பங்குச் சந்தையில் நுழைய ஆர்வமா? எப்படி தொடங்க வேண்டும்? யாரை அணுக வேண்டும்? அறிவோமா...
பங்குச்சந்தையில் அதிக இலாபம் கிடைக்கும் என பலரும் சொல்கிறார்கள். இதுபற்றி எதுவும் தெரியாத ஒருவர் பங்குச்சந்தையில் முதலீட்டைத் தொடங்க நினைத்தால், எப்படி தொடங்க வேண்டும்? யாரை அணுக வேண்டும்? எந்த பங்கில் முதலீடு செய்வது இலாபகரமாக இருக்கும்?
பங்குச்சந்தையின் நேரடியாக ஈடுபடுவது அபாயகரமானது. பங்குகளைத் தேர்ந்தெடுப்பதற்கு அதிக மெனக்கடல் வேண்டும். ஒவ்வொரு பங்கிற்குமே வாரந்தோறும் சில மணி நேரங்களை ஒதுக்க வேண்டும். பங்குச்சந்தையைப் பற்றி அறியாத நபர்கள் பங்குச் சந்தையில் நேரடியாக ஈடுபடாமல் பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதிகள் வாயிலாக ஈடுபடுவது சிறப்பானது. பரஸ்பர நிதிகளில் பரஸ்பர நிதி மேலாளர் மற்றும் அவரது குழுவும் சேர்ந்து பரஸ்பர நிதிகளில் உள்ள பங்குகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இது எவ்வாறு எனில் நன்றாக சிற்றுந்து ஓட்டத் தெரிந்த ஒரு நபர் சிற்றுந்து ஓட்ட அந்த சிற்றுந்தில் பயணம் செய்வதைப் போன்றது. பரஸ்பர நிதிகளில், ஈடுபாடு உள்ள ஈடுபாடு அற்ற என்று இரண்டு வகைகள் உள்ளன.
ஈடுபாடு உள்ள பரஸ்பர நிதிகளில் ("Active Mutual Fund") பரஸ்பர நிதி மேலாளர் பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார். ஈடுபாடு அற்ற பரஸ்பர நிதிகளில் ("Unengaged Mutual Funds") ஏற்கனவே வரையறுக்கப்பட்ட குறியீட்டின்படி பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. இங்கு பரஸ்பர நிதி மேலாளர் பங்குகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. பங்குச்சந்தை பற்றி அறியாதவர்களுக்கு முதலில் ஈடுபாடு அற்ற பரஸ்பர நிதி முதலீடான பங்கு சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகள் சிறப்பானவை. பங்குச்சந்தையை பற்றி ஓரளவு அறிந்த பின்னர் ஈடுபாடு உள்ள பரஸ்பர நிதிகளில் இறங்கலாம். இன்னும் அதிகமாக கைவல்யம் பெற்ற பிறகு நேரடி பங்குகளில் இறங்கலாம்.
வீண் செலவுகள் ஏதுமில்லை. இருப்பினும் வரவை விட செலவு அதிகமாக இருக்கிறது. இப்படியான சூழலில் தான் முதலீட்டைத் தொடங்க பல இளைஞர்கள் முன்வருவதில்லை. பட்ஜெட் போட்டு செலவுகளைக் கட்டுப்படுத்த ஒருவர் நினைத்தாலும், குடும்பத்தில் இருப்பவர்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு செலவு செய்யாத பட்சத்தில் முதலீட்டை எப்படித் தொடங்குவது?
எப்பொழுதுமே முதலீட்டிற்கு போகத்தான் செலவு என்று வைத்துக் கொள்ள வேண்டும். மாதா மாதம் பட்ஜெட் போட்டு முதலில் முதலீட்டிற்கு ஒதுக்கி பின்னர் செலவுகளுக்குப் பணத்தை ஒதுக்க வேண்டும். இதனைத் தானியங்கி முறையில் செய்து விட வேண்டும். இப்போது பணமானது மாதம் மாதம் முதலீட்டிற்கு சென்று விடுகிறது. மீதமுள்ள பணத்தில் தான் குடும்பம் அந்த மாதத்தை கடக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குடும்பத்திற்கும் செலவுகளைப் பட்ஜெட்டிற்குள் வைத்துக் கொள்வதன் முக்கியத்துவம் தெரியவரும்.
மாதந்தோறும் ரூ.40,000 சம்பாதிக்கும் ஒருவருக்கு ரூ.35,000 வரை செலவு இருக்கிறது எனில், மீதமிருக்கும் ரூ.5,000-ஐ எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்?
எந்த ஒரு முதலீடும் குறிக்கோளைச் சார்ந்து அமைய வேண்டும். அவரது குறிக்கோள் குறுகிய காலம் (5 வருடங்களுக்கு குறைவாக) என்றால் அதற்கு வங்கியின் தொடர் வைப்பு நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நடுத்தர காலம் (5 முதல் 10 வருடங்கள் வரை) என்றால் அல்ட்ரா ஷார்ட் டெர்ம் போன்ற கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீண்ட காலம் (> 10 வருடங்கள்) என்றால் பங்குச்சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, அவரது குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய பணிக்கால செட்டில்மென்ட்டாக பெறும் தொகையை (தோராயமாக 50 லட்சம்) எதிலெல்லாம் முதலீடு செய்தால் அவர்களுக்கு மாத மாதம் நல்ல வட்டி வரும்? பாதுகாப்பான முதலீட்டு வழி முறைகளை பற்றி சொல்லவும்.
ஓய்வு காலத்தில் ஓய்வு பெற்றவர் சம்பாதிப்பது இல்லை. எனவே ஓய்வு காலத்தில் பெற்ற ஓய்வுகால தீர்வுத் தொகையை இத்தகைய மாதாந்திர வருமானத் திட்டங்களில் முதலீடு செய்தால், காலம் செல்ல செல்ல பணம் வீக்கத்தின் காரணமாக இத்தகைய மாதாந்திர பணத்தின் அளவு போதாமல் போய்விடும். இந்தியாவில் பணவீக்கமானது 6% என கொள்ளலாம்.
எனவே, இந்த 50 இலட்ச ரூபாய் பணத்தை மூன்று வாளிகளாகப் பிரிக்க வேண்டும். முதல் வாளி (5 வருடங்களுக்கான பணம்), இரண்டாவது வாளி (5 முதல் 10 வருடங்களில் பணத்தைப் பெருக்க), மூன்றாவது வாளி (10 வருடங்கள் தாண்டி பணத்தைப் பெருக்க) என பணத்தைப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு மாதம் தேவைப்படும் தொகை 25 ஆயிரம் எனில், ஒரு வருடத்திற்கு 3 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஒரு வருடத்திற்கான செலவை எடுத்து வைத்துக் கொண்டு, முதல் வாளியில், அடுத்த 5 வருடங்களுக்கு, 5 வைப்பு நிதிகளை 3 இலட்ச ரூபாயில் தொடங்க வேண்டும்.
முதல் வைப்பு நிதி, ஒரு வருடத்திற்கு, இரண்டாவது வைப்பு நிதி இரண்டு வருடகளுக்கு என முதலீடு செய்யப்பட வேண்டும். அதன் மூலம், ஒவ்வொரு வருடமும் பணவீக்கத்தினை நம்மால் சமாளிக்க முடியும். இப்போது 18 இலட்ச ரூபாய் எடுத்தாகி விட்டது.
இரண்டாவது வாளியில், மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்றவற்றில் முதலீடு செய்து, அவற்றில் வரும் வட்டியை தொடர் வைப்பு நிதியில் மறுமுதலீடு செய்ய வேண்டும். 17 இலட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்யலாம்.
மூன்றாவது வாளியில் மீதமுள்ள, 15 இலட்சம் ரூபாயினை பங்குச்சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், நமது பணத்தை பணவீக்கத்தினை தாண்டி வளர வைக்க முடியும். 5 வருடங்கள் தாண்டிய பிறகு, இரண்டாவது வாளி, முதல் வாளிக்கு பணத்தைக் கொடுத்து உதவும். மூன்றாவது வாளி, இரண்டாவது வாளிக்கு பணத்தைக் கொடுத்து உதவும். மீதமுள்ள பணத்தில் மூன்றாவது வாளியில் முதலீடுகளைத் தொடர வேண்டும். இன்னும் வயது கூடும் போது, வருடாந்திரம் பணம் கொடுக்கும் ஓய்வூதிய திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், தொடர்ந்து வருவாய் பெறலாம்.