

குழந்தைகளுக்கான கல்வி செலவு அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் நிலையான வளர்ச்சி திட்டங்களை தேர்வு செய்வது நல்லது. அரசால் ஆதரிக்கப்படும் சேமிப்பு திட்டம் (Children savings scheme) முதல் பேங்க் டெபாசிட்டுகள் வரை சிறந்த முதலீட்டு திட்டங்கள் நம்பகமான வருமானத்தை வழங்கும்.
1. NPS வாத்சல்யா யோஜனா:
NPS வாத்சல்யா யோஜனா என்பது பெற்றோர்கள் தங்கள் மைனர் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நீண்ட கால நிதியை உருவாக்க உதவும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின்(NPS) கீழ் உள்ள ஒரு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. பல்வேறு ஓய்வூதிய நிதிகளைத் தேர்வு செய்யும் நெகிழ்வுத்தன்மை உண்டு.
வருடத்திற்கு 1000 ரூபாய் முதல் பங்களிப்பு வசதியுடன், குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், சிறுவயதிலேயே சேமிப்பின் முக்கியத்துவத்தை கற்றுக் கொடுக்கவும் உதவுகிறது. 18 வயதிற்குப் பிறகு கணக்கு குழந்தைக்கு மாற்றப்படும். வருமான வரிச் சட்டம் 80CCD இன் கீழ் 50,000 ரூபாய் வரிச்சலுகைகள் கிடைக்கின்றன. ஆன்லைனில் அல்லது நேரிடையாக வங்கிகள் மூலம் ஆஃப்லைனிலும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தொடங்கலாம்.
2. சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY):
சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது இந்திய அரசின், பெண் குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக பெற்றோர்கள் சேமிப்பதை ஊக்குவிக்கும் ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும். 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் வங்கிகள் அல்லது அஞ்சல் நிலையங்களில் குறைந்தபட்சம் ரூபாய் 250 செலுத்தி தொடங்கலாம். அதிகபட்சம் ரூபாய் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
மேலும் இது வரிச் சலுகைகளுடன் அதிக வட்டி வருமானத்தையும் அளிக்கிறது. ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். 21 வயதில் கணக்கு முதிர்ச்சியடையும். மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை, அஞ்சல் அலுவலகங்கள் அல்லது அரசு மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கணக்கைத் தொடங்கலாம்.
3. குழந்தைகளுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்:
குழந்தைகளுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்கள் என்பது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளான கல்வி, திருமணம் போன்றவற்றிற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கியில் முதலீடு செய்யும் பாதுகாப்பான, உத்தரவாதமான வருமானம் தரும் திட்டங்களாகும். இதில் பெற்றோர் கணக்கு தொடங்கி, குழந்தை வளர்ந்த பிறகு முழுப் பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இது குறைந்த ஆபத்து, அதிக வட்டி விகிதம் போன்ற நன்மைகளைக் கொண்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக டெபாசிட் செய்யலாம். ஒரு வருடம் முதல் 10 வருடங்கள் வரை அல்லது குழந்தையின் தேவைகளைப் பொறுத்து கால அளவை மாற்றிக் கொள்ளலாம். நமக்கு விருப்பமான வங்கியில் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் அடையாள அட்டை (ஆதார், பான், ஓட்டுநர் உரிமம்), முகவரிச் சான்று போன்ற ஆவணங்களுடன் தேவையான படிவங்களை பூர்த்தி செய்து ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, FD கணக்கை திறக்கலாம்.
குழந்தைகளுக்கான இந்த திட்டங்கள் பெற்றோருக்கு ஒரு நிலையான காலகட்டத்தில் சீராக வளரும் ஒரு பெரிய தொகையைப் பெற உதவுகிறது.