

ஆயுள் காப்பீடு (Life Insurance) என்பது காப்பீடுதாரர் இறக்கும் பட்சத்தில், அவரது குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் ஒரு ஒப்பந்தமாகும். இதில் காப்பீட்டு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது வழக்கமான தவணைகளை நாமினிக்கு செலுத்துகிறது. இது எதிர்பாராத இழப்புகளை ஈடு செய்வதுடன் குடும்பத்தின் எதிர்கால நிதித் தேவைகளுக்கும், கனவுகளை நனவாக்கவும் உதவுகிறது. பிரீமியம் செலுத்தி, பாலிசி நடைமுறையில் இருக்கும்போது, காப்பீடுதாரர் இறக்க நேர்ந்தால் இந்த நன்மை கிடைக்கும்.
ஆயுள் காப்பீடு (Life Insurance) செய்த தனிநபர் ஒருவர் இறந்து போனால், அவரை சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு ஏற்படும் நிதி சார்ந்த இழப்புகளை காப்பீடு ஈடுகட்டும். எனவே, இது குடும்ப பாதுகாப்பு அம்சமாக விளங்குகிறது. எனவே, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் ஆயுள் காப்பீடு செய்வதன் மூலம் அவரை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி பாதுகாப்பு கிடைக்கிறது.
ஆயுள் காப்பீட்டின் வகைகள்:
a) கால காப்பீடு (Term Insurance):
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (எடுத்துக்காட்டாக பத்து, இருபது, முப்பது ஆண்டுகள்) மட்டும் பாதுகாப்பு அளிக்கும், எளிய மற்றும் குறைந்த பிரீமியம் கொண்ட பாலிசி. பாலிசிதாரர் அந்தக் காலத்திற்குள் இறந்தால், நாமினிக்கு பணம் கிடைக்கும்; இல்லையெனில், முதிர்வு பலன் எதுவும் இல்லை. இது மிகவும் மலிவான மற்றும் எளிமையான வகையாகும். இது குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் தரும். குடும்பத்திற்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்யும். இதுதான் உண்மையான ஆயுள் காப்பீடு என நிதி ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர்.
b) முழு ஆயுள் காப்பீடு (Whole Life Insurance):
பாலிசிதாரரின் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும். இதில் பணமதிப்பு (cash value) என்ற முதலீட்டுப் பகுதியும் அடங்கும். இதில் சேமிப்பும் காப்பீடும் கலந்திருக்கும். இது முதலீடாக பார்க்கப்படுகிறது. ஆனால் பாதுகாப்புக்கு மட்டுமே காப்பீட்டை பயன்படுத்துவது சிறந்தது என நிதி ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர்.
c) யூனிட் லிங்க்ட் இன்சூரன்ஸ் பிளான் (ULIP):
இதில் காப்பீட்டுடன் முதலீடும் இணைந்திருக்கும். பிரீமியம் தொகை பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும். இதனால் அதிக வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது. அதே சமயம் அபாயமும் உண்டு.
ஆயுள் காப்பீடு ஏன் அவசியம் தெரியுமா?
ஆயுள் காப்பீடு (Life Insurance) என்பது குடும்பத்தினருக்கு நிதி பாதுகாப்பை அளிக்கிறது.
குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.
வீட்டுக் கடன், தனிநபர் கடன் போன்ற நிலுவையில் உள்ள கடன்களை நம் குடும்பத்தினர் செலுத்த வேண்டியதில்லை. காப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்தி அவற்றை அடைக்கலாம். அதாவது கடன்கள் இருந்தால் அதை அடைக்க உதவுகிறது.
குறைந்த பிரீமியத்தில் பெரிய தொகைக்கான பாதுகாப்பை வழங்குகிறது.
சில பாலிசிகள் காப்பீட்டு பாதுகாப்புடன் சேமிப்பு மற்றும் முதலீட்டு அம்சங்களையும் கொண்டுள்ளன. இது செல்வத்தை உருவாக்க உதவுகிறது.
செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு வருமான வரிச் சட்டம் 80Cன் கீழ் வரி விலக்கு பெறலாம்.
ஓய்வூதியம், சொத்து உருவாக்கம் போன்ற நம் நிதி இலக்குகளுக்கு ஏற்பவும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஆயுள் காப்பீட்டை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
நம் குடும்பத்தின் தேவைகள் மற்றும் நிதி இலக்குகள்.
காப்பீட்டு நிறுவனத்தின் நம்பகத்தன்மை. நிதி ஆலோசகர்களின் உதவியுடன் நல்ல reputed நிறுவனத்தை தேர்வு செய்யவும்.
பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், பாலிசியின் விலக்குகள் (exclusions), காப்பீடு கிடைக்கும் காலம் மற்றும் பிற சட்ட விதிகள் அனைத்தையும் கவனமாக படிக்கவும்.
பிரீமியம் தொகை, செலுத்தும் முறை (மாதாந்திரம், காலாண்டு, ஆண்டுதோறும்) மற்றும் பிரீமியம் செலுத்தும் காலம் ஆகியவற்றை சரிபார்க்கவும்.
ஆயுள் காப்பீடு என்பது வருமானத்தைப் பெருக்க உதவுவதைவிட, குடும்பத்தின் பாதுகாப்பிற்கான ஒரு அத்தியாவசியமான கருவியாகும்.