
இட்லி கடைன்னு (Idli Kadai) ஒரு படம் தயாரானதும் பலரும் இட்லி கடையில் உள்ள லாபத்தினை தேட ஆரம்பித்து விட்டார்கள். அது என்ன? இட்லி கடை என்றால் சாதாரணமா? அதில் எவ்வளவு பணம் புழங்குகிறது என்பது தெரியுமா?
இட்லிக் கடை ஒரு பில்லியன் டாலர் பிசினஸ் என்று தெரிந்தால் போதும் தெருவிற்கு தெரு இட்லி கடை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதால் தப்படிக்கு ஒரு இட்லிக் கடை போட்டால் யாருக்கும் வியாபாரம் ஆகாது.
இட்லி கடை தொழிலை எப்படி தொடங்குவது? (How to start an Idli Kadai Business?)
இட்லி கடைன்னு வந்துட்டா நிச்சயம் பார்வையுள்ள , அதிக நடமாட்டம் உள்ள தெருக்களில் உள்ள கட்டடங்களில் வைப்பது தான், வெற்றிக்கான எளியப் படியாக இருக்கும். வாகனங்கள் பார்க்கிங் பற்றி எல்லாம் ஆரம்ப காலக்கட்டத்தில் சிந்திக்க தேவை இல்லை. அதே நேரம், கடையின் சுற்றுப்புறம் நன்றாக இருக்க வேண்டும். கடை வாசலில் பெரிய குப்பை தொட்டியோ, எதிர்புறம் குப்பை மேடோ, வாசலில் திறந்த சாக்கடையோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இட்லி தொழில் தொடங்க , இட்லி தயாரிப்பு பற்றி முன் அனுபவம் தேவை. இட்லிக்கு மாவு அரைக்கும் பக்குவம் வேண்டும். அதில் கலக்கக் கூடிய பொருள்களின் அளவில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். சாம்பார் வைக்க, சட்னி அரைக்க நல்ல சமையல் நிபுணர் தேவை. இவற்றை விட முக்கியமாக முதலீட்டிற்கு பணம் தேவை.
இட்லி கடை தொழிலுக்கு தேவையான முதலீடு (investment needed for Idli Kadai Business)
இட்லி கடைக்கு குறைந்த பட்சம் 10X20 அடி அளவிலாவது இடம் தேவை. சிறிய கடை போதும் என்றாலும் 12 பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு இடம் தேவை. இந்த அளவில் உள்ள கடைகளுக்கு முன்பணமாக ₹5 லட்சம் வரையும் மாத வாடகை ₹7000 - ₹15000 வரையும் இருக்கும். இது சராசரி தான். ஊரின் மதிப்பிற்கு ஏற்ப கூடவும் குறையவும் கூடும். இட்லி கடை அமைக்க இடத்திற்கு மட்டும் தான் அதிக செலவு இருக்கும். டீக்கடை போல பைபாஸ் சாலையில் தனியாக போடுவது எல்லாம் இட்லி கடைக்கு செட் ஆகாது.
இட்லியை விரைவாக வேகவைக்க ஸ்டீம் இட்லி மேக்கிங் மெஷின் உள்ளது. ஒரு ஈடில் இதில் 72 இட்லிகள் வரை வேக வைக்கலாம். இட்லி பானையை விட இது விரைவானது. இதன் விலை தோராயமாக ₹20,000. பெரிய ஹாட் பாக்ஸ் 2 , வாளிகள் 10, இரண்டு மிக்சிகள், ஒரு கிரைண்டர், 20 கரண்டிகள், 4 மேஜைககள் 15 நாற்காலிகள், 50 தட்டுகள், 50 டம்ளர்கள், 50 கப்கள், 2 பெரிய கேரியர்கள் தேவைப்படும். இதற்கு ₹ 50,000 - ₹1 லட்சம் வரை ஆகலாம். மேஜை நாற்காலிகள் வடிவத்தை பொறுத்து விலை இருக்கும். குறைந்த பட்சம் ₹7 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிப்பது நலம். கையிருப்பில் ₹1 லட்சம் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் இட்லி கடை தொழிலை வளர்க்க குறிப்புகள் (Tips to grow your Idli Kadai Business)
இட்லி தொழிலைப் பொறுத்த வரையில் சுவையே பிரதானம். இட்லி வெள்ளையாகவும் மிருதுவாகவும் 'பூப்போல்' இருப்பது மிகவும் அவசியம். இட்லிக்கு வைக்கும் சாம்பார் ருசி அதிகமாக இருக்க வேண்டும், தனித்துவமாகவும் இருக்க வேண்டும். கத்திரிக்காய் கொஸ்து புதிய ருசியில் இருந்தால் நல்லது. வழக்கமாக 3 சட்னிகள் வைப்பது தான் பாரம்பரியம் என்றாலும் 4 வதாக புதினா சட்னியும், 5வதாக மிளகாய் பூண்டு சட்னியும் இருந்தால் வாடிக்கையாளர்கள் கூடுவார்கள்.
இட்லி மட்டும் இல்லாமல் இட்லி மஞ்சூரியன், சில்லி இட்லி, மினி இட்லி, சாம்பார் இட்லி, காலையில் மெது வடை போன்ற வகைகளை சேர்ப்பது கூடுதல் வியாபாரத்திற்கு உதவும். இட்லி கடை என்பது சைவ உணவு உண்ணுபவர்களுக்கு தான் முதன்மை தேர்வாக இருக்கும். அதனால், அசைவ உணவு குழம்புகளை முதலில் அங்கு சேர்க்க வேண்டாம். கடை வெற்றி பெற்றால் அசைவ குழம்புகளுடன் தனிக் கடை திறந்து கொள்ளுங்கள்.
இட்லி கடை தொழில் லாபகரமானதா? (Is Idli Kadai Business profitable?)
ஒரு தொழிலின் லாபம் என்பது எழுத்து பூர்வமானது அல்ல. அது செயல்முறை வடிவத்தில் கிடைப்பது. மேற்கூறிய நடைமுறைகளைப் பின்பற்றினால் இட்லி கடையை லாபமாக நடத்த முடியும். மேலும் உங்கள் சொந்த உழைப்பும் , மார்க்கெட்டிங் உத்திகளையும் பின்பற்றுங்கள். இட்லிக்கடையின் வெற்றி சுவையிலும் தரத்திலும் மட்டுமே உள்ளது. தமிழர்களின் தினசரி அடிப்படை உணவுப் பட்டியலில் இருப்பதால், உங்கள் கடையின் சுவைப் பிடித்து விட்டால், அவர் தினசரி வாடிக்கையாளர்களாக மாறி விடுவார்கள்.