
"இல்லானை இல்லாளும் வேண்டாள்" என்று நல்வழியில் ஔவையார் கூறுகிறார். அதாவது, பணம் இல்லாதவனை இன்னொரு பணம் இல்லாத பெண்ணும் விரும்ப மாட்டாள் என்பதுதான் இதன் பொருள்.
பொதுவாகவே, பணம் இருக்கும் இடத்தில் தான் இன்னும் அதிகமாக பணம் சேரும் என்பார்கள். பொருளாதார ரீதியாக மேல் தட்டில் உள்ளவர்கள் தான் மேலே ஏறிக் கொண்டு செல்கிறார்கள். இது ஏதோ இந்தியாவில் உள்ள நடைமுறை அல்ல. உலக நாடுகள் அனைத்திலும் இப்படி தான் உள்ளது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். இதற்கு காரணம் என்ன?
உலகம் வேகமாக பொருளாதார ரீதியில் வளர்ந்து வருகிறது. இங்கு ஒவ்வொருவரும் புலிப் பாய்ச்சலில் வேகமாக முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும் பொருட்களின் மதிப்பு கூடிக் கொண்டே இருக்கிறது. தங்கத்தின் விலை எப்போதும் உயர்ந்து கொண்டே இருக்கிறது , இப்போது இன்னும் வேகமாக உயர்கிறது. இது போலவே உலகில் பொருளாதார ரீதியாக முதலீடு செய்யப்படும் பொருட்களின் விலை தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது. இதனால் முதலீடு செய்பவர்களின் பொருளாதாரம் மேலும் உயர்ந்து வருகிறது.
பணக்காரர்கள் தங்களது பணத்தினை தங்கம், பத்திரம், நிலம், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலை தினமும் ஏறுமுகத்தில் தான் உள்ளது. கடந்த 10 வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், தங்கத்தில் முன்பு முதலீடு செய்த பணக்காரர்களின் லாபம் மேலும் மேலும் அதிகரிக்கிறது.
புதிதாக ஒருவர் தங்கம் வாங்க வேண்டும் என்றால் அதற்கு ஆக வேண்டிய செலவு மிகவும் அதிகம். அவர் புதிதாக வாங்கி அதை பத்திரப்படுத்த வேண்டும் , அதன் மதிப்பு உயர காத்திருக்க வேண்டும். பணக்காரர் ஏற்கனவே விலை மலிவாக விற்ற காலத்திலே வாங்கி சேர்த்து விட்டார்கள்.
தங்கத்தை போலவே ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியும் அதிவேகமாக உள்ளது. முன்பு ஏக்கர் கணக்கில் எளிய முறையில் நிலம் வாங்கியவர்கள் இப்போது அதை சென்ட் அளவுகளில் அதிக விலைக்கு விற்று லாபம் அடைகின்றனர். ஒரு வேளை விற்பனை செய்யாமல் வைத்திருந்தால் கூட அதன் விலை உயர்ந்து கொண்டுதான் வரும்.
சமீபத்திய ஆண்டுகளில் பங்குச் சந்தை சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள பணக்காரர்களின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பங்கு சந்தை முதலீடுகள் மிகப்பெரிய லாபத்தை அள்ளி கொடுக்கின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் சட்டங்கள் முதலாளிகளுக்கு சாதகமாகவே உள்ளது. ஒரு நிறுவனம் தொடங்கி வளர வேண்டும் என்றால் கூட பணக்காரர்களுக்கு உடனடியாக வங்கிகளின் கடன் உதவி கிடைத்து விடும். சாமானியர்களுக்கு எளிதில் கடன்கள் கிடைக்கும் அளவுக்கு வங்கிகளின் சட்டங்கள் இல்லை . வங்கிகளின் விதிமுறைகள் அனைத்தும் பணக்காரர்களுக்கு சாதகமாகவே உள்ளது.
அதிகளவு பண பரிவர்த்தனை செய்வதும், அதிகளவு வருமான வரி கட்டுவதும் ஒருவரின் கடன் பெரும் அளவை உயர்த்துக்கின்றன. அரசாங்கமும் பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க தேவையான நிலத்தினை மிகக் குறைந்த விலையில் கொடுக்கிறது.மேலும் அவர்களின் தொழிலுக்கு பல வழிகளில் உதவி செய்கிறது.
பணக்காரர்களின் முதலீடுகள் அவர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குகிறது. ஏழைகள் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அவர்கள் எதிர்பார்த்ததை விட இன்னும் அதிகமாக பணம் தேவைப்படுகிறது, மேலும் பண வீக்கமும் விலையேற்றமும் அவர்களை இன்னும் ஏழைகள் ஆக்குகிறது. பணக்காரர்கள் தங்களை மேலும் வளப்படுத்த ஊழியர்களை அதிகப்படுத்துகின்றனர். பணக்காரர்கள் அல்லாத ஊழியர்களின் உழைப்பும் முதலாளிகளை மேலும் பணக்காரர்கள் ஆக்குகிறது.