

இந்தியாவில் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் பெண் முதலீட்டாளர்களின் (Women investors in India) எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அவர்கள் சேமிப்பிலிருந்து முதலீட்டுக்கு மாறி, பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள், ஸ்டார்ட்-அப்கள் போன்ற பல்வேறு திட்டங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். இது பெண்களின் நிதி சுதந்திரத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் குறிக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 2.5 கோடி பெண்கள் முதலீட்டாளர்களாக இணைந்துள்ளனர். மொத்த முதலீட்டாளர்களில் நான்கில் ஒரு பகுதியினர் பெண்கள் என்று NSE தரவுகள் தெரிவிக்கின்றன. மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தை, ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் போன்ற அதிக ரிஸ்க் உள்ள முதலீடுகளிலும் பெண்கள் ஆர்வம் காட்டுவதுடன் பலவிதமான திட்டங்களில் முதலீடும் செய்கிறார்கள். தபால் அலுவலக திட்டங்கள் மற்றும் பிற அரசு திட்டங்கள் பெண்களுக்கு சமூக பாதுகாப்பையும் நல்ல வருமானத்தையும் வழங்குகின்றன.
சேமிப்பு மனநிலையிலிருந்து முதலீட்டு மனநிலைக்குப் பெண்கள் மாறியுள்ளனர். 72% பெண்கள் முதலீட்டு முடிவுகளை தாங்களே எடுப்பதுடன், தெளிவான இலக்குகளுடன் முதலீடும் செய்கின்றனர். கிராமப்புறங்களில் பெண் முகவர்களின் பங்கு முக்கியமானது. பெண் வங்கி முகவர்கள் கிராமப்புறங்களில் கணக்கு பயன்பாட்டை அதிகரிக்க உதவுகின்றனர்.
பெண்கள் தங்கள் பணத்தை தெளிவான இலக்குகளுடன் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். நாட்டின் நிதி சூழலை மாற்றியமைப்பதில் பெண் முதலீட்டாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெண் முதலீட்டாளர்களின் இந்த அதிகரிப்பு, பெண்களின் பொருளாதார அதிகாரம் அதிகரிப்பதையும், நிதித்துறையில் அவர்களின் பங்களிப்பு வலுப்பெறுவதையும் காட்டுகிறது. இது அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப நிதி நிலையை மேம்படுத்துகிறது.
பெண்கள் பணியிடத்தில் சிறந்து விளங்குவதுடன், விழிப்புணர்வும் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. ஓய்வூதியத் திட்டமிடல் ஒரு முக்கிய முன்னுரிமையாக அவர்களிடம் உருவெடுத்துள்ளது. குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது. நீண்டகால முதலீடு மூலமாக பொருளாதார பாதுகாப்பு மற்றும் நிலைப்பாட்டை உறுதி செய்வது தனிநபர் தேவைக்காக மட்டுமின்றி விரிவான பொருளாதரத்திற்கும் அவசியமானது.
இதற்கான காரணங்கள்:
நிதி நிறுவனங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் வங்கிகள் மூலம் பெண்கள் நிதி அறிவை, அதிகரித்த விழிப்புணர்வைப் பெறுகின்றனர்.
பெண்கள் பெறும் பொருளாதார சுதந்திரமும், கிராமப்புறங்களில் வங்கி முகவர்களின் பங்களிப்பும் முக்கியமாக அரசின் பங்களிப்பும் பெண்களின் முதலீட்டு பயணம் தொடர்ந்து வளர்ந்து வர உதவுகிறது.