

இந்திய ரூபாய் நோட்டுகளை நாம் தினமும் பயன் படுத்துகிறோம். காந்தியின் படம், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம், பாதுகாப்பு இழை என பல அம்சங்களை கவனித்திருப்போம். ஆனால், நோட்டின் ஓரங்களில் கருப்பு நிறத்தில் சாய்வாக இருக்கும் சிறிய கோடுகளை கவனித்ததுண்டா? அந்த கோடுகள் ஏதோ டிசைனுக்காக வைக்கப்பட்டவை அல்ல; அதற்குப் பின்னால் ஒரு மிக முக்கியமான காரணம் உள்ளது.
பிளீட் மார்க்ஸ் (Bleed Marks) என்றால் என்ன?
ரூபாய் நோட்டுகளின் இடது மற்றும் வலது ஓரங்களில் காணப்படும் இந்தச் சிறிய கோடுகள் 'பிளீட் மார்க்ஸ்' (Bleed Marks) என்று அழைக்கப்படுகின்றன. இவை சாதாரண கண்களுக்குத் தெரிந்தாலும், இதன் உண்மையான நோக்கம் பார்வையற்றவர்கள் பணத்தை எளிதில் அடையாளம் காண்பதற்காகத்தான்.
பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள், ஒரு ரூபாய் நோட்டைத் தொட்டுப் பார்த்தே அது எத்தனை ரூபாய் மதிப்புடையது என்பதைக் கண்டறிய இந்த கோடுகள் உதவுகின்றன. இவை சாதாரண அச்சாக இல்லாமல், காகிதத்தில் சற்று மேடாகத் தெரியும். இது இன்டாக்லியோ (Intaglio) அச்சு முறையில் அச்சிடப்படுகின்றன.
எந்த நோட்டில் எத்தனை கோடுகள்?
ஒவ்வொரு மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கும் இந்த கோடுகளின் எண்ணிக்கை மற்றும் அமைப்பு மாறுபடும். இது பார்வையற்றவர்களுக்குக் குழப்பமில்லாமல் பணத்தைப் பிரித்தறிய உதவுகிறது.
₹100 நோட்டில் இடது மற்றும் வலதுபுறம் தலா 4 கோடுகள் இருக்கும்.
₹200 நோட்டில் இடது மற்றும் வலதுபுறம் தலா 4 கோடுகள் உள்ளது. அவற்றுக்கு இடையில் 2 சிறிய புள்ளிகளும் இருக்கும்.
₹500 நோட்டில் இடது மற்றும் வலதுபுறம் தலா 5 கோடுகள் இருக்கும்.
அதேசமயம், ₹10, ₹20 மற்றும் ₹50 நோட்டுகளில் இத்தகைய கோடுகள் இருப்பதில்லை. அதற்குப் பதிலாக அவற்றின் அளவு மற்றும் பிற குறியீடுகளை வைத்துப் பார்வையற்றவர்கள் அடையாளம் காண்கின்றனர்.
கோடுகள் தவிர, ரூபாய் நோட்டுகளில் 'அடையாளக் குறி' (Identification Mark) எனப்படும் மற்றொரு அம்சமும் உண்டு. இதுவும் இன்டாக்லியோ முறையில் அச்சிடப்பட்டிருக்கும்:
₹100 நோட்டில் ஒரு முக்கோண வடிவமும், ₹500 நோட்டில் ஒரு வட்ட வடிவமும், ₹200 ஒரு 'H' வடிவமும் இருக்கும்.
பார்வையற்றவர்கள் நோட்டின் நடுப்பகுதிக்கு இடதுபுறம் இருக்கும் இந்த வடிவங்களைத் தொட்டு உணர்வதன் மூலமும் அதன் மதிப்பை உறுதிப்படுத்துகிறார்கள்.
இந்தப் பிளீட் மார்க்குகள் கள்ள நோட்டுகளைக் கண்டறியவும் ஒரு கருவியாகச் செயல்படுகின்றன. சாதாரண அச்சு இயந்திரங்களில் அச்சிடப்படும் கள்ள நோட்டுகளில் இந்தக் கோடுகள் தட்டையாகவே இருக்கும். ஆனால், ரிசர்வ் வங்கியால் அச்சிடப்படும் அசல் நோட்டுகளில் இந்தக் கோடுகள் விரல்களால் தொடும்போது மேடாகத் தெரியும்.