
20 வயது இளைஞர்களுக்கு உடல்நல மருத்துவ காப்பீடு அவசியமா?
ஆம். 20களுக்கு மருத்துவ காப்பீடு மிகவும் அவசியம் தான். மருத்துவ செலவுகள், மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள் மற்றும் பிற மருத்துவ தேவைகளுக்கு ஏற்படும் செலவுகளை ஈடு செய்வதற்கு உடல் நலக் காப்பீடு உதவுகிறது. அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள், எதிர்பாராத விபத்துக்கள் மற்றும் நோய்கள் ஏற்படும் பொழுது நிதி பாதுகாப்பை இது வழங்குகிறது. இதன் மூலம் நிதிச் சிக்கல்கள் ஏற்படாமல் உயர்தர மருத்துவ சேவைகளைப் பெற முடிகிறது. சேமிப்பு இழக்கப்படுவதையும், கடன் வாங்குவதையும் தவிர்க்க முடிகிறது.
திடீர் உடல் நலக்குறைவு ஏற்படும் பொழுது மருத்துவ செலவுகளை கையாள்வதற்கு மருத்துவக் காப்பீடு ஒரு நிதி பாதுகாப்பை வழங்குகிறது. இதனால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் குறித்து கவலைப்படாமல் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு காப்பீடு உதவுகிறது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் மருத்துவ செலவுகள் அதிகமாகும் பொழுது நிதி நெருக்கடியை தவிர்ப்பதற்கு இந்த காப்பீடு திட்டம் அவசியம் தான்.
மருத்துவ செலவுகளை காப்பீடு செய்வதன் மூலம் நம்முடைய நெடுநாளைய சேமிப்பைத் தொடாமல் மருத்துவ சிகிச்சையை பெற முடிவதால் நிதி நிலைத்தன்மை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். இந்த காப்பீடு திட்டங்கள் மருத்துவமனையில் சேர்ப்பது, அறுவை சிகிச்சைகள் மற்றும் மகப்பேறு போன்ற பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்குவதால் இந்தத் திட்டத்தை தேர்ந்தெடுப்பது நல்லது.
மருத்துவ காப்பீட்டு திட்டங்களை தேர்ந்தெடுக்கும் பொழுது நம்முடைய தனிப்பட்ட தேவைகள் மற்றும் நிதிநிலைமைக்கு ஏற்ற தனிநபர் அல்லது குடும்ப மருத்துவ காப்பீடு திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் ஒரு காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது பாலிசியின் விரிவான கவரேஜ் மற்றும் மருத்துவமனைகளின் நெட்வொர்க் போன்ற பலன்களை கருத்தில் கொண்டு சரியான திட்டத்தை தேர்வு செய்வது அவசியம்.
மருத்துவ காப்பீடு ஏன் அவசியமாகிறது தெரியுமா?
மருத்துவ அறிவியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், பெரும்பாலான பெரிய நோய்களுக்கான சிகிச்சை இன்று கிடைக்கிறது என்பது உண்மைதான்; என்றாலும் மருத்துவ காப்பீடு இல்லையெனில் இது போன்ற மருத்துவ நடைமுறைகளுக்கான செலவுகளை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும். நோய் அறிதல், ஏகப்பட்ட பரிசோதனைகள், மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசனைகள் போன்ற செலவுகளை எல்லோராலும் ஏற்க முடியாது. இதற்கு மருத்துவக் காப்பீடு உதவியாக இருக்கும். காப்பீடு இருந்தால் தரமான மருத்துவ சிகிச்சையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மருத்துவ காப்பீடு என்பது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகளில் இருந்து நம்மை காப்பாற்றும் ஒரு கேடயம் என்பதை மறக்கலாகாது. மாறிவரும் வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இன்மை போன்றவை மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திடீர் மருத்துவ செலவுகளால் கடன் வாங்கும் அல்லது சேமிப்பை இழக்கும் நிலையை தவிர்ப்பதற்கு மருத்துவ காப்பீடு அவசியம். நோய்கள் அல்லது விபத்துகளால் ஏற்படும் மருத்துவ செலவுகளை காப்பீட்டு நிறுவனம் கவனித்துக் கொள்ளும். இதனால் தனிநபரின் சேமிப்பு பாதிக்கப்படாது.
மருத்துவ காப்பீடு வைத்திருப்பது சுகாதார பாதுகாப்பு உத்திரவாதம், மருத்துவ அவசர நிலைகள் அல்லது திட்டமிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரங்களின் பொழுது கூட நம்மால் நிம்மதியாக செயலாற்ற அனுமதிக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் பொழுதே, வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே மருத்துவக் காப்பீட்டை பெறுவது நல்லது. இது போட்டித்தன்மை வாய்ந்த பிரீமியத்தில் அதிக சுகாதாரப் பாதுகாப்பைப் பெற உதவுகிறது. அத்துடன் மருத்துவக் காப்பீடு ஒரு முதலீட்டு கருவியாக இரட்டிப்பாக்கி வரியை சேமிக்க உதவுகிறது. மருத்துவ காப்பீட்டிற்காக செலுத்தப்படும் பிரீமியம் தொகை வருமான வரி சட்டத்தின் பிரிவு 80Dயின் கீழ் வரி விலக்குகளைப் பெறவும் உதவுகிறது.