

தனிமனித நிதியில் நிதி திட்டமிடல் அதாவது பட்ஜெட் போடுவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றான திருப்பி போடு பட்ஜெட் முறையைப் பற்றி பார்ப்போம்.
திருப்பி போடு பட்ஜெட் (Reverse Budgeting) என்றால் என்ன?
திருப்பி போடு பட்ஜெட் முறை ஆங்கிலத்தில் Reverse Budget என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பட்ஜெட் முறைகளில் செலவுகளுக்கு பணம் ஒதுக்கியது போக, மீதமுள்ள பணத்தைச் சேமிப்பதற்கு என்று ஒதுக்கப்படுகிறது. அதாவது, வருமானம் - செலவு = சேமிப்பு என்று உள்ளது.
இந்த பட்ஜெட் முறை அதனை திருப்பி போடுகிறது. அதாவது, வருமானம் - சேமிப்பு = செலவு என்று திருப்பி போடுகிறது.
இந்த பட்ஜெட்டிற்கு மற்றொரு பெயர் உனக்கு முதலில் பணத்தைச் செலுத்து பட்ஜெட் முறை. ஆங்கிலத்தில் Pay yourself first budget என்றழைக்கப்படுகிறது. இங்கு சேமிப்பு என்பதை மற்ற செலுத்தவேண்டிய ரசீதுகளைப் போல், நமக்கான ரசீதாக கணக்கில் கொண்டு, மற்ற எல்லா ரசீதுகளுக்கு பணம் செலுத்தும் முன்பு, நமக்கான ரசீதான சேமிப்பிற்குப் பணத்தைச் செலுத்த வேண்டுமென்கிறது. இந்த பட்ஜெட் மிகவும் எளிமையான பட்ஜெட் முறை. ஏனென்றால், இங்கு சேமிப்பு, செலவு என்று இரு வகைகள் மட்டுமே உள்ளன.
மாதாமாதம் வருமானம் வந்த பிறகு, சேமிப்புக் கணக்கிற்கு தானியங்கி முறையில் பணத்தைச் செலுத்தி, மீதமுள்ள பணத்தைச் செலவுகளுக்கு வைத்துக் கொள்வதால், பட்ஜெட்டை எளிமையாக கையாள முடிகிறது.
திருப்பி போடு பட்ஜெட் போடுவது எப்படி?
1. ஒரு மாதத்திற்கான வரவுகளை வரவு செலவு கணக்கு நோட்டுப் புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்
2. ஒரு மாதத்திற்கான செலவுகளை வரவு செலவு கணக்கு நோட்டுப் புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்
3. படி இரண்டாவதில் எழுதிய செலவுகளை வகைப்படுத்த வேண்டும். பின்வரும் வகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உணவு , உடை, இருப்பிடம், வாகனங்கள், பொழுதுபோக்கு, பயன்பாடுகள், குடும்பம், மருத்துவம், கடன், பயணம், சுற்றுலா , காப்பீடு, சுய பராமரிப்பு, பரிசுகள், ஈகை. அடுத்தபடியாக, நிதிக் குறிக்கோள்களைப் பட்டியலிட வேண்டும். நிதிக்குறிக்கோள்கள் குறுகிய (5 ஆண்டுகளுக்குட்பட்ட), நடுத்தர (5 முதல் 10 ஆண்டுகளுக்குட்பட்ட), நீண்ட (10 ஆண்டுகளைத் தாண்டிய) என வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
4. நிதிக்குறிக்கோள்களுக்கு தேவைப்படும் பணத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும். அவசரகால நிதி, சிற்றுந்து வாங்குவதற்கான சேமிப்பு, வருடாந்திர சுற்றுலா, குழந்தைகளின் மேல்படிப்பு, குழந்தைகளின் திருமணம், ஓய்வு காலத்திற்கு என எல்லா நிதிக்குறிக்கோள்களுக்கும் மாதா மாதம் எவ்வளவு பணத்தை ஒதுக்க வேண்டுமென்று பார்க்க வேண்டும். அதற்கேற்றவாறு மாதசம்பளத்தில் சேமிப்பிற்கு என தனியாக பணத்தை ஒதுக்க வேண்டும். இது குறைந்தபட்சம் 20% என ஒதுக்க வேண்டும்.
இப்போது, ஒதுக்கிய பணத்தைத் தானியங்கி முறையில், சம்பளம் வந்த அடுத்த நாளே, சேமிப்புக் கணக்கிற்கு ஒதுக்கி விட வேண்டும். நிதிக் குறிக்கோள்களுக்குச் சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தைத் தானியங்கி முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள பணம் சம்பளக்கணக்கில் இருக்கும். அந்த மாதத்துச் செலவுகளைச் சம்பளக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாதாந்திர செலவுகளான உணவு, உடை, இருப்பிடம் போன்ற தேவை சார்ந்த செலவுகளுக்கும் , மேலும் வெளியே உணவருந்துவது, திரைப்படம் செல்வது போன்ற வேண்டல்கள் சார்ந்த செலவுகளுக்கும் சம்பளக்கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் தேவைகளுக்கு பணம் எடுத்துக் கொண்ட பின்னர் வேண்டல்களுக்கு பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டல்களுக்கு பணம் தீர்ந்து விட்டால், அடுத்த மாதம் வரை வேண்டல்களுக்கான செலவுகளுக்காக காத்திருக்க வேண்டும். உதாரணமாக, வேண்டல் சார்ந்த செலவுகளான வெளியே உணவருந்துதல், திரைப்படம் பார்த்தல் போன்ற செலவுகளுக்குக் கணக்கில் போதிய பணம் இல்லாவிட்டால், அடுத்த மாதம் சம்பளக் கணக்கிற்கு, சம்பளம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
மாத இறுதியில் ஏதேனும் பட்ஜெட்டை மீறி தவறு நடந்திருந்தால் அதற்கு ஏற்றவாறு அடுத்த மாத பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். தானியங்கி முறையில் சேமிப்பிற்கு ஒதுக்கப்படும் பணத்தை மாற்ற வேண்டும்.
நிதிக்குறிக்கோள்களை அடைந்த பிறகு, அதற்கு ஏற்றவாறு சேமிப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, சொந்த வீடு வாங்கிவிட்டால், வாடகைக்கு ஒதுக்கிய பணத்தைச் சேமிப்பிற்கு ஒதுக்க வேண்டும். மேலும், குறுகிய காலக் குறிக்கோளான சிற்றுந்து வாங்குவதற்கு தனியாக தொடர் வைப்பு நிதி கணக்கு தொடங்கி பணத்தை ஒதுக்கி இருந்தால், அதனை அடைந்த பிறகு, அந்தக் கணக்கை மூடி விடலாம். அந்தப் பணத்தை சேமிப்புக் கணக்கிலிருந்து மற்றொரு நிதிக் குறிக்கோளுக்கு தானியங்கி முறையில் பயன்படுத்தலாம்.
திருப்பி போடு பட்ஜெட்டின் நிறைகள் யாவை?
சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது - சேமிப்பிற்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள பணம் செலவுக்கு ஒதுக்கப்படுகிறது.
எளிமையான தானியங்கி முறை - சம்பளம் வந்தவுடனேயே தானியங்கி முறையில் சேமிப்பிற்கு பணம் ஒதுக்கப்படுவதால், பட்ஜெட் எளிமைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தனித்தனியாக மெனக்கெடல் தேவையில்லை
நிதிக் குறிக்கோள்களை அடைவது எளிதாகிறது. நிதிக் குறிக்கோள்களுக்கான பணத்தைச் சம்பளம் வந்தவுடனே ஒதுக்குவதால், நிதிக் குறிக்கோள்களை அடைவது எளிதாகிறது.
திருப்பி போடு பட்ஜெட்டின் குறைகள் யாவை?
மேலோட்டமானது - செலவு வகைகளுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கி திட்டமிடாததால், தனிப்பட்ட செலவுகளைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது.
மாதச்சம்பளம் வாங்காதவர்களுக்கு பயன்படுத்துவது கடினமானது - மாதாமாதம் மாறுதலுடைய வருமானத்தை (variable income) உடையவர்களுக்கு இதனைப் பயன்படுத்துவதற்கு அதிக மெனக்கெடல் தேவைப்படுகிறது.
குறைந்த வருமானமுடையவர்கள் மற்றும் அதிக விலைவாசி இடத்தில் வசிப்பர்களுக்குக் கடினமானது - மாதாந்திர செலவுகளுக்கு போதிய பணம் ஒதுக்காவிட்டால், சேமிப்புகளில் கை வைக்க நேர்ந்தால், சேமிப்பின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, சேமிப்பிற்கு சரியான பணத்தை ஒதுக்க அதிக மெனக்கெடல் தேவைப்படுகிறது.
திருப்பி போடு பட்ஜெட்டினை மேம்படுத்துவது எப்படி?
செலவுகளைக் குறைத்து, சேமிப்பிற்கு அதிக பணத்தை ஒதுக்க முயல வேண்டும். மாதம் 75% பணத்தைச் சேமிப்பிற்கு ஒதுக்குபவர்கள் உள்ளார்கள். இவ்வாறு ஒதுக்குவதன் மூலம், தானியங்கி முறையில், பணமானது சேமிப்புகளுக்கு ஒதுக்கப் படுகிறது. நிதிக் குறிக்கோள்களை அடைவது எளிதாகிறது.
திருப்பி போடு பட்ஜெட்டைப் பயன்படுத்தி நிதி சுதந்திரத்தை அடைய வாழ்த்துகள்.