
மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கூட்டம் அல்லது அலுவலக மீட்டிங் அல்லது மாநாட்டு அறையை விட்டு வெளியேறுவதை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணம் இருந்தாலோ அல்லது மிகவும் அவசியமானதாகவோ அல்லது முன் அனுமதி இருந்தாலோ தவிர, பிறர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எழுந்து செல்வது நாகரீகமான செயலாகாது. எனினும் சில சூழ்நிலைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக உள்ளன. அவற்றை இங்கே காணலாம்.
1) அவசியம் காரணமாக:
மிகவும் அவசியமான மீட்டிங் ஒன்றில் இருக்கிறீர்கள் என்றாலும், வேறு ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்கனவே திட்டமிட்டிருந்தால் கூட்ட ஏற்பாட்டாளரிடம் தெரிவித்துவிட்டு, தேவைப்பட்டால் சீக்கிரம் வெளியேற அனுமதி கேட்பது சரியான முறையாகும். கூட்டத்தில் இடைவேளை எடுக்கும் சமயத்திலோ, கேள்வி பதில் நேரத்திலோ அல்லது அடுத்த கேள்விக்காக காத்திருக்கும் பொழுதோ மற்றவர்களுக்கு இடைஞ்சல் தராமல் வெளியேறுவது அவசியம்.
2) அவசரம் காரணமாக:
அவசரநிலை போன்ற உடனடி கவனம் தேவைப்படும் நேரத்தில் பாதி கூட்டம் நடந்து கொண்டிருந்தாலும் சுருக்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டு வெளியேறலாம்.
இருப்பினும் அதை விவேகத்துடன் செய்து நடைபெறும் கூட்டத்தின் ஓட்டத்திற்கு இடையூறு விளைவிக்காமல் செல்வது நல்லது. கூட்டத்தில் கவனம் செல்லாமல் அனைவரின் கவனமும் உங்கள் மீது விழும் படி நடந்து கொள்வது சரியான முறையாகாது.
3) அதிக இடையூறு இல்லாமல்:
அவசரம் அல்லது அவசியம் காரணமாக வெளியேற வேண்டியிருந்தால் கூட்டத்தில் பெரும் இடையூறுகளை விளைவிக்காமல் வெளியேற முயற்சிப்பது சிறந்தது. கூட்டத்தின் இடையில் ஏற்படும் இடைவெளிக்காக காத்திருக்கலாம் அல்லது உடனடியாக வெளியேற வேண்டி இருந்தால் பணிவுடன் கையை உயர்த்தி விட்டு எழுந்து காரணத்தை சுருக்கமாக சொல்லி விட்டு வெளியேறலாம்.
4) ஒதுக்கப்பட்ட பணி:
கூட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் பணி ஒதுக்கப்பட்டு இருந்தால் கூட்ட ஏற்பாட்டாளரிடம் பணிவுடன் நீங்கள் அவசரமாக வெளியேற வேண்டிய காரணத்தைக் கூறி உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே அதாவது நீங்கள் வெளியேறுவதற்கு முன்பாகவே முடித்துவிட்டு வெளியேறலாம். ஆனால் இதனை குழுவிடம் முன்பே தெரிவிக்க மறக்காதீர்கள்.
5) முக்கிய பங்கேற்பாளராக இல்லையெனில்:
நடைபெறும் கூட்டத்தில் நீங்கள் ஒரு முக்கிய பங்கேற்பாளராக இல்லாத பட்சத்தில் மீதமுள்ள விவாதம் அல்லது முடிவெடுப்பதற்கு உங்களுடைய இருப்பு அவசியம் இல்லையெனில் தாராளமாக அனுமதி பெற்று வெளியேறலாம். இருந்தாலும் சூழ்நிலையைப் பொறுத்து மற்றவர்களின் கவனம் நம் மீது விழுந்து கூட்டத்தின் இயல்பை பாதிக்காத விதத்தில் வெளியேறுவது நல்லது.
6) கடைபிடிக்க வேண்டியது:
எது எப்படியிருந்தாலும் நாம் கூட்டத்திற்கு நடுவில் வெளியேறும் பொழுது அங்குள்ள பங்கேற்பாளர்களுக்கோ, கூட்டத்தின் நோக்கத்திற்கோ இடையூறு வராமல் அழகாக அதே சமயம் விவேகத்துடன் நடந்து கொள்வது கூட்டம் சுமுகமாக நடைபெற உதவும். கூட்டம் முடிவதற்குள் வெளியேறும் பொழுது கண்ணியத்தையும், மரியாதையையும் கடைப்பிடிப்பது அவசியம். தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தாமல் பிறரின் கவனத்தை ஈர்க்காமல் இருப்பது மிகவும் நல்லது.