Small Business
Online Shopping

சிறு வணிகர்களை முடக்குகிறதா ஆன்லைன் ஷாப்பிங்!

Published on

பொருளாதார வளர்ச்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாம் நமது பாரம்பரியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். முன்பெல்லாம் மளிகைச் சாமான்கள் வேண்டுமென்றால், அருகில் இருக்கும் மளிகைக் கடைக்கு நடந்து சென்று வாங்கி வருவோம். ஆனால், இப்போதைய நிலை இதுவல்ல. எது வேண்டுமென்றாலும் ஆன்லைனில் கிடைக்கிறது. மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், ஆன்லைன் ஷாப்பிங்கும் பலமடங்கு அதிகரித்துள்ளன. இதனால் தான் சில ஆண்டுகளிலேயே பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் உருவெடுத்துள்ளன.

ஆன்லைன் ஷாப்பிங் வசதி நமது நேரத்தை மிச்சப்படுத்துகிறது. ஆனால், நமக்கே தெரியாமல் நாம் பல சிறு வணிகர்களை அழித்து வருகிறோம் என்பதை உணரத் தவறி விட்டோம். ஆன்லைன் ஷாப்பிங்கில் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் அம்சம் பொதுமக்களிடத்தில் வரவேற்பைப் பெற்றது. இதுதான், இந்த ஷாப்பிங் வசதி விரைவிலேயே பிரபலமடைய முக்கிய காரணமாகும்.

ஆன்லைன் ஷாப்பிங் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியதும், சிறு வணிகர்களின் மளிகைக் கடைகள் வீழ்ச்சியை நோக்கிச் சென்றன. இதனை பலரும் கவனிக்கத் தவறியதே, ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தால் தான். இருந்த இடத்திலேயே மளிகைப் பொருள்கள், உணவுப் பொருள்கள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் என பலவற்றை வாங்குகிறோம். இதன் விளைவு தான் இன்று பல சிறு வணிகர்களின் வியாபாரம் குறைந்ததற்கு காரணம். இது நமது இந்தியப் பொருளாதாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் இந்திய நுகர்வோர் பொருள்கள் விநியோக நிறுவன கூட்டமைப்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2 இலட்சம் மளிகைக் கடைகள் மூடப்பட்டன என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்தியது. அவசர காலங்களில் ஆன்லைன் ஷாப்பிங் செய்தால் பரவாயில்லை. அனைத்துமே ஆன்லைனில் தான் ஷாப்பிங் செய்வோம் என பலரும் நினைத்ததால் வந்த வினை தான் இது. மேலும் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தின் பண்டிகை கால ஆன்லைன் ஷாப்பிங் 250% அதிகரித்து இருக்கிறது.

ஆன்லைன் ஷாப்பிங்கால் அதிகமாக மெட்ரோ நகரங்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது மொத்தம் 90,000 கடைகள் மெட்ரோ நகரங்களில் மூடப்பட்டுள்ளன. மேலும் நடுத்தர நகரங்களில் 60,000 கடைகளும், சிறு நகரங்களில் 50,000 கடைகளும் மூடப்பட்டுள்ளன. நம் நாட்டில் 1.30 கோடி சிறிய கடைகள் உள்ளன. ஆன்லைன் ஷாப்பிங் இன்னமும் அதிகரித்தால், வரும் ஆண்டுகளில் கடைகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படியுங்கள்:
அதிகமான ஷாப்பிங் செய்வதை கட்டுப்படுத்த 7 நாள் விதி!
Small Business

இருப்பினும் ஒருசில வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை அதிகரிக்க, குறிப்பிட்ட தொலைவில் இருக்கும் வீடுகளுக்கு மட்டும் நேரடி டெலிவரி மற்றும் ஆன்லைனில் பணம் செலுத்துதல் போன்ற வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. மற்ற வணிகர்களும் மக்களைக் கவர இதுபோன்ற வசதிகளை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

நாம் பயன்படுத்தி வரும் பெரும்பாலான ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வெளிநாட்டுக்குச் சொந்தமானவை. அப்படி இருக்கையில் இதில் கிடைக்கும் இலாபமும் அவர்களுக்குத் தான் சேரும். ஆகையால், நம் நாட்டின் சிறு வணிகர்களைக் காக்கும் பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு என்பதை மனதில் நிறுத்தி, ஆன்லைன் ஷாப்பிங்கை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com