நாம் அனைவரும் நம்முடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தானே தினம்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஒரு வேலையை செய்து நமக்கு தேவையானவற்றை வாங்கிக் கொண்டு, சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைத்துக் கொண்டிருப்போம். சேமிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும். சேமித்து வைத்திருக்கும் பணமானது அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது அவருக்கு உதவியாக இருக்கும். மேலும் அவர் இறந்த பிறகு அவரின் குடும்பத்திற்கு நிதி உதவியாக இருக்கும்.
அந்த வகையில் நம்முடைய வாழ்க்கை நிலையானது என நம்மால் கூற இயலாது. ஆச்சரியங்கள் மற்றும் அதிசயங்கள் உடைய நம்முடைய வாழ்க்கையில், குறிப்பிட்டு சொல்லும்படியாக நம்மால் எதையும் உறுதியாக கூற இயலாது.
இன்று சேமிக்கும் ஒரு சிறிய சேமிப்பு தான் நாளை நம் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும். அந்த வகையில் வருடம் ஒருமுறை மட்டும் முதலீடு செய்தால் ஆபத்தான காலங்களில் நமக்கு நிதி சார்ந்த உதவிகளை நாம் பெற முடியும் அல்லது நம்முடைய குடும்பம் பெறலாம். வருடம் ரூ. 399 மட்டும் செலுத்தி விபத்து காப்பீடு எவ்வாறு பெறலாம் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
ரூ.399 இல் விபத்து காப்பீடு:
டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து இந்திய தபால் துறை செயல்படுத்தி வரும் திட்டம் தான் இந்த விபத்து காப்பீடு திட்டம்.
இந்தத் திட்டத்தின் மூலம் சாமானிய மக்களும் விபத்து காப்பீட்டை பெறலாம் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திட்டமாகும். ஆனால் இதனைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.
இந்தத் திட்டத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் ரூ.399 செலுத்தி ரூ.10 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற இயலும்.
இந்த விபத்துக் காப்பீட்டில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.
மேலும் இந்த காப்பீட்டில் சேர்வதற்கு உங்கள் வீட்டின் அருகில் உள்ள தபால் நிலையங்கள் அல்லது தபால்காரர் மூலம் சிறிது நேரத்தில் உங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள முடியும்.
விபத்து காப்பீட்டின் பயன்பாடுகள்:
இந்த விபத்து காப்பீட்டில் வருடத்திற்கு ஒருமுறை ரூ.399 செலுத்த வேண்டும். அந்த ஒரு வருடத்தில் எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தால் அதற்கான காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் வழங்கப்படும். இந்த பிரீமியம் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் செல்லுபடி ஆகும். அடுத்த ஆண்டு மீண்டும் ரூ.399 செலுத்தி ரினிவல் செய்துக்கொள்ளலாம்.
இந்த விபத்து காப்பீட்டை வாங்கிய பிறகு எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்து அதன் மூலம் ஒருவர் மரணித்தால், அவரின் நாமினிக்கு ரூ. 10லட்சம் வழங்கப்படும்.
விபத்து ஏற்பட்டு நிரந்தரமாக கை, கால்களை இழந்தால், ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தால், உடல் சிதைவுற்று, பக்கவாதம் நோய் ஏற்பட்டால் ரூ. 10 லட்சம் பெறலாம்.
விபத்து காரணமாக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தால் உள்நோயாளி மருத்துச் செலவாக (IPD) ரூ.60 ஆயிரம் காப்பீடு தொகையாக பெறலாம்.
விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் வீட்டிற்கு சென்று புறநோயாளியாக (OPD) மருத்துவம் பார்த்தால் ரூ. 30,000 காப்பீடு தொகையாக பெறலாம்.
விபத்தினால் ஒருவர் தினம்தோறும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தால் ஒரு நாளைக்கு ரூ.1000 என்று மொத்தம் 9 நாட்களுக்கு காப்பீடு தொகை வழங்கப்படும்.
பாலிசி வைத்திருப்பவர் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவரை வந்து அவர்களின் உறவினர்கள் சந்திப்பதற்கு பயணச் செலவாக ரூ. 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
பாலிசி வைத்திருப்பவர் விபத்தினால் இறந்தாலோ, உடல் ஊனமுற்றாலோ, பக்கவாதம் வந்தாலோ அவரின் குழந்தைகளுக்கு ரூ.1லட்சம் கல்விச் செலவாக வழங்கப்படுகிறது.
பாலிசி வைத்திருப்பவர் விபத்து காரணமாக இறந்த பிறகு அவருக்கு ரூ.10 லட்சம் கொடுக்கப்படுகிறது. அத்துடன் இறுதிச் சடங்கு நடத்துவதற்கு ரூ. 5,000 வழங்கப்படுகிறது.
குறிப்பு: விபத்தினால் மட்டும் ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்த காப்பீட்டு தொகை வழங்கப்படும். இயற்கையாக நடக்கும் பாதிப்புகளுக்கு வழங்கப்படமாட்டாது.