
குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவே பலரும் தனிநபர் கடன்களை வாங்குகின்றனர். எவ்வித அடமானமும் தேவையில்லை என்பதால் தான் தனிநபர் கடனுக்கான வட்டி அதிகமாக இருக்கிறது. மாதத் தவணையை சரியாக செலுத்தி வரும் ஒரு வாடிக்கையாளர், திடீர் பண வரவால் கடனை முன்கூட்டியே முடித்துக் கொள்ள நினைக்கலாம். இப்படிச் செய்வதால் பலன் கிடைக்குமா? தெரிந்து கொள்வோம்.
எந்த வகைக் கடனாக இருந்தாலும் அதனை முன்கூட்டியே முடிப்பது நமக்கு நிதி சுதந்திரத்தை வழங்கும். ஆனால் தனிநபர் கடனை முன்கூட்டியே முடிப்பதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் முழுக்க முழுக்க சிபில் ஸ்கோரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. ஆகையால் இந்த வகைக் கடனுக்கு பல்வேறு விதிமுறைகளை வங்கிகள் வகுத்துள்ளன. நிதி நெருக்கடியில் இருந்து விடுபட கடனை முன்கூட்டியே முடிப்பது நல்லது தான் என்றாலும், அதிலிருக்கும் சாதக, பாதகங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
பலன்கள் என்னென்ன?
மாதத் தவணையை செலுத்தி வரும் போது, கைவசம் கொஞ்சம் பணம் கிடைத்து தனிநபர் கடனை முன்கூட்டியே அடைப்பதால் வட்டித் தொகை கணிசமாக குறையும். அதோடு சிபில் ஸ்கோரும் நல்ல நிலைக்கு உயரும். இதனால் அடுத்த முறை கடன் வாங்கும் திறன் அதிகரிக்கும்.
மாதந்தோறும் நமக்கு சம்பளம் வருகிறதோ இல்லையோ, ஆனால் கடன் வாங்கியவர்கள் மாதத் தவணையை மட்டும் கண்டிப்பாக செலுத்த வேண்டும். கடனை முன்கூட்டியே அடைத்தால், மாதத் தவணையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லாததால் நிதி சுதந்திரத்தை அடைய முடியும்.
சிக்கல்கள் என்னென்ன?
தனிநபர் கடனை முன்கூட்டியே அடைப்புதை ப்ரீ-க்ளோசர் (Pre-Closure) என்பர். இப்படிச் செய்யும் போது ப்ரீ-க்ளோசர் கட்டணங்கள் வசூலிக்கப்படும். இந்த கட்டணங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் கடன் வாங்கும் போதே நாம் கையெழுத்திடும் ஆவணத்தில் குறிப்பிட்டு இருப்பார்கள். கிட்டத்தட்ட 2% முதல் 6% வரை ப்ரீ-க்ளோசர் கட்டணம் இருக்கும். நாம் வட்டியை மிச்சப்படுத்த கடனை முன்கூட்டியே அடைத்தால், இந்தக் கட்டணம் மிச்சப்படுத்த நினைக்கும் வட்டிக்கு இணையாக வரவும் வாய்ப்புள்ளது.
கடனை ஒரே நேரத்தில் அடைக்கும் போது, நம்மிடம் பணப்புழக்கம் குறையும். இந்நேரத்தில் திடீரென ஏதேனும் அவசர செலவு ஏற்பட்டால், மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம். இதுபோல் நாம் தொடர்ந்து கடன் வாங்கினால், அது நம்மை கடன் சுழலில் சிக்க வைத்து விடும்.
இதனை சமாளிக்க என்ன செய்யணும்?
நாம் மூன்று வழிகளைத் தொடர்ந்து பின்பற்றினால் போதும். முதலில் பட்ஜெட் போட்டு செலவுகளைத் தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாவது, நாம் செய்யும் சிறுசிறு செலவுகளைக் கண்காணித்து அதனைக் குறைக்க வேண்டும்.
மூன்றாவது, குறைந்தபட்சம் 6 மாத சம்பளத்தை அவசரகால நிதியாக நாம் சேமித்து வைத்திருக்க வேண்டும்.
முதலீடு செய்யலாமா?
தனிநபர் கடனை முன்கூட்டியே அடைப்பதைக் காட்டிலும், அந்தப் பணத்தை தங்கம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யத் திட்டமிடலாம். இப்படி முதலீடு செய்து வரும் இலாபம் வட்டி சேமிப்பை விட அதிகமாக இருந்தால் நிச்சயமாக முதலீட்டைத் தொடரலாம். அதோடு தொடர்ந்து மாதத் தவணையைச் செலுத்தி பொறுமையாகவே கடனை அடைக்கலாம்.
எதுவாக இருந்தாலும் அனைத்து தரப்பிலும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.