
இன்றைய பொருளாதார உலகில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன. இதில் தங்க முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட், பிக்சட் டெபாசிட் போன்ற முதலீடுகளை நோக்கியே முதலீட்டாளர்களின் கவனம் உள்ளது. பலரும் வெள்ளியில் முதலீடு செய்வதைப் பற்றி சிந்திப்பது கூட இல்லை. இந்நிலையில் வெள்ளியில் முதலீடு செய்வதால் இலாபம் கிடைக்குமா மற்றும் எப்படி முதலீடு செய்வது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
வெள்ளியில் முதலீடு செய்வதற்கு முன், அதனைப் பொருளாக வாங்க வேண்டுமா அல்லது வெள்ளி இ.டி.எப். ஆக வாங்க வேண்டுமா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். வெள்ளி முதலீட்டைப் பொறுத்த வரை, தேவை இருந்தால் மட்டும் வெள்ளிப் பொருள்களாக வாங்கலாம். தேவை இல்லாத பட்சத்தில் வெள்ளி முதலீட்டிற்கு மிகவும் சிறந்தது வெள்ளி இ.டி.எப் தான். கடந்த ஓராண்டில் மட்டும் வெள்ளி இ.டி.எப்.கள் 34.49% வருவாயை ஈட்டித் தந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிப் பொருள்களை தற்போது வாங்கி வைத்து விட்டு, பிற்காலத்தில் பணமாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் சிலருக்கு உண்டு. வெள்ளியைப் பொருளாக வாங்கும் போது ஜிஎஸ்டி வரி உள்பட கூடுதல் செலவுகள் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பொருளாதாரச் சந்தையில் வெள்ளியின் விலை அதிகரிக்க 2 முக்கிய காரணங்கள் உள்ளன. அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைவதாலும், எலக்ட்ரானிக் உபகரணங்கள் தயாரிப்பில் வெள்ளியின் தேவை அதிகம் என்பதால், உலக நாடுகள் பலவும் வெள்ளியை அதிகளவில் வாங்குவதாலும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படியான சூழலில் வெள்ளி இ.டி.எப்.களில் முதலீடு செய்வது, வருங்காலத்தில் நல்ல இலாபத்தை அளிக்கும்.
வெள்ளி பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFs) ஆனது, பொருளாதாரச் சந்தைக் கட்டுப்பாட்டாளராக இருக்கும் செபி அமைப்பால் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதைப் போலவே, வெள்ளியின் விலையும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு வெள்ளி இ.டி.எப். கொண்டு வரப்பட்டது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், வெள்ளி முதலீட்டுக்கு சரியான வாய்ப்பாக இது அமைந்துள்ளது.
நிப்பான் இந்தியா சில்வர் இடிஎப், ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் சில்வர் இடிஎப், ஆதித்யா பிர்லா சன் லைஃப் சில்வர் இடிஎப், எச்டிஎப்சி சில்வர் இடிஎப், ஆக்சிஜன் சில்வர் இடிஎப், கோடக் சில்வர் இடிஎப், டிஎஸ்பி சில்வர் இடிஎப் மற்றும் யுடிஐ சில்வர் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் போன்ற பல வெள்ளி இ.டி.எப்.கள் சந்தையில் கிடைக்கின்றன. இதுதவிர்த்து வெள்ளி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு வாய்ப்புகளும் சந்தையில் கிடைக்கின்றன.
வெள்ளியின் விலை கணிசமாக உயர்ந்து வருவதால் வருங்காலத்தில் வெள்ளி இ.டி.எப் மற்றும் வெள்ளி மியூச்சுவல் ஃபண்ட்களின் மதிப்பு அதிகமாக இருக்கும். உலகளவில் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வெள்ளி முதலீட்டில் முன்னிலையில் இருக்கின்றன. இதற்கடுத்து மூன்றாவது இடத்தில் இந்தியா இருப்பது வெள்ளி முதலீட்டில் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை எடுத்துரைக்கிறது.