

ஒருவர் வங்கிக் கடன் வாங்குவதற்கு அடிப்படைத் தேவைகளில் சிபில் ஸ்கோர் (CIBIL Score) தான் மிகவும் முக்கியமானது. சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தால், கடன் கிடைப்பதில் பெரிய அளவில் பிரச்சினை இருக்காது. சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும் பட்சத்தில், கடன் பெற முயன்றால் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்து விடும்.
தற்போதைய பொருளாதார சூழலுக்கும், நிதி நெருக்கடிக்கும் சிபில் ஸ்கோர் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் சிபில் ஸ்கோரில் பல நுணுக்கமான விஷயங்கள் அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் Special Mention Account (SMA).
இருப்பினும் இதுபற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நம்மில் பலரும் சிபில் ஸ்கோரை சரிபார்ப்பதே கிடையாது. சிபில் ஸ்கோரை சரிபார்க்கும் போது, எஸ்எம்ஏ மதிப்பீடும் திரையில் தெரியும். எஸ்எம்ஏ மதிப்பீடு என்பது என்ன? இதை ஏன் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என இப்போது பார்ப்போம்.
ஒரு வங்கியில் கடன் வாங்கி இருக்கும் ஒருவர் மாதந்தோறும் தவணையை செலுத்த வேண்டியது அவசியம். அவர் ஒரு தவணையை செலுத்தாமல் விட்டிருந்தால், அதனை அபராதத்துடன் அடுத்த தவணையின் போது செலுத்தி விடலாம். ஆனால் 90 நாட்களுக்கும் மேலாக ஒருவர் மாதத் தவணையை செலுத்தாத பட்சத்தில், அது வாராக்கடன் கணக்கில் வகைப்படுத்தப்படும்.
வங்கியில் கடன் வாங்கி விட்டு, மாதத் தவணையை செலுத்தாமல் இருப்பவர்களை SMA ரேட்டிங்கை வைத்து தான் மதிப்பிடுவார்கள். வங்கிக் கடன் வாங்கியவர் நிதி ஒழுக்கத்தில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை மதிப்பிட SMA ரேட்டிங் உதவுகிறது. இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், மாதத் தவணையை சரியாக செலுத்தாதவர்களுக்கு எழுப்பப்படும் ஒரு எச்சரிக்கை மணி தான் எஸ்எம்ஏ.
உங்கள் சிபில் ஸ்கோரில் ‘SMA-0’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தால், நீங்கள் மாதத் தவணையை கடந்த 30 நாட்களாக செலுத்தவில்லை என்று அர்த்தம். அதுவே 60 நாட்கள் வரை மாதத் தவணையை செலுத்தாமல் இருந்தால் SMA-1 எனவும், 90 நாட்கள் வரை செலுத்தாமல் இருந்தால் SMA-2 எனவும் வகைப்படுத்தப்படும்.
இந்த SMA மதிப்பீடுகள் குறித்த தகவலை கடன் கொடுத்த வங்கிகள், கிரெடிட் ஏஜென்சிகளுக்கு அனுப்பி விடும். நீங்கள் வாங்கிய வங்கி கடன் வாராக்கடனில் சேர்ந்து விடுவதற்கு முன்னரே, அது குறித்த எச்சரிக்கையை எழுப்பும் நடவடிக்கை தான் SMA.
நீங்கள் மாதத் தவணையை சரியாக செலுத்தி வரும் பட்சத்தில் SMA மதிப்பீடுகள் குறித்து கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை மாதத் தவணையை செலுத்த தவறினால், அதனை முடிந்த அளவிற்கு 90 நாட்களுக்குள் மீண்டும் செலுத்தி தங்களது கணக்கை சரிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் வங்கிகளில் உங்களால் அடுத்தடுத்த கடன்களைப் பெற முடியாமல் போய் விடும்.
மேலும் வங்கி கடனை விரைந்து அடைக்க வருடந்தோறும் EMI தொகையை உயர்த்துவது நல்ல யுக்தியாக இருக்கும். இதுதவிர மொத்தமாக ஒரு தொகை கிடைக்கும் போது, அசல் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தி, கடன் தொகையை குறைக்கலாம்.