மாதச் சம்பளக்காரர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது EMI தான். எப்போது தான் இந்த EMI முடியுமோ என்று தினந்தினம் தங்களையே நொந்து கொள்வார்கள். வருமானத்தை விடவும் மாதாமாதம் செலுத்த வேண்டிய EMI அதிகமாக இருக்கும் நபர்களுக்கு உதவும் சில குறிப்புகளை இப்போது காண்போம்.
தேவைகள் அதிகரித்துள்ள இன்றைய நிலையில், வீண் செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். மாதச் சம்பளம் பற்றாக்குறையாக இருப்பதால், பலரும் கடன் வாங்க வேண்டிய சூழலில் தத்தளிக்கின்றனர். வங்கிகளும் வாடிக்கையாளர்களைக் கவர வீட்டுக் கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு கடன் மற்றும் சில கடன்களை அறிமுகப்படுத்தி, மாதச் சம்பளம் வாங்குவோரை EMI கட்ட வைக்கிறது. EMI தொகை நமது வருமானத்திற்குள் இருந்தால் ஓரளவு சமாளித்து விடலாம். அதுவே நம் வருமானத்தை விடவும் அதிகமானால், EMI உடன் வீட்டுத் தேவைகளை எப்படி சமாளிப்பது என்று மாதம் முழுக்க மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்வார்கள்.
இதனால் கடன் மேல் கடன் வாங்கி முழுநேர கடனாளியாகவே மாறி விடுகின்றனர். நமது வளர்ச்சிக்காக உழைப்பது மாறி, வட்டி கட்டவே நாம் தனியாக உழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். உதாரணத்திற்கு ஒருவர் மாத ஊதியமாக ரூ.50,000 வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். அதில் வீட்டுக் கடனுக்கு ரூ.30,000, தனிநபர் கடனுக்கு ரூ.15,000 மற்றும் இதர கடன்களுக்கு ரூ.10,000 என EMI கட்டினால், வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி ஊசெய்ய மேலும் கடன் வாங்க வேண்டியிருக்கும். இந்த நிதி நெருக்கடியைத் தவிர்க்க நாம் இனியாவது கவனமுடன் இருக்க வேண்டும்.
முதலில் எத்தனைக் கடன்கள் உள்ளன; மொத்தமாக மாதத்திற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும்; அதில் எந்தக் கடனிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை கணக்கெடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் கடன் வாங்கி மாட்டிக் கொள்வதை விட, உங்களிடம் இருக்கும் தங்க நகைகள் மற்றும் வாகனங்களை விற்று, அதிக வட்டி வரும் கடன்களை முதலில் அடைக்கலாம். மேலும், அதிக கடனில் மாட்டித் தவிப்பதை விட சிறிய அளவிலான சொத்துகளை விற்று கடனை அடைக்க முயற்சிக்கலாம்.
உங்களது மாத செலவுகளைக் குறைத்து, பட்ஜெட் போட்டு செலவுகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் வீண் செலவுகளைக் குறைக்க முடியும். மேலும், பழைய கடன்களை முடிக்கும் வரை புதிய கடன்களை வாங்காதீர்கள். இவை அனைத்தையும் செய்த பின் கணக்கிட்டுப் பார்த்தால், நிச்சயமாக EMI குறைந்திருக்கும்.
தங்கமோ, வாகனமோ இல்லையெனில் கடன் வாங்கிய வங்கிக்கு நேரடியாகச் சென்று, கடனுக்கான தவணைக் காலத்தை நீட்டிக்கச் செய்யலாம். இதன்மூலம் மாதத் தவணை குறையும். கடன் வாங்கும் சூழல் உங்களுக்கு ஏற்பட்டால், நமது வருமானத்திற்கு ஏற்றபடி, குறைவாக வாங்கலாம்.