

சர்வதேச ஓவியச் சந்தையின் இரு துருவங்கள்!
ஓவியங்கள் வெறுமனே வர்ணப்பசைகளில் தோய்ந்த தூரிகையின் நர்த்தனங்கள் மட்டுமல்ல; அவை அவற்றை வாங்கி சேகரிப்பவர்களின் பெருமைக்குரிய சொத்தாகவும், மிக முக்கியமான முதலீட்டு வடிவமாகவும் உலகெங்கும் பார்க்கப்படுகிறது. ஆனால், இன்றைய உலக ஓவியச் சந்தையானது, முற்றிலும் முரண்பட்ட இரண்டு துருவங்களை ஒரே நேரத்தில் பிரதிபலிக்கிறது. ஒருபுறம், சர்வதேச விற்பனை வீழ்ச்சியைக் காண, மறுபுறம், இந்திய ஓவியச் சந்தை வரலாறு காணாத வேகத்தில் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது!
சர்வதேச ஓவியச் சந்தையின் மந்தநிலை
உலகளாவிய ஓவிய சந்தை (International Art Market) சமீப காலமாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. ஓவிய ஏலங்களில் பிரபல ஓவியர்களின் படைப்புகளின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது மட்டுமல்லாமல் அப்படைப்புகளின் மதிப்பு தளர்ச்சியடைந்து, ஒட்டுமொத்த உலகளாவிய ஓவிய விற்பனையே தற்போது சரிவை நோக்கிப் பயணிக்கிறது. கடந்த ஆண்டு, உலக வர்த்தக ஓவிய விற்பனை 12% வீழ்ச்சியைக் கண்டது. அதற்கு முந்தைய ஆண்டில் 4% சரிவை காட்டியது.
இந்த மந்தநிலை உலகின் பல முதன்மை சந்தைகளில் நீடிக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய ஓவியச் சந்தையாக விளங்கும் அமெரிக்காவில் கூட, விற்பனை 9% குறைந்தது. ஆனால், சீனாவின் இதன் வீழ்சிதான் அதிர்சியை கொடுத்தது. ஆம், Art Basel & UBS Global Art Market Report 2025 தரவின்படி அங்கு விற்பனை 33% வீழ்ச்சியடைந்தது. அதே நேரத்தில், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் தலா 10% சரிவைக் கண்டன. பல பெரிய வர்த்தக மையங்களின் ஓவிய சந்தைகள் நெருக்கடிகளைச் சந்திக்கும் இந்தச் சூழலில், இந்தியாவின் ஓவியச் சந்தை மட்டும் தனித்து நின்று செழித்து வருகிறது.
இந்திய ஓவியச் சந்தையின் பிரம்மாண்டமான எழுச்சி!
இந்தியாவின் ஓவியச் சந்தை அண்மைக் காலமாக மிகப்பெரிய எழுச்சியை அடைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஏல இல்லங்களான பண்டோல்ஸ் (Pundole’s), கிறிஸ்டீஸ் மற்றும் சோதேபிஸ் (மும்பை கிளை) ஆகியவற்றின் மொத்த ஏல விற்பனைகள் 2020 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளுக்கிடையில், இரு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. அதாவது, 41 மில்லியன் டாலரிலிருந்து 92 மில்லியன் டாலராக உயர்ந்தது!
இந்த எழுச்சி ஏல வீடுகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. டெல்லி, மும்பாய், சென்னை மற்றும் பெங்களூர் போன்ற இந்தியாவின் எந்தவொரு பெரிய நகரத்தை எடுத்துக் கொண்டாலும், அங்கே உயிரோட்டமுள்ள ஓவியத் தளங்கள் (Vibrant Art Scenes) உள்ளன. கடந்த பத்தாண்டுகளில், இந்தச் சந்தைகள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளன. புதிய ஓவிய மையங்கள் மற்றும் கண்காட்சிகள் திறக்கப்பட்டு, ஓவியசந்தையை மேலும் விரிவாக்கியுள்ளன.
ஆன்லைன் ஓவிய சந்தையான ‘ஆர்ட்ஸி’ (Artsy) கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் இந்தியக் கலைஞர்களின் படைப்புகளுக்கான மவுசு அதன் தளத்தில் மிகப்பெரிய உயர்வைச் சந்தித்துள்ளது.
ஓவிய விற்பனையில் சாதனைகள்; சில உதாரணங்கள்:
இந்தியாவின் ஓவியச் சந்தையின் இந்த அசுர வளர்ச்சிக்கு சமீபத்திய விற்பனைச் சாதனைகளே பிரதான சான்றாகத் திகழ்கின்றன.
1. அமிர்தா ஷெர்-கில்லின் ‘தி ஸ்டோரி டெல்லர்’ ஓவியம்: 1937-ஆம் ஆண்டைச் சேர்ந்த அமிர்தா ஷெர்-கில்லின் (Amrita Sher-Gil) ‘தி ஸ்டோரி டெல்லர்’ (The Storyteller) என்ற ஓவியம் 2023-ஆம் ஆண்டில் ஏலத்திற்கு விடப்பட்டது. அந்த ஏலத்தில், அது $7.45 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டு, அதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட இந்தியக் கலைஞரின் ஓவியப் படைப்புக்கான புதிய சாதனையைப் படைத்தது!
2. எம்.எஃப். ஹுசைனின் ‘கிராத்ரா’ ஓவியம்: ‘தி ஸ்ரோரி டெல்லரின்‘ சாதனை வெகு காலம் நீடிக்கவில்லை. உலகப் புகழ்பெற்ற மறைந்த ஓவியர் எம்.எஃப். ஹுசைனின் (MF Husain) 1954-ஆம் ஆண்டைச் சேர்ந்த ‘கிறம்ராத்ரா’ (Gram Yatra) ஓவியம் நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டீஸ் ஏலத்தில் விடப்பட்டபோது, அதன் மதிப்பு $3.5 மில்லியன் டாலராக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. எனினும், ஐந்து முதலீட்டார்களால் இது தீவிரமாகப் போட்டியிடப்பட்டு, இறுதியில் $13.8 மில்லியன் டாலருக்கு விற்பனையானது. இதன்மூலம், உலக அளவில் ஏலத்தில் விற்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த இந்திய நவீன ஓவியப் படைப்பாக (Modern Artwork) அது மாறியது.
3. வி.எஸ். கெய்தோண்டேயின் ஓவியப் படைப்பு: சமீபத்தில், வி.எஸ். கெய்தோண்டேயின் (VS Gaitonde) ஒரு ஓவியப் படைப்பு Saffronart auctionஇல் ஏலத்தில் விற்கப்பட்டு, $7.57 மில்லியன் டாலரைப் ஈட்டிக் கொடுத்தது. இது ஏலத்தில் விற்கப்பட்ட இரண்டாவது மிகவும் விலையுயர்ந்த இந்திய ஓவியப் படைப்பாகும்.
இந்த எழுச்சிக்குக் காரணம்தான் என்ன?
இந்திய ஓவியச் சந்தை செழித்து வளர்வதற்கான மிக முக்கியமான காரணம், இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி என்று வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கொவிட் ஆண்டுகளைத் தவிர்த்து, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2009-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் சராசரியாக 7%க்கும் அதிகமாக வளர்ந்துள்ளது.
2025-2026 காலப்பகுதியில் இது 9.7% ஆக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கணிசமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, ஓவியக் கலையின் மீதான ஆர்வம் மற்றும் அதை நுகரும் திறன் ஆகியவையும் உள்நாட்டு ஓவிய முதலீட்டார்களிடையே அதிகரித்துள்ளன. மேலும் ஓவிய வர்த்தகத்திற்கான விற்பனை வரி (ஜி.எஸ்.டி) சமீபத்தில் குறைக்கப்பட்டது. இது வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இதனால், உள்நாட்டு மற்றும் சர்வதேச ஓவிய ரசிகர்கள் அல்லது முதலீட்டார்கள் இந்தியாவின் நவீன ‘ஓவிய மேதைகளின்’ (Modern Masters) - எம்.எஃப். ஹுசைன், சௌசா (F.N.Souza), மற்றும் எஸ்.ஹெச். ராசா (SH Raza) - போன்றோரின் படைப்புகளை வாங்குவதற்காக ஏலத் தளங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
உலகளாவிய ஓவிய சந்தை ஒரு மந்தநிலையை எதிர்கொள்ளும் நேரத்தில், இந்தியாவின் ஓவியச் சந்தை செழித்து வருகிறது. இந்தப் போக்கு தொடருமானால், இது இந்தியக் ஓவியக் கலை வரலாற்றின் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை!