
நம் நாட்டில் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் நாள்தோறும் புதுப்புது மாடல்களில் இருசக்கர வாகனங்கள் அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கின்றன. வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம் என்ற காலம் போய், தற்போது வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் இருசக்கர வாகனம் வைத்திருக்கும் நிலை உள்ளது. மக்களின் ரசனைக்கு ஏற்ப இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களும் மக்களை கவரும் வகையில் புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களில் டிவிஎஸ் மோட்டார்ஸ் பிரபலமான முன்னணி நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் இருசக்கர வாகன உற்பத்திக்கு பெயர் பெற்றது. இந்தியாவின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம் டிவிஎஸ் திருக்குருங்குடி சுந்தரம் ஐயங்கார் என்பவரால் நிறுவப்பட்டது.
இந்நிறுவனத்தின் ஆண்டு விற்பனை 3 மில்லியன் யூனிட்டுகள் ஆகும். இந்தியாவின் 2-வது பெரிய ஏற்றுமதியாளராக உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது.
டிவிஎஸ் நிறுவனம் பல்வேறு மாடல் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் புதிய வேரியன்டான ஜூபிடர் 125 டூயல் டோன் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் (SXC)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. ஐவரி-பிரவுன் மற்றும் ஐவரி-கிரே என 2 நிறங்களில் கிடைக்கும். இது, எல்இடி ஹெட்லேம்ப், டயமண்ட்-கட் அலாய் வீல்ஸ், ஃபுல் டிஜிட்டல் ரிவர்ஸ் எல்சிடி கிளஸ்டர் மற்றும் 33 லிட்டர் ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களுடன் வருகிறது. மேலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், அழைப்பு மற்றும் SMS விழிப்பூட்டல்கள், குரல் வழிகாட்டுதலுடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், மற்றும் "ஃபைண்ட் மை ஸ்கூட்டர்" போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் புளூடூத் இணைப்பு உள்ளது, இது மொபைல் போன் மூலம் ஸ்கூட்டரை இணைக்க உதவுகிறது.
இந்த ஸ்கூட்டரில் 125cc இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.2 பிஎச்பி பவரையும், 10.5 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரின் எடை 108 கிலோ. அதே நேரத்தில் 163 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.
டூயல் டோன் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் (SXC) வேரியன்ட் ரூ.88,924 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.
பெண்களின் மனதை கவரும் வகையிலும், அவர்களுக்கு வசதியாக பயணிக்கும் வகையிலும், வண்டியை ஓட்டும் போது சௌகரியமான சூழலை ஏற்படுத்தும் நோக்கிலும் பல விசேஷ அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் செய்யப்பட்டுள்ளன. தற்போது பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இந்த வகையான ஸ்கூட்டர்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏனெனில் அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் உகந்ததாகவும், வசதியாகவும் இருப்பதாக உணர்கின்றனர். மேலும் குடும்பத்துடன் செல்லும் போது பாதுகாப்பை உணர்வதாக அவர்கள் கூறுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தான் அனைத்து முன்னனி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் இருசக்கர வாகனங்களில் புதிய அம்சங்களை புகுத்தி விற்பனைக்கு கொண்டு வருகின்றன.