
திருக்குறுங்குடி வெங்கரம் சுந்தரம் ஐயங்கார் என்பவரால் உருவாக்கப்பட்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட பிரபலமான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாகும். இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளராக வலம் வரும் டிவிஎஸ் நிறுவனம் 60 நாடுகளுக்கு இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது. இந்நிறுவனம் ஆண்டுக்கு மூன்று மில்லியன் யூனிட்கள் விற்பனையையும், ஆண்டுக்கு நான்கு மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனையும் கொண்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், மொபெட்கள், ஸ்கூட்டர்கள், கம்யூட்டர் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் பந்தய ஊக்க பைக்கான TVS அப்பாச்சி சீரிஸ் போன்ற பல்வேறு வகையான இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது.
இந்த நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டில் சக்திவாய்ந்த எஞ்சின்களுடன் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் அப்பாச்சி 150ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பெர்பார்மன்ஸ் ரக மோட்டார் சைக்கிள்களில் அப்பாச்சி பைக் என்பது இந்தியாவில் மக்கள் மிகவும் விருப்பத்திற்குரிய வாகனமாக விளங்குகிறது.
அப்பாச்சி ஆர்.டி.ஆர் 200 4வி பைக்கின் டிசைன் மற்றும் ஸ்டைலிங்கில் புதுமையாக உள்ளது. இந்நிலையில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி மோட்டார் சைக்கிளை மேம்படுத்தி தற்போது இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் 197.75 சி.சி. 4 வால்வு, ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 9 ஆயிரம் ஆர்.பி.எம்.மில் 17.25 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் டூயல் சானல் ஏ.பி.எஸ்., அர்பன், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என 3 டிரைவிங் மோடுகள், ஸ்லிப்பர் கிளட்ச், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், எல்.இ.டி.ஹெட்லாம்ப், அட்ஜஸ்டபில் கியர் லிவர், புளூடூத் இணைப்பு உள்பட பல புதிய அம்சங்கள் அப்பாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி பைக்கில் நிறைந்துள்ளன.
மேம்படுத்தப்பட்ட வெளிப்புற 'கிராபிக்ஸ்', புதிய சிவப்பு நிற அலாய் சக்கரங்கள் மற்றும் சீரமைக்கப்பட்ட ஹேண்டில் பார் ஆகியவை அப்பாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி பைக்கில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்களாகும்.
புதிய வாகன உற்பத்தி விதிகளுக்கு ஏற்ப, வாகனத்தில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யக்கூடிய தொழில்நுட்பம், புதிய அம்சமாக தலைகீழ் வடிவ முன்பக்க சஸ்பென்ஷன் ஆகியவை இடம்பெற்றுள்ளது இந்த பைக்கின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். தலைகீழ் சஸ்பென்ஷன் (USD ஃபோர்க்) 2025-ம் ஆண்டுக்கான மேம்படுத்தல்களில் ஒன்றாகும், மேலும் இது பைக்கை கையாளுதல் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் என்று கருதப்படுகிறது.
ஏற்கனவே பஜாஜ் பல்சர் NS200 பைக் மாடலில் இந்த தலைகீழ் சஸ்பென்ஷன் கொண்டு வந்துள்ள நிலையில் தற்போது டி.வி.எஸ்., அப்பாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி பைக்கும் இதனுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் ஆரம்ப ஷோரூம் விலை ரூ.1.54 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.