
தனிமனித நிதி சார்ந்த ஒரு பெரிய தத்துவம் நாம் தினந்தோறும் அருந்தும் காபியினைக் கொண்டு விளக்கப்படுகிறது. அதனை பொருளாதார வல்லுநர்கள் காபி விளைவு என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில், Latte Effect லாட்டே விளைவு என்று அழைக்கப்படுகிறது. இதனை முதலில் அலசி, ஆராய்ந்தவர் அமெரிக்காவின் தனி மனித நிதி வல்லுநரான டேவிட் பேக் (David Bach). The Latte Factor என்ற பெயரில் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார் டேவிட் பேக் மற்றும் அவரின் நண்பரான ஜான் டேவிட் மன்.
டேவிட் பாக், தன்னுடைய தனிமனித நிதி சார்ந்த வகுப்பில், கலந்துக்கொண்ட வாசகர்களிடம் வெளியில் தினந்தோறும் காபி அருந்தும் ஒருவரிடம், அவர் தினமும் இரு முறை வெளியில் காபிஅருந்துவதால் எவ்வளவு செலவாகிறது என்று கணக்கிட்டு, அந்த சிறிய செலவானது, எவ்வாறு பன்மடங்கு ஆகிறது என்று அலசி ஆராய்ந்தார். வெளியில் காபி அருந்துவதால் ஏற்படும் தனி மனித நிதி விளைவிற்கு காபி விளைவு (Latte Effect ) என்று பெயரிட்டார்.
உதாரண கணக்கு ஜூலியும் காபியும்:
உதாரணமாக, 2019ம் ஆண்டு, 20 வயது நிரம்பிய பெண் ஜூலி, இரு வேளை தினமும் ஸ்டார்பக்ஸ் காபிகடையில், காபிகுடிக்கிறார் என்று கணக்கில் கொண்டால்,
ஒரு நாள் காபிசெலவு = $ 5 x 2 = $10
ஒரு மாத காபிசெலவு = 30 x $10 = $300
ஒரு வருடத்திற்கான காபிசெலவு = 12 x $300 = $3600
இந்தச் செலவானது, வருடா வருடம் பணவீக்கத்தினால், கூடும். அமெரிக்காவில் பணவீக்கம் 3% என்று கணக்கிடப்படுகிறது. இந்தச் செலவானது வருடா வருடம் கூடிக் கொண்டே சென்று, 40 வருடம் கழித்து, அதே காபிக்கு அவர் வருடத்திற்கு கிட்டத்தட்ட $ 11,743 செலவழிக்க நேரிடும்.பின்வரும் அட்டவணை, வருடா வருடம் எவ்வாறு காபிசெலவு கூடுகிறது என்று விவரிக்கிறது. 40 வருடத்தில் மொத்தமாக, ஜூலி காபிக்காக செலவிட்ட பணம் $2,83,187 (கிட்டத்தட்ட 2 லட்சத்து 83 ஆயிரத்து 187 டாலர்கள் காபிக்கு மட்டும்).
இதற்குப் பதிலாக, ஜூலி வீட்டிலேயை காபி குடித்து, $10 பணத்தினை மிச்சம் பிடித்து, மாதா மாதம் முதலீடு செய்தால்(மாதம் $300). அந்த முதலீட்டினை வருடா வருடம் பணவீக்கத்திற்கு ஏதுவாக 3% அதிகரித்திருந்தால், அந்தப் பணம் என்ன ஆகிறது என்று பார்ப்போம். அந்தப் பணம் வருடா வருடம் 12% வளருவதாக கணக்கில் கொள்வோம்.
வீட்டிலேயே தயாரித்த காபிஅருந்துவதன் மூலம் , கிட்டத்தட்ட, 3 மில்லியன் டாலர்கள் (36 லட்சம் அமெரிக்க டாலர்கள்) அவருடைய 60 வயதில் ஜுலிக்குக் கிடைக்கும். எனவே, ஒரு சிறிய செலவான காபிஅருந்துவதில் அவர் பணத்தினை மிச்சம் பிடித்து முதலீடு செய்வது, அவருடைய ஓய்வு காலத்தினை யார் கையையும் ஏந்தாமல், நிதி சுதந்திரத்தினை அடைய உதவுகிறது. இந்த ஒரு பெரிய தத்துவத்தினைதான் காபி விளைவு விவரிக்கிறது.
காபி விளைவு காபிக்கு மட்டுமல்ல:
காபி விளைவு என்பது, எந்த ஒரு சிறிய செலவும், காலப்போக்கில், கூடிக் கொண்டே சென்று, பெரிய செலவாக உருமாறும். அந்த சிறிய செலவினை தவிர்த்து, பணத்தினை மிச்சம் பிடித்து, முதலீடு செய்வதன் மூலம், கூட்டு வட்டி தத்துவத்தின் படி, அந்தப் பணம் பெரிய பணமாக வளர்ந்து எதிர்காலத்திற்கு உதவும். ஒருவருடைய காபி விளைவு ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சஞ்சிகை வாங்குவது, குளிர் பானங்கள் வாங்குவது, அடிக்கடி திரைப்படம் செல்வது , அடிக்கடி வெளியில் உணவு உண்பது மட்டுமன்றி சிகரெட், மது போன்ற தீய பழக்கங்கள் என்று எதுவாகவும் இருக்கலாம். தீய பழக்கங்கள் பணச் செலவு மட்டுமன்றி, உடல்நலத்தையும் கெடுக்கின்றன.நம் அன்றாட வாழ்வில் ஏற்படக் கூடிய இத்தகைய காபி விளைவுகளைக் கண்டு பிடித்து, அதனை மாற்றியமைத்து, பணத்தை சேமித்து, முதலீடு செய்து, நீண்ட காலத்தில் பணக்காரனாகப் பார்க்க வேண்டும்.
உங்களுடைய காபி விளைவு என்ன ? சிந்தித்து சேமியுங்கள் மக்களே!