புதிய முதலீட்டாளர்களே! மியூச்சுவல் ஃபண்ட்களில் இதையும் கொஞ்சம் கவனியுங்கள்!

Mutual Fund Investment
Mutual Fund InvestmentImg Credit: Corporatefinanceinstitute

மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய விருப்பம் கொள்ளும் புதிய முதலீட்டாளர்கள், முதலீட்டு நோக்கம் மற்றும் நிதி இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்த விரிவான தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

நாளைய தேவைக்கு இன்றைய சேமிப்பு மிகவும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் பலரும் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில், சிலர் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். புதியதாக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் மட்டும் 19% உயர்ந்துள்ளது. "புதிய முதலீட்டாளர்களின் வருகையை வரவேற்கிறோம். இருப்பினும் இவர்களின் அணுகுமுறையிலும், முதலீடு யுக்தியிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும்" என பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

முதலீட்டு நோக்கம்:

புதியதாக முதலீடு செய்பவர்களில் பலரும் சமபங்கு தொடர்பாக அதிக எதிர்பார்ப்புடனும், மகிழ்ச்சியுடனும் வருகிறார்கள். பங்குச்சந்தையில் உற்சாகம் கொள்வதில் தவறில்லை என்றாலும், அதிக எதிர்பார்ப்புடன் முதலீடு செய்வது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். கடந்த காலத்தின் செயல்பாடுகளால் மியூச்சுவல் ஃபண்ட்களில் ஈர்க்கப்படும் புதிய முதலீட்டாளர்கள், குறைந்த காலத்திலேயே அதிக இலாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் முதலீட்டை அணுகுகின்றனர். இதிலிருக்கும் சிக்கல் என்னவென்றால், அவர்களின் முதலீடு எதிர்பார்த்த பலனை வழங்காவிட்டால், சமபங்கு முதலீடு அவர்களுக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விடும். இதனால், நீண்ட கால பலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆகையால், அண்மைகால செயல்பாடுகளின் அடிப்படையில் நிதிகளை தேர்வு செய்து முதலீடு செய்தால், அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிதிகளில் பலரும் முதலீடு செய்வதை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டலாம். இவை அண்மை காலத்தில் அதிகளவு பலன் அளித்து இருந்தாலும், இந்தப் போக்கில் ஒருவேளை மாற்றம் உண்டானால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். மேலும் இதில் கிடைக்கும் பலன்கள் சுழற்சி தன்மையைக் கொண்டவை எனவும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, புதிய முதலீட்டாளர்கள் முதலீட்டின் தன்மையை உணர்ந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
நிதி மேலாண்மையை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்!
Mutual Fund Investment

நிதி இலக்குகள்:

புதிய முதலீட்டாளர்கள் தங்களின் இடர் தன்மையை அறிந்து கொள்ளாமல் முதலீடு செய்வதே ஏமாற்றத்திற்கு முக்கிய காரணம். குறைவான இடர், மிதமான இடர் மற்றும் தீவிர இடர் என நிதிகள் 3 வகையான இடர் தன்மையைக் கொண்டுள்ளது. இவர்கள் தங்களின் இடர் தன்மைக்கு ஏற்ப நிதி முதலீடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். அதே போல தங்களின் நிதி இலக்கிலும் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வு கொண்ட முதலீட்டுச் சந்தையில் நீண்ட கால அணுகுமுறை தான் சிறந்தது என்பதை உணர்ந்து, இதனைப் பின்பற்ற வேண்டும்.

முதலீட்டிற்கான காலத்தை இலக்குகளின் அடிப்படையில் முடிவெடுத்து செயல்பட வேண்டும். அதுமட்டுமின்றி, சமபங்கு நிதிகளில் மட்டுமே முதலீடு செய்யாமல், கடன்சார் நிதிகள் மற்றும் நிரந்தர வருமானம் அளிக்கும் முதலீடுகளிலும் முதலீடு செய்ய வேண்டும். இதற்கேற்ப முதலீடு உத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

புதிய முதலீட்டாளர்களை வழிநடத்த இத்துறை வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உதவியை நாடுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com