

தனிமனித நிதியில் நிதி திட்டமிடல் அதாவது பட்ஜெட் போடுவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றான விழுமியங்கள் பட்ஜெட் முறை அல்லது மதிப்புகள் பட்ஜெட் முறை பற்றிப் பார்ப்போம்.
விழுமியங்கள் பட்ஜெட் என்றால் என்ன?
விழுமியங்கள் பட்ஜெட் முறை ஆங்கிலத்தில் Values Budget என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மற்றொரு பெயர் விழுமியங்கள் அடிப்படையிலான பட்ஜெட் முறை. அது ஆங்கிலத்தில், Values based Budget என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பட்ஜெட் முறைகளில் எவ்வாறு பணத்தைச் சேமிக்கலாம் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், அந்த சேமிப்புகள் விழுமியங்கள் சார்ந்து உள்ளதா இல்லையா? என்பதில் கவனம் செலுத்தப்படுவதில்லை.
ஒருவருக்கு சுற்றுலா செல்வது, குடும்பத்தின் நிதி பாதுகாப்பு, குழந்தைகளுக்கு நல்லதொரு படிப்பு கொடுப்பது, திரைப்படங்களுக்குச் செல்வது போன்ற தனிப்பட்ட விழுமியங்கள் இருக்கலாம். அதனை ஒட்டி பட்ஜெட் போடும்போது, அந்த பட்ஜெட்டினைக் கடைப்பிடிப்பது எளிதாகிறது.
ஏனென்றால், பட்ஜெட் அவரது விழுமியங்களை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிமனித நிதி திட்டமிடல் என்பதே தனி மனிதனை ஒட்டி அமைக்கப்படும் நிதி திட்டமிடலே. அது ஒவ்வொரு மனிதருக்கும் பிரத்யேகமானது.
விழுமியங்கள் பட்ஜெட் போடுவது எப்படி?
1. ஒரு மாதத்திற்கான வரவுகளை, வரவு செலவு கணக்கு நோட்டுப் புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்.
2. ஒரு மாதத்திற்கான செலவுகளை, வரவு செலவு கணக்கு நோட்டுப் புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்.
3. படி இரண்டாவதில் எழுதிய செலவுகளை வகைப்படுத்த வேண்டும். பின்வரும் வகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உணவு , உடை, இருப்பிடம், வாகனங்கள், பொழுதுபோக்கு, பயன்பாடுகள், குடும்பம், மருத்துவம், கடன், பயணம், சுற்றுலா, காப்பீடு, சுய பராமரிப்பு, பரிசுகள், ஈகை. அடுத்தபடியாக, ஒருவரது விழுமியங்களைப் பட்டியலிட வேண்டும். தனது அறிவை மேம்படுத்துதல், குடும்பம் மற்றும் உறவுகள், குடும்பத்தின் நிதி பாதுகாப்பு, குழந்தைகளின் படிப்பு, கடனில்லாமல் இருப்பது, சுற்றுலாக்கள், தனது உடல்நலம் காப்பது, சொந்த வீட்டில் வாழுதல், நிம்மதியான ஓய்வுகாலம், ஈகை போன்றவைகளாக இருக்கலாம்.
4. செலவு வகைகளை விழுமியங்களுடன் ஒப்பிட வேண்டும். உணவு, உடை, இருப்பிடம், பயன்பாடுகள், வாகனங்கள் போன்றவை குடும்பம் மற்றும் உறவுகள் சார்ந்த விழுமியத்தில் அடங்கும். கடன்களுக்கான தவணைகள் கடனில்லாமல் இருப்பது என்ற விழுமியத்தில் அடங்கும். விழுமியங்கள் சார்ந்த நிதிக் குறிக்கோள்களைப் பட்டியலிட வேண்டும். அதற்கு மாதா மாதம் பணத்தை ஒதுக்க வேண்டும்.
உதாரணமாக, வருடா வருடம் சுற்றுலா செல்வதென்பது சுற்றுலா செல்லும் விழுமியத்தின் கீழ் வரும். அதற்கு மாதா மாதம் பணத்தை ஒதுக்க வேண்டும். அவசரகால நிதி, காப்பீடுகள் போன்றவை குடும்பத்தின் நிதி பாதுகாப்பின் கீழ் வரும் குறிக்கோள்கள். அவற்றினை அடைய மாதா மாதம் நிதியினை ஒதுக்க வேண்டும். இப்போது, விழுமியங்களில் வராத செலவுகளைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, திரைப்படங்கள் செல்வதென்பது விழுமியங்களில் வராத போது, அதனைத் தவிர்க்க வேண்டும்.
விழுமியங்களில் வரும் செலவுகளுக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். உதாரணமாக, வெளியே உணவருந்துவது, குடும்பம் மற்றும் உறவுகள் சார்ந்த விழுமியத்தின் கீழ் வந்தாலும், ஒரு மாதத்தில் குறிப்பிட்ட அளவே பணத்தை ஒதுக்க வேண்டும். அந்தப் பணம் தீர்ந்த பிறகு, அடுத்த மாதம் வரை அந்த விழுமியத்திற்கு பணத்தை செலவழிக்க காத்திருக்க வேண்டும்.
5. மாத இறுதியில் ஏதேனும் பட்ஜெட்டை மீறி தவறு நடந்திருந்தால் அதற்கு ஏற்றவாறு அடுத்த மாத பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். காலம் செல்ல செல்ல விழுமியங்கள் மாறலாம்.
அதற்கேற்றவாறு பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். உதாரணமாக, கடனில்லாமல் இருப்பது என்ற குறிக்கோளினை அடைந்தபிறகு, அந்த விழுமியத்திற்கு ஒதுக்கிய தொகையை, நிம்மதியான ஓய்வுகாலம் என்ற விழுமியத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்படும் பணத்துடன், அதிகப்படியாக சேர்க்க வேண்டும். இதன் மூலம், மற்ற விழுமியக் குறிக்கோள்களை அடைவது எளிதாகிறது.
விழுமியங்கள் பட்ஜெட்டின் நிறைகள் யாவை?
விழுமியங்கள் சார்ந்து இருப்பதால் எளிதாக கடைபிடிக்க முடிகிறது. ஒவ்வொரு ரூபாயும் வாழ்வின் விழுமியங்களை ஒட்டியே செலவழிக்கப்படுவதால், கடைபிடிப்பது எளிதாகிறது.
நினைத்தபடி வாழ்க்கையை அமைக்க முடிகிறது. விழுமியங்கள் சார்ந்த வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள முடிகிறது. நிதி நிலைமை அதிகரிக்கிறது. விழுமியங்கள் சார்ந்து நிதி ஒதுக்கப்படுவதால், குடும்பத்தின் நிதி நிலைமை மேம்படுகிறது.
விழுமியங்கள் பட்ஜெட்டின் குறைகள் யாவை?
விழுமியங்கள் சார்ந்த தெளிவு முக்கியம். நிறைய விழுமியங்கள் இருக்கும் பட்சத்தில், அவற்றில் எது முக்கியத்துவம் என்று பார்த்து நிதி ஒதுக்கப்பட வேண்டும். அதன் மூலம், செலவுகள் கட்டுப்படுத்தப்படும்.
தேவைகள் மற்றும் விழுமியங்கள் சார்ந்த தெளிவு தேவைகளுக்குப் பிறகே, விழுமியங்கள் சார்ந்த செலவுகள் என்று வைத்துக் கொள்ள வேண்டும். தேவைகளுக்குப் பணம் இல்லாவிட்டால், வாழ்க்கையை நடத்துவது கடினமாகிவிடும்.
விழுமியங்கள் பட்ஜெட்டினை மேம்படுத்துவது எப்படி?
ஒரே செலவு இரண்டு விழுமியங்களுக்கு உதவுமா? என்று பார்க்க வேண்டும். உதாரணமாக, சுற்றுலா செல்வதென்பது குடும்பம் மற்றும் உறவுகள், சுற்றுலா என்ற இரண்டு விழுமியங்களுக்கும் உதவும். அதன் மூலம், செலவுகள் குறையும். அதிக பணத்தை மற்றக் குறிக்கோள்களுக்கு ஒதுக்க முடியும்.
விழுமியங்கள் பட்ஜெட்டைப் பயன்படுத்தி நிதி சுதந்திரத்தை அடைய வாழ்த்துகள்.