
மதுரையில் வளர்ச்சியை காணும் தகவல் தொழில்நுட்பத் துறை.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பட்டியலில் சென்னை உள்ளது. இந்த நிலையில் மதுரையையும் தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய நகரமாக மாற்ற தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பின்னாக்கிள் இன்ஃபோடெக் நிறுவனம் வடபழஞ்சியில் 1.80 லட்சம் சதுர அடி பரப்பளவில் 120 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலை அமைந்துள்ளது. இதன் மூலம் 950 பேரருக்கு வேலை வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் 2026 ஆம் ஆண்டிற்குள் 6000 பேருக்கு வேலை வழங்கும் அளவிற்கு மற்றொரு நிறுவனத்தை தொடங்கவும் பின்னாக்கிள் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் வடபழஞ்சியில் சாய்சிஸ் நிறுவனத்தின் சார்பில் 1000 நபர்களுக்கு வேலை வழங்கக் கூடிய அளவில் புதிய தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. இது ஜனவரி 21ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தாவணி பகுதியில் 2 டைட்டில் பார்க்குகளை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக 5, 5 ஏக்கரில் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
முதல் டைட்டில் பார்க் கட்டிடத்தை 600 கோடி ரூபாய் செலவில் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 5,000 நபர்களுக்கு வேலை வழங்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல் மதுரையில் வேகம் எடுத்துள்ள மெட்ரோ பணிகள் ஐடி நிறுவனத்தினுடைய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இவ்வாறு கடந்த பத்து ஆண்டுகளில் மந்த நிலையில் இருந்த தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை தற்போது சூடு பிடித்து இருப்பதாக தொழில்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மதுரையை மையப்படுத்தி தகவல் தொழில்நுட்ப முதலீடுகளைப் பெற தமிழ்நாடு அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.