
முன்னனி கார் நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவில் அதிக அளவு கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாகும். வாடிக்கையாளர் தேவைக்கேற்ப பல்வேறு வகையான மாடல் கார்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஆல்டோ, ஸ்விப்ட், வேகன் ஆர், டிசையர், எர்டிகா, பிரெஸ்ஸா, எஸ்-பிரெஸ்ஸோ, பலேனோ போன்ற பல வகையான மாடல்களை இதுவரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது மாருதி சுசுகி நிறுவனம், சுசூகி இ விட்டாரா என்ற புதிய மின்சார எஸ்யூவியை இங்கிலாந்தில் அறிமுகம் செய்துள்ளது. இது சுசுகியின் முதல் பெரிய அளவிலான மின்சார வாகனம் ஆகும். இதில் 49 கிலோவாட் ஹவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 346 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். இ விட்டாரா, ‘ஹார்ட்டெக்ட்-இ’ என்ற பிரத்யேக மின்சார இயங்குதளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வழக்கமான மாடல்களிலிருந்து வேறுபட்டது.
இதில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 142 பி.எச்.பி. பவரை வெளிப்படுத்தும். இ-விட்டாரா EV இரண்டு பேட்டரி விருப்பங்களில் வருகிறது. அடிப்படை மாடல் 49 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் டாப் வேரியண்ட் 61 kWh யூனிட் உடன் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பேட்டரி பேக்குகள் வெவ்வேறு அளவிலான செயல்திறன் மற்றும் வரம்பை வழங்குகின்றன. அதாவது 49 kWh பேட்டரி 346 கிமீ வரம்பையும், 61 kWh பேட்டரி 428 கிமீ வரம்பையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதிலுள்ள மோட்டார் 172 பி.எச்.பி. பவரை வெளிப்படுத்தும். அதிகபட்சமாக 428 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.
இரட்டை-திரை டிஜிட்டல் டிஸ்ப்ளே, புதிய ஸ்டீயரிங் வீல், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, பனோராமிக் கண்ணாடி கூரை, 360-டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS சூட் போன்ற அம்சங்களை எதிர்பார்க்கலாம்.
இங்கிலாந்து சந்தை நிலவரப்படி இந்த காரின் ஆரம்ப ஷோரும் விலை சுமார் ரூ.35 லட்சம். இந்தியாவில் இந்த ஆண்டு செப்டம்பரில் அல்லது இறுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்தியாவிலுள்ள குஜராத் சுசுகி மோட்டார் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். மேலும் இதன் உற்பத்தி 50 சதவீதம் ஐரோப்பிய மற்றும் பிற உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியச் சந்தையில் இதன் விலை இங்கிலாந்தை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ளவர்கள் ஏற்கனவே E-Vitara ஐ வாங்க முடியும் என்றாலும், இந்திய வாடிக்கையாளர்கள் அதற்கு இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்திய-ஸ்பெக் பதிப்பில் சில உள்ளூர்மயமாக்கப்பட்ட மாற்றங்கள் இடம்பெறும் என்று பிராண்ட் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது.
டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்ஃபா என இது மூன்று வேரியன்ட்களில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மாருதி சுசூகி நிறுவனம் இ விட்டாராவை சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக், மஹிந்திரா பிஇ6, எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் போன்ற மின்சார எஸ்யூவிகளுக்கு சவால் விடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மாருதி சுசுகியின் தீவிரமான மின்மயமாக்கல் உத்தி மற்றும் இந்தியாவின் வளர்ந்து வரும் EV உள்கட்டமைப்புடன், E-Vitara EV பிராண்டின் மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கத் தயாராக உள்ளது. சரியான விலை நிர்ணயம், வலுவான சார்ஜிங் நெட்வொர்க் மற்றும் சேவை போன்ற அம்சங்கள் சிறப்பான முறையில் இருந்தால் இ விட்டாரா மின்சார கார் இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பமான காரா மாறும் என்பதில் ஐயமில்லை.