
நமது அவசரக்கால நிதியை நாம் எப்பொழுதுமே போதுமான அளவு வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கானச் செலவுகளை அவசரக்கால நிதியாக வைத்திருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கான செலவை வைத்திருந்தால் இன்னும் நலம். ஏதேனும் காரணங்களுக்காக அவசரக்கால நிதியைப் பயன்படுத்த நேர்ந்தால் முதல் வேலையாக அவசரக்கால நிதியை அதன் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதன் மூலமே நாம் நமது அவசரக்கால நிதியை அவசரத் தேவைகளின் போது மறுபடி பயன்படுத்த முடியும்.
இதனைக் குறித்த ஓர் ஈசாப் கதையைப் பார்ப்போம்.
அது ஒரு போர்க்காலம். ஒரு குதிரை வீரனிடம் ஒரு போர்க் குதிரை இருந்தது. அந்தப் போர்க் குதிரையை அவன் தனது சகஉதவியாளனாகக் கருதி அதற்கு புல்லும் மற்றும் தானியங்களும் உண்ணக் கொடுத்தான். கஷ்டப்பட்டு மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டான்.
போர்க்காலம் முடிந்தது. தனது போர்க் குதிரைக்கு உமியை உண்ணக் கொடுத்தான். கனமான மரக்கட்டைகளைச் சுமக்க வைத்தான். கடுமையாக அதனை வேலை வாங்கினான். அதனை மோசமாக கவனித்துக் கொண்டான்.
மறுபடியும் போர்க்காலம் வந்தது. போர் முரசு கொட்டிய பொழுது, உடனே தனது போர்க் கவசங்களை அணிந்து கொண்டு, தனது போர்க்குதிரைக்கும் இரும்புக் கவசங்களை அணிவித்து போர்க்குதிரையின் மீது ஏறி அமர்ந்தான். அந்தோ! போர்க்குதிரை உடனே தரையில் அமர்ந்து விட்டது. அதனால், இந்த கனத்தினைச் சுமக்க முடியவில்லை.
தனது முதலாளியைப் பார்த்து போர்க்குதிரை பின்வருமாறு கூறியது:
'நீங்கள் போருக்கு காலாட்படை வீரனாகத்தான் செல்ல வேண்டும். குதிரையான என்னை நீங்கள் கழுதையாக மாற்றி விட்டீர்கள். ஒரே வினாடியில் கழுதையான நான் குதிரையாக மாறுவேன் என்று எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும்?'
இங்கு போர்க்குதிரை என்பது அவசரக்கால நிதியைப் போன்றது. போர் என்பது அவசரக்காலத்தைப் போன்றது. அந்த அவசரக்கால நிதியைக் குதிரைப்படை வீரன் போஷாக்காக வைத்திருந்த வரையில் அந்த அவசரக்கால நிதி போர் என்ற அவசரக்காலத்தில் அவனுக்கு உதவியது. போர் முடிந்த பிறகு, அமைதிக் காலத்தில் அவன் அந்த போர்க் குதிரையை நன்கு கவனிக்கத் தவறி விட்டான். மோசமாக கையாண்டான். அவசரக்கால நிதி முன்பு போல் போஷாக்காக இல்லை. எனவே மறுபடியும் அவசரக்காலம், அதாவது போர் வந்த போது அவனால் அந்த போர்க்குதிரையை, அதாவது அவசரக் கால நிதியைப் பயன்படுத்த முடியவில்லை.
இரண்டு வகையான செலவுகள் உண்டு.
1. எதிர்பார்த்த செலவுகள் - வருடா வருடம் வருகின்ற தீபாவளி சார்ந்த செலவுகள், பள்ளிக் குழந்தைகளுக்கு வருடாந்திர பள்ளிக் கட்டணச் செலவுகள்
2. எதிர்பாராத செலவுகள் - திடீரென வீட்டில் சம்பாதிக்கும் நபர் உடல் நலம் குன்றுவது, வீட்டில் திடீரென செய்ய வேண்டிய மராமத்து வேலைகள், வீட்டில் திடீரென வாகனம் பழுதடைவது
எதிர்பார்த்த செலவுகளுக்கு நாம் முன்கூட்டியே பணத்தைச் சேமித்து முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டின் காலவரையறை எதிர்பார்த்த செலவுகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்க வேண்டும். எதிர்பாராத செலவுகளுக்கு நாம் அவசரக்கால நிதியை வைத்திருக்க வேண்டும். எதிர்பாராத செலவுகளில் திடீரென பணம் தேவைப்படுவதால், அந்த பணமானது எளிதாக எடுக்கும் வகையில் வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 முதல் 6 மாதங்களுக்கான செலவுகள் அல்லது இன்னும் நலமாக 1 வருடத்திற்கான செலவுகள் என்று போதுமான அளவு இருக்க வேண்டும். அவசரக் காலங்களில் அருகில் உள்ள வங்கியின் தானியங்கி பணப் பொறிக்குச் சென்று எளிதாக எடுத்துப் பயன்படுத்துவதைப் போல், வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருக்க வேண்டும். இதனை முதலீடு செய்யக்கூடாது. ஏனென்றால், முதலீடு செய்தால் நம்மால் அவசரத் தேவைக்கு உடனே எடுக்க முடியாது.
ஒருவேளை அவசரக்காலநிதியைப் பயன்படுத்தினால், முதல் வேலையாக அதனைப் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அது போதுமான அளவு பழையபடி இருக்கும். ஏனென்றால், அவசர காலம் எப்பொழுது வேணாலும் திடீரென வரலாம். மாதா மாதம் அவசர கால நிதிக்குப் பணத்தை ஒதுக்கி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். பின்னரே, மறுபடி முதலீடுகளுக்குப் பணத்தை ஒதுக்க வேண்டும். அவசரக்கால நிதி என்பது நமது நிதிக்குக் காப்பீடு போன்றது. அது போதுமான அளவு இல்லாவிட்டால், நாம் கடன் வாங்க நேரலாம் அல்லது நமது முதலீடுகளில் கை வைக்க நேரலாம்.
அவசரக் கால நிதியைப் போஷாக்காக வைத்திருப்போம். ஒருவேளை பயன்படுத்த நேர்ந்தால், மறுபடியும் பழைய போஷாக்கான நிலைக்கு கொண்டு வருவோம்.