
இந்தியாவில் மாதச் சம்பளத்திற்கு பணிபுரிபவர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம். இவர்களின் அவசர மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவும் வகையில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை PF என்ற பெயரில் பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும் இந்த தொகையில் ஒரு சிறுபகுதி பென்சனுக்காகவும் ஒதுக்கப்படுகிறது. இந்த PF பென்சனைப் பெறுவதற்கு, தொடர்ந்து 10 ஆண்டுகள் பணிபுரிய வேண்டுமா என பலருக்கும் குழப்பமாக உள்ளது. இதுகுறித்த தெளிவான விளக்கத்தை இப்போது தெரிந்து கொள்வோம்.
மாதச் சம்பளக்காரர்கள் PF கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டுமென்றாலும், பென்சன் பெற வேண்டுமானாலும் முதலில் நாமினியை நியமிக்க வேண்டியது கட்டாயமாகும். நாமினியை நியமித்த பிறகே, நமக்கான அனைத்து சேவைகளையும் எளிதாக அணுக முடியும். பொதுவாக மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் PF தொகையானது, வருங்கால நிதி பாதுகாப்பிற்கு உதவும். பணத்தை எடுப்பதற்கு இதில் சில விதிமுறைகளும் உண்டு. அதேபோல் தான் பென்சன் பெறுவதற்கான தகுதியும் இதில் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஒரு பணியாளர் சம்பள உயர்வு காரணமாக அவ்வப்போது வேலை செய்யும் நிறுவனத்தை மாற்றுவது வழக்கம். அப்படி ஒவ்வொரு முறையும் வேலை மாறுதலின் போது நம்முடைய PF கணக்கை ஒன்றாக இணைத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் தொடர்ந்து ஒரே UAN எண் பயன்படுத்தப்படும். சிலர் சொந்த காரணங்களுக்காக வேலையை விட்டுவிட்டு, சில ஆண்டுகள் கழித்து மீண்டும் மற்றொரு வேலையில் சேர்வார்கள். அப்படி சேரும்போது, முன்பு பயன்படுத்தி வந்த அதே PF கணக்கைப் பயன்படுத்துவது அவசியம்.
உதாரணத்திற்கு ஒருவர் 7 வருடங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து, பிறகு 2 வருட இடைவெளிக்குப் பின் மற்றொரு நிறுவனத்தில் 3 வருடங்கள் பணிபுரிந்தால், PF பென்சனைப் பெற முடியுமா என குழப்பம் ஏற்படும். மத்திய அரசின் விதிப்படி அரசு அல்லது தனியார் ஊழியர் ஒருவர், குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு பணிபுரிந்தால் மட்டுமே PF பென்சன் பெறத் தகுதியுடையவர்.
தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் தான் PF பென்சன் பெற முடியும் என இதனைப் பலபேர் தவறாகவும் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், மத்திய அரசின் விதிப்படி, உங்கள் PF கணக்கில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு வரவு வைக்கப்பட்டால் போதும். தொடர்ந்து வரவு வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இதிலிருந்து ஒருவர் குறைந்தபட்சம் மொத்தமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.
ஆனால், உங்கள் PF கணக்கில் நிர்வகிக்கப்படும் UAN எண் மட்டும் மாறாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். ஆகையால், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு வேலையை மாற்றும் போது PF விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்துங்கள். அதோடு பணி ஓய்வு பெற்ற பின், PF பென்சனுக்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டியதும் அவசியமாகும்.
தற்போது PF கணக்கில் பணத்தை எடுக்கும் நடைமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் PF விதிகள் மாற்றம் பெறுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.