இந்தியாவில் உள்ள முன்னனி கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்புது மாடல்கள், மக்களை கவரும் அம்சங்கள், அதிநவீன தொழில்நுட்ப திறனுடன் கார்களை உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த வகையில் தற்போது சந்தைக்கு வந்துள்ள புதிய மாடல் கார்களை பற்றியும் அவற்றில் உள்ள சிறப்பு அம்சங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என் அடாஸ் வேரியண்டை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது 2.2 லிட்டர் எம் ஸ்டாலியன் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹவாக் டீசல் என்ஜின் என இரு தேர்வுகளில் கிடைக்கும்.
பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 203 பி.எஸ். பவரையும், 370 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். டீசல் என்ஜின் அதிகபட்சமாக 175 பி.எஸ். பவரையும், 370 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியும் உள்ளது. இதன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 400 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.
என் அடாஸ் வேரியண்டில் புதிய அம்சமாக லெவல் 2 அடாஸ் இடம் பெற்றுள்ளது. முன்புறம் வாகனம் மோதுவதை எச்சரிக்கும் அமைப்பு, தானியங்கி அவசர கால பிரேக்கிங், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட் பைலட் அசிஸ்ட், போக்குவரத்து சிக்னலை உணர்த்தும் அமைப்பு, ஹை பீம் அசிஸ்ட் உட்பட பல அம்சங்கள் உள்ளன. தொடக்க ஷோரூம் விலை ரூ.21.35 லட்சம்.
டாடா நிறுவனம், ஹாரியர் இ.வி.யை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஹாரியர் ரியர் வீல் டிரைவ் வேரியண்ட்களின் முழு விலை விவரங்களையும், இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி தொடக்க வேரியண்டான அட்வெஞ்சர் 65-யின் ஷோரூம் விலை சுமார் ரூ.21.49 லட்சம்.
இதுபோல், அட்வெஞ்சர் எஸ் 65 ரூ.21.99 லட்சம், பியர்லெஸ் பிளஸ் 65 ரூ.23.99 லட்சம், பியர்லெஸ் பிளஸ் 75 ரூ.24.99 லட்சம், டாப் வேரியண்டான எம்பவ்ர்டு 75 ரூ.27.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் 75 கிலோவாட் ஹவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 627 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என எம்.ஐ.டி.சி. சான்றளித்துள்ளது. 120 ஹவர் டி.சி. அதிவேக சார்ஜர் மூலம் 25 நிமிடங்களில் 20 முதல் 80 சதவிகிதம் சார்ஜ் செய்து விடலாம்.
ஆடி நிறுவனம், கியூ 7 சிக்னேச்சர் எடிஷனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 3.0 லிட்டர் வி6 டர்போ பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றுள்ளது. 100 கிலோ மீட்டர் வேகத்தை 5.6 வினாடிகளில் எட்டும் செயல் திறனுடன், அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் சீறிப்பாயும் வேகத்திறனையும் பெற்றுள்ளது. இதில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் ஸ்டாண்டர்டு அம்சமாக இடம்பெற்றுள்ளது. இதன் ஆரம்ப ஷோரூம் விலை ரூ. 99.81 லட்சம்.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், புதிய ஏ.எம்.ஜி. ஜி.டி.63 மற்றும் ஜி.டி.63 புரோ ஆகிய கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார்களில், 4.0 லிட்டர் டிவின் டர்போ சார்ஜ்டு வி8 என்ஜின் இடம் பெற்றுள்ளது. ஏ.எம்.ஜி. ஜி.டி. 63-யில் இந்த என்ஜின் 585 பி.எச்.பி. பவரையும், 800 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.
ஜி.டி.63 புரோவில் இது 612 பி.எச்.பி. பவரையும், 850 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு ஏ.எம்.ஜி. ஸ்பீடு ஷிப்ட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் 4 மேட்டிக் பிளஸ் ஆல்வீல் டிரைவ் இடம் பெற்றுள்ளது. 100 கிலோ மீட்டர் வேகத்தை சில நொடிகளிலேயே எட்டிவிடும் இந்த காரின் ஆரம்ப ஷோரூம் விலை ரூ.3 கோடி.