
பொருளாதார உலகில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ள முதலீட்டுத் திட்டங்களில் முக்கியமானது மியூச்சுவல் ஃபண்ட். இன்றைய முதலீட்டாளர்கள் பலரும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அதிகமான முதிர்ச்சித் தொகை தான். அவ்வகையில் மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்தால் நல்ல இலாபம் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மொத்தமாக முதலீடு செய்ய முடியாத சிறு முதலீட்டாளர்களுக்காக கொண்டுவரப்பட்டது தான் எஸ்ஐபி. இதன் வருகைக்குப் பின்னர் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. முதலீட்டைப் பொறுத்தவரை திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டியது அவசியம். மியூச்சுவல் ஃபண்டில் எந்த மாதிரியான திட்டங்கள் உள்ளன; எதில் முதலீடு செய்தால் அதிக இலாபம் கிடைக்கும்; எப்படி முதலீடு செய்ய வேண்டும் போன்றவற்றை அறிந்து கொள்வது முக்கியம்.
மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்போலியோவில், எத்தனை வகையான ஃபண்டுகளை ஒருவரால் வைத்துக் கொள்ள முடியும் என்ற புரிதல் பலருக்கும் இல்லை. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களில் வகைக்கு ஒன்று என ஃபண்டுகளை வைத்துக் கொள்ளலாம். இருப்பினும் உங்களிடம் இருக்கும் பணத்தை பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.
60% முதல் 65% பணத்தை வேல்யூ ஃபண்ட், லார்ஜ்கேப் மற்றும் பிளெக்ஸிகேப் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். 25% முதல் 30% பணத்தை மிட்கேப் மற்றும் மிட்கேப் பிளஸ் ஸ்மால்கேப் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். 10% பணத்தைத் தங்கம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இவ்வாறு பிரித்து முதலீடு செய்வதன் மூலம் நிச்சயமாக அதிக இலாபத்தை ஈட்ட முடியும்.
பொருளாதாரச் சந்தையில் 1400-க்கும் மேற்பட்ட ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு வகைத் திட்டத்திலும், கடந்த பத்து ஆண்டுகளில் எந்த ஃபண்ட் நல்ல வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது என்பதைப் பார்த்து தான் தேர்வு செய்ய வேண்டும். முதலீடு செய்த உடனே பலனை எதிர்பார்ப்பதும் தவறு. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைத் தொடர்ந்த பிறகு, கூடுதல் பலன் கிடைக்க 5 முதல் 7 ஆண்டுகள் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். அதற்கேற்ற மனநிலையோடு முதலீடு செய்யத் திட்டமிடுங்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை என்றால், பொருளாதார ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறலாம். இந்த முதலீடு, அஞ்சல் அலுவலகத் திட்டம் போல் பாதுகாப்பானதாக இருக்குமா என்ற சந்தேகமும் சிலருக்கு உண்டு. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து தான் அமைகின்றன. ஆகையால் தான் பொறுமையாக காத்திருக்க வேண்டியது அவசியம்.
“பொறுத்தார் பூமி ஆள்வார்” என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைக் கூறலாம். இன்றைய சேமிப்பு நாளைய நம் பாதுகாப்பிற்கு உதவும் என்பதால், முதலீட்டை விரைவாகத் தொடங்குவது தான் புத்திசாலித்தனம்.