
இன்றைய காலகட்டத்தில் நகரங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் சொந்த வீடு மற்றும் கார் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்கிய காரணமே வங்கிகள் அளிக்கும் கடன்கள் தான். வங்கிக் கடன் என்று ஒன்று இல்லையேல், பலருடைய கனவுகள் இன்று நனவாகி இருக்காது. இருப்பினும் கடன் வாங்கும் போது நாம் கவனமுடன் இருக்க வேண்டும். இதுதவிர்த்து கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தற்காலத்தில் அதிகரித்து விட்டது. அவ்வகையில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி கார் வாங்கலாமா? அப்படி வாங்கினால் பலன் கிடைக்குமா இல்லையா என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
கார்களின் விலை அதிகம் என்பதால், பொதுவாக பலரும் மாதத் தவணை முறையில் தான் பணம் செலுத்தி தான் வாங்குவார்கள். மொத்தத் தொகையையும் கட்டி வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மாதத் தவணையில் கார் வாங்குபவர்கள் முன் பணத்தை கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தவும் நினைக்கலாம். ஏனெனில் இதில் ரிவார்டு புள்ளிகள் மற்றும் கேஷ்பேக் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கார் வாங்கும் போது அனைத்து டீலர்களும் 5 முதல் 10% வரையிலான முன் பணத்தைக் கட்டச் சொல்வது வழக்கம். உதாரணத்திற்கு நீங்கள் வாங்கவிருக்கும் காரின் விலை ரூ.8 இலட்சம் என்றால், அதிகபட்சமாக ரூ.80,000 வரை முன்பணம் கட்டச் சொல்வார்கள். இருப்பினும் ரூ.3 லட்சம் வரையிலான முன் பணத்தை கிரெடிட் கார்டு மூலம் செலுத்த சில டீலர்ஷிப் நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. ஆனால் மீதித் தொகையையும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்த யாரும் அனுமதிப்பதில்லை.
ஏனெனில் ஆன்லைன் பணப் பரிவர்தனை செய்யும் போது, 1.75% பரிவர்த்தனை கட்டணமாக கார் டீலர்ஷிப் நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இது அவர்களின் இலாபக் கணக்கை பாதிக்கும். ஆகையால் முன்பணம் கட்டும் போதே அந்தத் தொகையை அதிகப்படுத்தி கட்டினால், கிரெடிட் கார்டில் உங்களுக்கான கேஷ்பேக் அதிகமாக கிடைக்கும். சில டீலர்ஷிப் நிறுவனங்கள் பரிவர்த்தனை கட்டணம் முழுவதையும் ஏற்றுக் கொள்ளும்.
சில நிறுவனங்கள் பாதி கட்டணத்தை ஏற்றுக் கொண்டு, மீதியை வாடிக்கையாளர்களை செலுத்தச் சொல்வார்கள். பிரீமியம் வகை கார்களுக்கு மட்டுமே இந்த வசதிகள் ஏற்புடையவையாக இருக்கும். ஆகையால் முன்பே கார் டீலருடன் பேச்சுவார்த்தை நடத்தி முன்பணத்தை நீட்டிக்கச் செய்யலாம்.
கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் கூடுதல் கட்டணத்தை டீலர்ஷிப் நிறுவனங்கள் வசூலிக்கிறதா என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் செயலாக்க கட்டணம் என்ற பெயரிலும் சில நிறுவனங்கள் பணம் வசூலிக்கப்படுகின்றன. ஆகையால், ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் எப்போதுமே அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது.
கிரெடிட் கார்டிலிருந்து கிடைக்கும் ரிவார்டு புள்ளிகள் மற்றும் கேஷ்பேக்குகள், உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இருப்பினும் கிரெடிட் கார்டு கடனை கால தாமதம் செய்யாமல் கட்ட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இதற்கான வட்டி மிக அதிகம். சரியான முறையில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் பலன் கிடைக்கும். கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும், அது நமக்குத் தான் நஷ்டம்.