

இந்தியாவின் கிராமப்புற மற்றும் பாதி நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) ஒரு புதிய 'சுயஉதவிக் குழு' (SHG) சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. நிதி உள்ளடக்கம் மற்றும் பெண் அதிகாரமளித்தலை மையமாகக் கொண்ட இந்தத் திட்டம், வங்கிச் சேவைகளை எளிய மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
சுயஉதவிக் குழு சேமிப்புக் கணக்கு (SHG):
இந்தச் சேமிப்புக் கணக்கு குறிப்பாக கிராமப்புறங்களில் இயங்கும் சுயஉதவிக் குழுக்களுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. பொதுவாக, இத்தகைய குழுக்கள் வங்கிச் சேவையைப் பெறும்போது முறையான ஆவணங்கள் இல்லாமை மற்றும் குறைந்தபட்ச இருப்புத் தொகை போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன. தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் (NRLM) மற்றும் நபார்டு (NABARD) போன்ற அமைப்புகளின் ஆதரவுடன், இந்தப் புதிய கணக்கு முறை கிராமப்புறப் பெண்களை முறைசார்ந்த வங்கி அமைப்பிற்குள் கொண்டுவர உதவும் என IPPB-யின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர். விஸ்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
வங்கி கணக்கில் பூஜ்ஜிய இருப்பு இருந்தாலும் அபராதம் விதிக்கப்படாது. அதாவது குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை.
கணக்கை நிர்வகிக்கவோ அல்லது கணக்கை முடிக்கவோ எந்த வித மறைமுக கட்டணமும் வசூலிக்கப்படாது.
பணம் டெபாசிட் செய்வதற்கும், எடுப்பதற்கும் கூடுதல் கட்டணங்கள் இல்லை.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படும். அதோடு, மாதந்தோறும் ஒரு இலவச கணக்கு அறிக்கை (Statement) வழங்கப்படும்.
வங்கிக் கணக்கில் ₹2 லட்சம் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மிகப்பெரிய பலம் அதன் விரிவான தபால் நிலையக் கட்டமைப்பு ஆகும். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்தச் சேவையின் மூலம், கிராமப்புறப் பகுதிகளில் உள்ள மக்கள் தபால் ஊழியர்கள் மூலமாகவே தங்கள் கணக்குகளை எளிதாகத் தொடங்க முடியும். இதன் மூலம், வங்கிக்குச் செல்ல நேரமில்லாத அல்லது வங்கி வசதி இல்லாத குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் 'டோர்ஸ்டெப் பேங்கிங்' (Doorstep Banking) முறையில் நிதிச் சேவைகள் தங்குதடையின்றி கிடைக்கும்.
சிறு தொழில் செய்யும் பெண்களுக்கு இந்தக் கணக்கு ஒரு பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது. வெளிப்படையான பணப் பரிவர்த்தனைகள், முறையான கணக்கு பராமரிப்பு மற்றும் கந்துவட்டி போன்ற சுரண்டல் முறைகளில் இருந்து விடுதலை பெற இது வழிவகுக்கிறது.
முறையான வங்கி ஆவணங்கள் கிடைப்பதால், வருங்காலத்தில் இக்குழுக்கள் கடன் வசதி பெறுவதும் எளிதாகிறது. இது பெண்களின் நிதித் திட்டமிடலை மேம்படுத்தி, அவர்களை ஒரு தற்சார்பு பொருளாதார சக்தியாக மாற்றுகிறது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் இந்த முயற்சி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தபால் துறையை ஒருங்கிணைத்து, கிராமப்புற இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கான பெண்களின் வாழ்வில் இந்தத் திட்டம் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் என்பதில் ஐயமில்லை.