SBI வங்கியினுடைய சந்தை மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு.
SBI எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி இந்தியாவினுடைய மிகப்பெரிய வங்கியாகும். நாடு முழுவதும் தேவைக்கேற்ப ஒவ்வொரு தாலுகா வாரியாக பல்வேறு கிளைகளைக் கொண்டு செயல்படும் மிகப்பெரிய கூட்டமைப்போடு செயல்படுகிறது. இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வங்கியாகவும் எஸ்பிஐ உள்ளது. மேலும் இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்களிப்பையும் செலுத்தி வருகிறது எஸ்பிஐ. இது அரசுடமையாக்கப்பட்ட வங்கி என்பதும் குறிப்பிடத்தக்கது.
1806 ஆம் ஆண்டு கொல்கத்தா வங்கி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இப்படி மிகப் பழமையான இந்திய வங்கிகளில் ஒன்றாக உள்ள எஸ்பிஐ தொடர் முன்னேற்றத்தை நோக்கி சென்று இருக்கிறது.
எஸ்பிஐ வங்கி 400 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட வங்கியாகும். இவ் வங்கியினுடைய சந்தை மதிப்பு 5.85 லட்சம் கோடியாக இருந்தது. மேலும் எஸ்பிஐ வங்கியின் உடைய பங்குச்சந்தை மதிப்பு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 17 சதவீதம் உயர்வைக் கண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 19ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் இரண்டு சதவீத வளர்ச்சியை கண்டு இந்திய சந்தை மதிப்பில் 6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கிறது. நடப்பாண்டில் கடன் நடவடிக்கையில் எஸ்பிஐ வங்கி 14 முதல் 15 சதவீதம் வளர்ச்சியை கண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ வங்கியினுடைய சந்தை மதிப்பு உயர்வு, இந்திய பொருளாதாரத்தின் மீதான நம்பகத்தன்மையுடைய வெளிப்பாடாக இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் நிலையான பொருளாதார வளர்ச்சி தென்படுவதாக உலக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.