
பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் என்கிற தனிமனிதநிதிப் புத்தகம் மிகவும் பிரபலம். அதில் ஒரு கதாபாத்திரம் காப்பீடு என்ற ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகிறது. எதிர்காலத்தில் காப்பீடு வரும் என்று நம்பிக்கை கொள்கிறது. இதன் மூலம் காப்பீடு எவ்வளவு அவசியமானது என்பது நமக்குத் தெரிய வருகிறது.
காப்பீடு என்றால் என்ன ?
முதலீடு என்பது சம்பாதித்த பணத்தைப் பெருக்குவது. காப்பீடு என்பது சம்பாதித்த பணத்தைக் காப்பது. காப்பீடின் மூலம் மிகப் பெரிய செலவுகளைக் கடன் வாங்காமல் நம்மால் எதிர்கொள்ள முடியும். உதாரணமாக, மருத்துவக் காப்பீடு மருத்துவம் சார்ந்த பெரிய செலவுகளில் இருந்து நம்மைக் காக்கிறது. வாகனக் காப்பீடு வாகனம் சார்ந்த பெரிய செலவுகளில் இருந்து நம்மைக் காக்கிறது. ஆயுள் காப்பீடு குடும்பத்தின் சம்பாதிக்கும் நபர் இறந்து விட்டால் குடும்பத்தின் பெரிய செலவுகளிலிருந்து குடும்பத்தைக் காக்கிறது.
ஆயுள் காப்பீடில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக, முழு வாழ்க்கைக்கான ஆயுள் காப்பீடு (whole life insurance), காலவரையறை ஆயுள் காப்பீடு (Term insurance), குறிப்பிட்ட பணத்தைத் திரும்ப தரும் ஆயுள் காப்பீடு (Endowment plans). இந்தப் பதிவில் காலவரையறைக் காப்பீடுத் திட்டம் அதாவது டெர்ம் இன்சூரன்ஸ் பற்றிப் பார்ப்போம்.
காலவரையறைக் காப்பீடுத் திட்டம் என்றால் என்ன?
காப்பீடின் காலவரையறைக் காலத்தில் காப்பீடு எடுத்த நபர் இறந்து விட்டால் காப்பீடுத் தொகை கொடுக்கப்படும். ஒருவேளை காப்பீடுக் காலவரையறையில் காப்பீடு நபர் இறக்காவிட்டால் இறுதியில் எந்த ஒரு பணமும் கிடைக்காது. இத்தகைய காலவரையறைக் காப்பீடுத் திட்டம் சிறப்பானது. ஏனென்றால், இது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும்.
உதாரணத்திற்கு 30 வயது நபர் ஒரு கோடி ரூபாய்க்கு காலவரையறைக் காப்பீடு திட்டம் எடுத்தால் வருடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் சம்பாதிக்கும் நபர் திடீரென்று இறந்து விட்டால் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் கிடைக்கும். இது சம்பாதிக்கும் நபர் இல்லாத பட்சத்தில் நிதி சார்ந்த செலவுகளைக் குடும்பம் சமாளிக்க உதவும்.
காலவரையறைக் காப்பீடுத் திட்டம் எவ்வளவு எடுப்பது?
சம்பாதிக்கும் நபர் வருடாந்திரம் பணம் ஈட்டுவதைப் போல், குறைந்தபட்சம் 15 - 20 மடங்கு எடுத்துக் கொள்ளுதல் நலம். சம்பாதிக்கும் நபருக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன், குழந்தைகளின் எதிர்கால மேல்படிப்பு போன்ற பல்வேறு செலவுகள் இருப்பின், 20 முதல் 25 மடங்கு எடுத்துக் கொள்ளுதல் நலம். ஓய்வு காலம் 60 வயது, சம்பாதிக்கும் நபர் 30 வயது எனில், அடுத்த 30 வருடங்களுக்கான செலவுகளைக் கணக்கில் கொண்டு, வருடாந்திரம் சம்பாதிக்கும் பணத்தைப் போல், 30 மடங்கு எடுத்துக் கொள்ளுதல் இன்னும் நலம்.
அதிக காப்பீடுத் தொகை எனில், இரண்டு நிறுவனத்தில் பிரித்து எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக, காப்பீடுத் தொகை 2 கோடி ரூபாய் எனில், இரண்டு நிறுவனங்களில் 1 கோடி என எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் குடும்பத்தின் நிதி தேவைகள் அதிகரித்தால், காப்பீடுத் தொகையை அதிகரித்துக் கொள்ளலாம்.
காலவரையறைக் காப்பீடுத் திட்டம் எப்போது எடுப்பது ?
சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே எடுப்பது நலம். பெற்றோர்கள் சம்பாதிக்கும் நபரைச் சார்ந்து உள்ளனர். எதிர்காலத்தில் திருமணமான பிறகு, மனைவி, குழந்தைகள் சம்பாதிக்கும் நபரைச் சார்ந்து உள்ளனர். எனவே, சீக்கிரமாக எடுப்பதென்பது நலம். இளவயதில் காப்பீடுத் தவணையும் குறைவாக இருக்கும்.
காலவரையறைக் காப்பீடுத் திட்டம் எங்கு எடுப்பது ?
எல்லா காப்பீடு நிறுவனங்களும் இந்திய காப்பீடு ஒழுங்கமைப்பு மற்றும் வளர்ச்சி ஆணையமான ஐஆர்டிஏ-யின் (IRDA - Insurance regulatory and development authority of India) கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. எனவே, உங்களது காப்பீடு பாதுகாப்பானது. அவற்றில், குறைந்த விலையில் காப்பீடுத் தவணை வழங்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காப்பீடு நிறுவனங்களின் காப்பீடு கோரல் பூர்த்தி செய்யும் விகிதத்தை (Claim Settlement Ratio) வருடாவருடம் ஐஆர்டிஏ வெளியிடுகிறது. குறைந்தபட்சம் 95% காப்பீடு கோரல் பூர்த்தி விகிதத்தைக் கொண்ட நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
காப்பீடுகளை ஒப்பிடும் பாலிசி பஜார் போன்ற இணையத்தில் காப்பீடுகளை ஒப்பிட்டு வாங்குவது நலம். இணையத்தில் விலை குறைவாக இருக்கும். எடுக்கும் போது, எல்லா விபரங்களையும் சரியாக குறிப்பிட வேண்டும். அதன் மூலம், எதிர்காலத்தில் காப்பீடு கோரினால் ஏதேனும் பிரச்சனைகள் வருவதைத் தவிர்க்க முடியும்.
காப்பீடுத் தவணையை வருடா வருடம் தானியங்கி முறையில் எடுக்குமாறு வைத்துக் கொண்டால், காப்பீடுத் தவணையை எளிதாக செலுத்த உதவியாக இருக்கும். காப்பீடு வருடா வருடம் செலுத்தாத பட்சத்தில், காப்பீடு காலாவதி ஆகிவிடும். எந்த ஒரு மேலடுக்குகள்(riders) அற்ற காலவரையறைக் காப்பீடுத் திட்டம் போதுமானது.
நீங்கள் சீக்கிரமாக காலவரையறைக் காப்பீடுத் திட்டம் எடுக்க வாழ்த்துகள்.