
நடுத்தர வர்க்கத்தினருக்கு பாதுகாப்பான முதலீடு என்றால் அது பிக்சட் டெபாசிட் திட்டம் தான். 7.5% வரை நிலையான வட்டி கிடைக்கும் இத்திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கிறது. வங்கிகளில் பணப்பற்றாக்குறை குறையும் போது, பிக்சட் டெபாசிட்டிற்கு பல்வேறு சலுகைகளை அளித்து முதலீட்டாளர்களை வங்கிகள் ஈர்க்கின்றன. அவ்வகையில் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் இலவச காப்பீட்டையும் சில வங்கிகள் வழங்குகின்றன என்ற தகவல் கடந்த சில மாதங்களாக பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மையைப் பற்றி அலசுகிறது இந்தப் பதிவு.
பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றி வருகிறது. ரெப்போ வட்டி விகிதத்தின் அடிப்படையில் தான் கடன் மற்றும் முதலீட்டுத் திட்டங்களுக்கான வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டின் மீதான வட்டியும், கடனுக்கான வட்டியும் குறைந்துள்ளன.
கடனுக்கான வட்டி குறைந்தால் வாடிக்கையாளருக்கு நிச்சயம் மகிழ்ச்சி தான். ஆனால் முதலீட்டின் மீதான வட்டி குறையும் போது, முதலீட்டாளர்கள் தொடர்ந்து வங்கிகளில் முதலீடு செய்வதை நிறுத்தி விட்டு, மற்ற முதலீட்டுத் திட்டங்களை நாடுவர். வட்டி குறைவு காரணத்தால் முதலீட்டாளர்கள் வங்கி பிக்சட் டெபாசிட்டை புதுப்பிக்காமல் இருத்தல் மற்றும் வங்கிகளை நோக்கி புதிய முதலீடுகள் ஏதும் வராமல் இருத்தல் போன்றவை நிகழும். இச்சமயத்தில் வங்கிகள் முதலீட்டாளர்களை ஈர்க்கப் பல்வேறு சலுகைகளை அறிவிப்பார்கள். அதில் ஒன்று தான் இலவச காப்பீடு.
பிக்சட் டெபாசிட் செய்தால் ரூ.5 இலட்சம் வரை இலவச காப்பீடு வழங்கப்படும் என சில வங்கிகள் விளம்பரப்படுத்தும். இன்றைய காலகட்டத்தில் இந்தச் சலுகை நமக்கு ஏற்றதாக இருந்தாலும், தெளிவாக விசாரித்து முதலீட்டை மேற்கொள்வது தான் புத்திசாலித்தனம்.
ஏனெனில் ஒருசில வங்கிகள் இலவச காப்பீடு என்று அறிவித்து விட்டு, பிறகு ஒரு மாதம் அல்லது ஓராண்டு பிரீமியத்தை மட்டுமே வங்கி செலுத்தும். பிறகு மற்ற அனைத்து பிரீமியத்தையும் வாடிக்கையாளர் தான் செலுத்த வேண்டும் என்று சொல்லவும் வாய்ப்புள்ளது.
இந்நேரத்தில் தான் வங்கிகளுக்குத் இரட்டை இலாபம். பிக்சட் டெபாசிட் முதலீடு கிடைப்பதோடு, காப்பீட்டையும் வாடிக்கையாளருக்கு விற்று விடுவார்கள்.
ஆகையால் பிக்சட் டெபாசிட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், வங்கிகள் அளிக்கும் விண்ணப்பத்தில் மிகச்சிறிய எழுத்துகளில் இருக்கும் வார்த்தைகளை கவனமாக படித்துப் பார்க்க வேண்டும். அதில் நீங்கள் திருப்தி அடைந்தால் மட்டுமே, முதலீட்டைத் தொடங்குவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவெடுக்க வேண்டும். மேலும் இது குழு காப்பீடாக இருந்தால் வேறு எந்த சலுகையும் கிடைக்காது.
என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை மட்டும் பார்க்காமல், அதில் இருக்கும் சிக்கல்களையும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம். கவனமாக உற்று நோக்கினால் வங்கிகள் அளிக்கும் இலவச காப்பீட்டில் பெரிதாக இலாபம் இருக்காது.
இருப்பினும் இதுவரை காப்பீடே எடுத்ததில்லை என்பவர்கள் வங்கிகளின் இந்தச் சலுகையை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.