்றே இன்றைய இளைஞர்கள் தன்னுடைய தொழிநுட்ப அறிவினை சுய மேம்பாட்டுக்கும்,சமூக மேம்பாட்டுக்கும் பயன்படுத்துவது நல்லது.