கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி கணக்கு தாக்கல் செய்தார். இந்த புதியநடைமுறையில் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் எந்தவித வரியும் செலுத்த வேண்டிய தேவையில்லை என்ற ஒரு புதிய அறிவிப்பையும் வெளியிட்டார்.
எனவே ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் நபர்களின் கைகளில் கணிசமான தொகை இருக்கும். இவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த கட்டமாக புதிதாக வீடு வாங்க வேண்டும் என்ற திட்டத்தை நோக்கி செல்வார்கள். இதனால் இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்கள் புதிதாக வீடு வாங்கும் போக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை என்று அறிவிப்பின் மூலம் பலன் பெறக்கூடிய நபர்கள் உடனடியாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் இறங்கி விடக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
முதல் கட்டமாக இவர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வரி சேமிப்பு தொகையில் 50 சதவீதம் தொகையை எதிர்காலத்தில் சொத்து வாங்குவதற்கான டவுன் பேமெண்ட் செலுத்துவதற்காக ஒரு நிதியை உருவாக்கி சேமித்து வர வேண்டும். மீதமுள்ள 30 சதவீதம் தொகையை அவசரகால நிதிக்காக சேமித்து வர வேண்டும் என்கின்றனர். 20 சதவீத தொகையை லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் பொருளாதார நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
ஒரு நபரின் மாத வருமானத்தில் 30 முதல் 35 சதவீதம் வரையிலான தொகைதான் அவர் செலுத்தக்கூடிய மொத்த ஈஎம்ஐ தொகையாக இருக்க வேண்டும் என்பதுதான் சர்வதேச அளவில் பின்பற்றப்படும் ஒரு விதி. திருமணமாகாத இளைஞராக இருந்தால் அவர்கள் தங்களுடைய நிகர வருமானத்தில் 40 முதல் 45 சதவீதம் வரையிலான தொகையை மாதாந்திர ஈஎம்ஐ-க்காக ஒதுக்கீடு செய்யலாம்..
ஆனால் அதற்கு முன்னதாக அவர்கள் ஆறு மாத காலத்திற்கான அவசர கால நிதி மற்றும் மருத்துவ காப்பீடு உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். திருமணமான நபர் வீட்டில், அவர் ஒருவர்தான் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டுகிறார் என்றால் அவருடைய வருமானத்தில் 30 சதவீதம் தொகையே ஈஎம்ஐ-க்காக ஒதுக்கப்பட வேண்டும். ஒருவேளை மாற்று வருமான ஆதாரங்கள் இருக்கிறது என்றால் தங்களுடைய வருமானத்தில் 50 சதவீதம் தொகையை கூட ஈஎம்ஐ-ஆக முடிவு செய்து வீடு வாங்கலாம்.
குறிப்பிட்ட அந்த பகுதியில்தான் அடுத்த 12 ஆண்டு காலத்திற்கு வசிக்க போகிறீர்கள் என்றால் உங்களுடைய மாத வருமானத்தில் 40 சதவீத தொகைக்குள் தான் இஎம்ஐ வருகிறது என்றால் வீடு வாங்கலாம். அதேவேளையில் அடுத்த ஆறு மாத காலத்திற்கான அவசர கால நிதி உங்களிடம் இருக்க வேண்டும் என்கின்றனர்.
குறிப்பாக தம்பதிகளாக இருந்து இருவருமே கணிசமான வருமானம் ஈட்டுகிறீர்கள் எனும் போது கண்டிப்பாக வருமானத்தில் 40 சதவீத தொகையை ஈஎம்ஐ-ஆக செலுத்த முடியும் என்கின்றனர். மேலும் டவுண் பேமென்ட்டை எவ்வளவு உருவாக்க முடியுமோ அவ்வளவு உருவாக்கினால் கடன் தொகையும் அதற்கான வட்டி தொகையும் குறையும் எனவும் அறிவுரை வழங்குகின்றனர்.