

இப்போ உலகமே AI Bubble பத்திதான் பேசிட்டு இருக்கு. ஆனா, இந்த மாதிரி 'பபுள்'ங்கிறது நமக்கு ஒன்னும் புதுசு இல்ல. இதுக்கு முன்னாடி 2000-ல "டாட்-காம் பபுள்" (Dot-com Bubble) பார்த்தோம், 2008-ல "ஹவுசிங் பபுள்" (Housing Bubble) பார்த்தோம். இப்போ AI-யைச் சுத்தி நடக்குறதும் அதே மாதிரி ஒரு குமிழிதானா? ஒருவேளை இது வெடிச்சா, நம்ம மார்க்கெட் என்ன ஆகும்? முன்னாடி நடந்ததை வச்சு இப்போ என்ன நடக்குதுன்னு கொஞ்சம் அலசிப் பார்க்கலாம்.
2000-கள்ல, இன்டர்நெட்ங்கிறது இப்போ இருக்கிற AI மாதிரி ஒரு பெரிய மேஜிக் வார்த்தை. மீடியாக்கள் பயங்கரமா ஹைப் ஏத்திவிட, மக்கள் எல்லாரும் அதாவது இந்த வாய்ப்பை விட்டுட்டா அவ்வளவுதான்னு பயந்து, கம்பெனியோட மதிப்பு என்னன்னே பார்க்காம பணத்தைக் கொட்டினாங்க.
கடைசியில, பல கம்பெனிகளுக்கு உண்மையான வருமானமே இல்லைன்னு தெரிஞ்சதும், மொத்த மார்க்கெட்டும் சரிஞ்சது. நாஸ்டாக் (NASDAQ) மட்டும் 78% கீழ விழுந்துச்சு. அதே மாதிரிதான் 2008-ல, பேங்குகள் கண்ணாபின்னானு எல்லாரும் வீடு வாங்கக் கடன் கொடுத்தாங்க. வட்டி விகிதம் ஏறுனதும், யாராலயும் கடன் கட்ட முடியல, ஹவுசிங் மார்க்கெட் மொத்தமா சரிஞ்சது.
இப்போ AI-க்காக நடக்கிற முதலீடுகளோட அளவு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருக்கு. 2025-ல மட்டும் 1.5 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யப்படுது. ஆனா, இந்த முதலீடுக்கு ஏத்த வருமானம் வருதான்னு கேட்டா, அது ஒரு பெரிய கேள்விக்குறிதான். OpenAI நிறுவனத்தோட சாம் ஆல்ட்மேனே சொன்ன மாதிரி, அவங்களுக்கு வர்ற வருமானம் அவங்களோட செலவுகளுக்குப் பத்தல.
பெரும்பாலும், பெரிய டெக் கம்பெனிகளே மத்த AI கம்பெனிகள்ல மாத்தி மாத்தி முதலீடு பண்ணிக்கிறாங்க. ஒரு கம்பெனியோட செலவு, இன்னொரு கம்பெனியோட வருமானமா கணக்கு காட்டப்படுது. பணம் அவங்களுக்குள்ளேயே சுத்திட்டு இருக்கே தவிர, உண்மையிலேயே வெளியிலிருந்து லாபம் வருதாங்கிறது சந்தேகம்தான்.
இன்னொரு பெரிய ஆபத்து என்னன்னா, இப்போ அமெரிக்கப் பொருளாதாரம் நல்லா இருக்கிற மாதிரி தெரிஞ்சாலும், அதுல இருந்து AI சம்பந்தப்பட்ட முதலீடுகளை மட்டும் எடுத்துட்டா, அமெரிக்கா ஏற்கெனவே பொருளாதார மந்தநிலையில தான் இருக்குன்னு சில நிபுணர்கள் சொல்றாங்க.
உதாரணத்துக்கு, சமீபத்துல S&P 500 இன்டெக்ஸ் ஒரு ஆல்-டைம் உச்சத்தைத் தொட்டது. ஆனா, அதே நாள்ல, அந்த இன்டெக்ஸ்ல இருந்த 500 கம்பெனிகள்ல, 370 கம்பெனிகள் (73%) நஷ்டத்துலதான் இருந்துச்சு. வெறும் 130 கம்பெனிகள்தான் லாபத்துல இருந்துருக்கு. இதுக்கு என்ன அர்த்தம்னா, என்விடியா (Nvidia) மாதிரி விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில AI கம்பெனிகளோட வளர்ச்சியே மொத்த மார்க்கெட்டையும் தூக்கி நிறுத்திட்டு இருக்கு. இது ரொம்ப ஆபத்தான ஒரு நிலைமை.
இந்த AI பபுள் அமெரிக்காவுல வெடிச்சா, நமக்கு என்னன்னு கேட்டீங்கன்னா, அங்கதான் நமக்கும் பிரச்சனை இருக்கு. 2000 டாட்-காம் கிராஷ் அப்போ, அமெரிக்க மார்க்கெட் 45-50% விழுந்தப்போ, நம்ம நிஃப்டி 50-யும் 45% சரிஞ்சது. 2008 ஹவுசிங் கிராஷ்ல, நம்ம மார்க்கெட் 53% விழுந்துச்சு. அதனால, அங்க ஒரு சரிவு வந்தா, அது இந்தியாவையும் கண்டிப்பா பாதிக்கும்.
வரலாறு என்ன சொல்லுதுன்னா, மார்க்கெட் எத்தனை தடவை விழுந்தாலும், அது திரும்பவும் எழுந்து நின்னுருக்கு. இந்த மாதிரி சரிவுகள், சரியா யோசிச்சு முதலீடு பண்றவங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமையும். முக்கியமா, எல்லாரும் போறாங்கன்னு கண்மூடித்தனமா முதலீடு செய்யாம, என்ன நடக்குதுன்னு புரிஞ்சுகிட்டு, உங்க சொந்த ஆராய்ச்சிக்குப் பிறகு முதலீடு பண்றதுதான் புத்திசாலித்தனம்.