
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவதற்கு சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருப்பது அவசியம். வங்கிக் கடன்களை விடவும் தற்போதைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடனுக்கு மட்டும் தான் சிபில் ஸ்கோர் முக்கியமா? கிரெடிட் கார்டுக்கு சிபில் ஸ்கோர் தேவையில்லையா என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. இந்தக் குழப்பத்தை தீர்த்து வைக்கிறது இந்தப் பதிவு.
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்ல வங்கிகளும் மிக முக்கிய காரணம். வங்கிகளில் பல விதமான கடன்கள் வழங்கப்படுவது போலவே, கிரெடிட் கார்டும் வழங்கப்படுகிறது. இதுவும் ஒருவகையில் கடன் தான். ஆனால், வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தி கொண்டால் வட்டி கட்ட வேண்டிய அவசியமே இருக்காது. ஒருவேளை பில் தொகையைக் கட்ட தாமதமானால், தனிநபர் கடனுக்கான வட்டியை விடவும் அதிக அபராதத்தை செலுத்த நேரிடும்.
பொருளாதார உலகில் சிபில் ஸ்கோர் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு வாடிக்கையாளரின் கடன் சார்ந்த விஷயங்கள் மற்றும் நிதி நிர்வாகத்தில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை சிபில் ஸ்கோரை வைத்தே தெரிந்து கொள்ளலாம். கடன் வாங்கும் போது சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் கடன் கிடைக்கும். ஆனால் அதற்கான வட்டி அதிகமாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
தற்போது வங்கிப் பணியாளர்கள் தாமாகவே முன்வந்து வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டு வேண்டுமா எனக் கேட்டு எப்படியாவது விற்று விடுகிறார்கள்.
இப்படி இருக்கையில் கிரெடிட் கார்டுக்கு எதற்கு சிபில் ஸ்கோர் தேவை என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். இருப்பினும் வங்கிப் பணியாளர்கள் உங்கள் சிபில் ஸ்கோரை சரிபார்த்த பின்னரே கிரெடிட் கார்டை விற்க முயற்சிப்பார்கள். சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும் பட்சத்தில் கிரெடிட் கார்டின் அதிகபட்ச இருப்புத் தொகை குறைவாக இருக்கும்.
பொதுவாக சிபில் ஸ்கோர் வரம்பு 300 முதல் 900 வரையிருக்கும். இதில் 300 முதல் 500 வரையிலான சிபில் ஸ்கோரை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கிரெடிட் கார்டு மற்றும் கடனை வழங்காது. அப்படியே வழங்கினாலும் அதிக வட்டியை நிர்ணயிப்பார்கள் என்பது நிச்சயம். சிபில் ஸ்கோர் 500 முதல் 650 வரையிருந்தால் அது சராசரி நிலை. 650 முதல் 750 வரையிருந்தால் அது சிறந்த நிலையாக கருதப்படும். இந்த இரண்டு நிலைகளில் இருக்கும் வாடிக்கையாளர்கள் தான் இந்தியாவில் அதிகம். இவர்களுக்கு எளிதாகவே கிரெடிட் கார்டு கிடைக்கும்.
வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர் 750-க்கும் மேல் இருந்தால் கிரெடிட் கார்டு மற்றும் கடன் வழங்கலில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. அதோடு வட்டியும் குறைவாக இருக்கும்.
புதிதாக கிரெடிட் கார்டு வாங்குபவர்களுக்கு அதிகபட்ச இருப்புத் தொகை ரூ.25,000 வரை தான் இருக்கும். இதுவே சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தால் இந்தத் தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அதோடு கிரெடிட் கார்டு பில்லை தாமதமின்றி செலுத்தினால், அடுத்தடுத்து உங்களுக்கான லிமிட் அதிகரிக்கும்.
எதிர்காலத்தில் நீங்கள் எவ்வித நிதிப் பிரச்சினையிலும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க கிரெடிட் கார்டு பில் மற்றும் வங்கிக் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்துவது தான் நல்லது.