எலெக்ட்ரிக் கார்களுக்கு செக் வைத்த கியா! ரூ.15 லட்சத்தில் கெத்தாக அறிமுகமாகும் சைரோஸ் ‘Syros EV’.

கியாவின் ‘சைரோஸ் இவி’ காரில் (Kia Syros EV) உள்ள தொழில்நுட்ப மற்றும் வசதிகள், வேரியண்ட்டுகள் குறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம் வாங்க.
Kia Syros EV |கியா சைரோஸ்
Kia Syros EV |கியா சைரோஸ்image credit- autocarindia.com
Updated on

கியா சைரோஸ் எலெக்ட்ரிக் (Kia Syros EV) கார், ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் அறிமுகமாகிறது. 42 kWh மற்றும் 51.4 kWh பேட்டரி தேர்வுகளில் கிடைக்கும் இந்த கார், முழு சார்ஜில் அதிகபட்சமாக 526 கி.மீ தூரம் வரை இயங்கும் ஆற்றல் கொண்டது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கியா (Kia Corporation) என்பது தென் கொரியாவின் சியோலை தலைமையிடமாகக் கொண்ட ஒரு முன்னணி பன்னாட்டு வாகனத் தயாரிப்பு நிறுவனமாகும். ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனம், இந்தியச் சந்தையில் 'செல்டோஸ்' (Seltos), 'சொனெட்' (Sonet), மற்றும் சமீபத்திய 'சைரோஸ்' (Syros EV) போன்ற பிரபலமான கார்களை அறிமுகப்படுத்தி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கியா கார்கள் நவீன தொழில்நுட்பம், ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்குப் பெயர் பெற்றவை.

இந்தியாவில் மின்சார எஸ்யூவி சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கியா தனது இரண்டாவது பொது மக்கள் பயன்பாட்டு மின்சார காரான ‘சைரோஸ் இவி’ காரை (Kia Syros EV) இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கியா சைரோஸ் இவி, வாடிக்கையார்களை கவரும் வகையில், பாக்ஸி (Boxy) SUV வடிவமைப்பு, நீண்ட பயண தூரம், பிரீமியம் கேபின், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பல்வேறு வேரியண்ட் தேர்வுகள் ஆகியவற்றுடன் வந்துள்ளது.

சைரோஸ் EV காரின் பிரம்மாண்ட பேட்டரி மற்றும் மைலேஜ் திறன்:

அதிக தூரம் செல்லும் திறன், நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களால் கவனம் ஈர்த்துள்ள இந்த காரின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது. ரூ.25000 செலுத்தி இந்த காரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காரில் உள்ள தொழில்நுட்ப மற்றும் வசதிகள், வேரியண்ட்டுகள் குறித்த விபரங்களை கியா இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த கார் மொத்தம் 7 வேரியண்ட்களிலும் 42 கிலோவாட்-மணி(kWh) மற்றும் 51.4 கிலோவாட்-மணி(kWh) திறன் கொண்ட இரண்டு பேட்டரி தேர்வுகளிலும் கிடைக்கிறது. முழு சார்ஜில், 42 கிலோவாட்-மணி பேட்டரி(kWh) கொண்ட மாடல் 443 கி.மீ.வரையும் 51.4 கிலோவாட்-மணி(kWh) பேட்டரி கொண்ட மாடல் 543 கி.மீ. வரை பயணிக்கும் என அந்நிறுவனம் சான்றளிக்கப்பட்டுள்ளது.

சிறிய பேட்டரி (42 kWh) கொண்ட மாடல் 135 குதிரைத்திறனையும், பெரிய பேட்டரி (51.4 kWh) கொண்ட மாடல் 171 குதிரைத்திறனையும் உருவாக்குகிறது. இரண்டிலும் 255 நியூட்டன் மீட்டர் இழுவிசை கிடைக்கிறது. பெரி பேட்டரி மாடல் 0 முதல் 100 கி.மீ. வேகத்தை வெறும் 8.1 விநாடிகளில் எட்டும்.

இந்த பிரிவில் அதிக பயண தூரம் வழங்கும் கார்களில் இதுவும் ஒன்றாகும். இந்த காரின் பேட்டரிகளை சார்ஜ் செய்ய 11 கிலோவாட் ஏசி சார்ஜரும், 100 கிலோவாட் டிசி விரைவு சார்ஜரும் வழங்கப்படுகிறது. 100 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் வெறும் 39 நிமிடங்களில் 10% முதல் 80% வரை சார்ஜ் செய்துவிடலாம் என்றும் கியா நிறுவனம் உத்திரவாதமளித்துள்ளது.

Kia Syros EV|கியா சைரோஸ்
Kia Syros EV|கியா சைரோஸ்image credit-kia.com

பெட்ரோல் மாடலுடன் ஒப்பிடும்போது முன்பக்கத்தில் சார்ஜிங் போர்ட், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், புதிய அலாய் சக்கரங்கள் இடம் பெற்றிருந்தாலும், உயரமான தோற்றம் மற்றும் ஒளிவிளக்கு வடிவமைப்பு பெரும்பாலும் பெட்ரோல்-டீசல் காரை போல தொடர்கிறது.

காரின் உட்புறத்தில் இரண்டு 12.3 அங்குல திரைகள், பெரிய 30-இன்ச் டிஸ்ப்ளே (டாஷ்போர்டு), காற்றோட்ட வசதி கொண்ட இருக்கைகள் (Ventilated Seats), சாய்ந்து நகர்த்தக்கூடிய பின்புற இருக்கைகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, தனி காலநிலை கட்டுப்பாட்டு திரை, வளர்லெஸ் சார்ஜர், 8 ஸ்பீக்கர் கார்டன் ஒலியமைப்பு, 64 நிற சுற்றுப்புற விளக்குகள் போன்ற வாடிக்கையாளர்கள் விரும்பும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இந்த காரில் இடம் பெற்றுள்ளது சிறப்பு அம்சமாகும்.

இதையும் படியுங்கள்:
நடுத்தர மக்களின் எலக்ட்ரிக் கார் கனவு நனவாகிறது! பட்ஜெட் விலையில் Tata Tiago EV Facelift!
Kia Syros EV |கியா சைரோஸ்

16 லிட்டர் முன்பக்க சேமிப்பு பகுதி, வாகனத்தில் இருந்து வெளிப்புற சாதனங்களுக்கு மின்சாரம் வழங்கும் வசதி, மீளுருவாக்க பிரேக்கிங், தானியங்கி கதவு கைப்பிடிகள், இரட்டை டாஷ் கேமரா, லெவல் 2 ADAS பாதுகாப்பு தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா மற்றும் பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் சாவி, இரண்டாம் நிலை ஓட்டுநர் உதவி பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல கூடுதல் அம்சங்கள், எலெக்ட்ரிக் சைரோஸ் காருக்கு வழங்கப்பட்டுள்ளன.

சைரோஸ் EV விலை மற்றும் முன்பதிவு பற்றிய முழு விவரங்கள்:

மேலும் கியா சைரோஸ் இவிக்கு 15 ஆண்டுகள் அல்லது வாழ்நாள் முழுவதும் பேட்டரி வாரண்டி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த தகவலை கியா நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.15 லட்சம் முதல் தொடங்கி, டாப் வேரியண்ட் .20 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
எலெக்ட்ரிக் கார் வாங்க போறீங்களா ? கொஞ்சம் யோசிங்க... 15,550 சார்ஜிங் நிலையங்கள் செயல்பாட்டில் இல்லையாம்..!
Kia Syros EV |கியா சைரோஸ்

கியா சைரோஸ் இவி, டாடா நெக்ஸான் EV, எம்ஜி விண்ட்சர் EV மற்றும் மஹிந்திரா XUV 3XO EV ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள், பேட்டரி செயல்திறன் மற்றும் சார்ஜிங் நேரங்களை துல்லியமாக புரிந்து கொள்வதன் மூலம், உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த எலெக்ட்ரிக் காரை எவ்வித குழப்பமுமின்றி தேர்வு செய்ய முடியும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com