மாதக் கடைசியில் கடன் வாங்காம வாழணுமா? இந்த 7 எளிய வழிகளை ட்ரை பண்ணுங்க!

உங்கள் மாதாந்திர சம்பளத்தை மிச்சப்படுத்தி நிதி சுதந்திரம் பெற எளிய வீட்டு பட்ஜெட் வழிகாட்டல்.
மாத பட்ஜெட் - money saving tips
மாத பட்ஜெட் - money saving tipsimage credit - gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

குடும்பத்தில் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு, மாத பட்ஜெட் திட்டமிடப்படும் பொழுது நிதி குறைபாடுகள் ஏற்படாமல் சீராக வாழ முடியும். மாதக் கடைசி வரை சம்பளப் பணம் நிலைத்து நிற்க, வீட்டு பட்ஜெட்டை சிக்கனமாக நிர்வகிக்க வேண்டியது அவசியம்.

செலவுகளைப் பதிவு செய்வது:

தினமும் செய்யும் செலவுகளை, அது சிறிய செலவாக இருந்தாலும் அனைத்தையும் எழுதி வைப்பது நல்லது. இதன் மூலம் பயன்படுத்தாத ஆப்ஸ்களையும், தேவையற்ற சந்தாக்களையும் நிறுத்திவிடலாம். தேவையில்லாத ஆட்டோ-டெபிட் வசதிகளையும் நிறுத்தி விடலாம்.

தேவையற்ற சமயங்களில் எரியும் விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை அணைத்து வைப்பதும், வாகனங்களை சரியான நேரத்தில் சர்வீஸ் செய்வதால் எரிபொருள் செலவுகளைக் குறைப்பதும் என மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவுகளைக் குறைக்கலாம். அலுவலகத்திற்கு பொதுப் போக்குவரத்து அல்லது 'கார் பூலிங்' (Car pooling) பயன்படுத்தலாம். இவையெல்லாம் நம் செலவுகளைக் கணிசமாக குறைக்க உதவும்.

தேவையைத் தீர்மானிப்பது: 

அவசியத்திற்கும் ஆசைக்கும் வித்தியாசம் அறிந்து செலவு செய்வது முக்கியம். எது தேவையோ அதை தீர்மானம் செய்து அளவோடு செலவு செய்வது வளமோடு வாழ உதவும். இதற்கு 50/30/20 விதியைப் பின்பற்றலாம். 50% அத்தியாவசிய செலவுகள் என்று ஒதுக்கவேண்டும். வாடகை, மளிகை, மின்சாரக் கட்டணம் போன்றவற்றிற்கு ஒதுக்க வேண்டியது அவசியம். 30% நம் விருப்பங் களுக்காக அதாவது பொழுதுபோக்கு, ஆடம்பரமற்ற அத்தியாவசியமான ஆடைகள், அவசர ஆபத்திற்கு வெளி உணவுகளுக்கு என்று பயன்படுத்தலாம். 20% சேமிப்பு அவசியம். சம்பளம் வந்த உடன் 20% தொகையைத் தனியாக எடுத்து வைத்து விடுவது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு நிதி மேலாண்மை: சிறு வயதிலேயே சேமிப்பு பழக்கத்தை வளர்ப்பது எப்படி?
மாத பட்ஜெட் - money saving tips

பட்ஜெட் போடுவது: 

மாதத் தொடக்கத்திலேயே வரவு செலவுக்கான திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக் கொள்வது சிறப்பு. இவற்றை பேப்பர் அல்லது மொபைல் செயலியில் திட்டமிடலாம். கையில் பணம் இல்லாத பொழுது வாங்கும் பழக்கத்தை தவிர்ப்பதும், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்துவதும், முடிந்தவரை டெபிட் கார்டு அல்லது யுபிஐ மூலம் மட்டுமே செலவு செய்வதும் என இருக்கப் பழகலாம்.

கடன்கள் மற்றும் இஎம்ஐ -களை முதலில் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டும் என்று வரம்பு வைத்துக் கொள்வதும் நல்ல பலனைத்தரும்.

சேமிப்பிற்கு முதலிடம்:

செலவு போக மிச்சத்தை சேமிக்காமல், சேமித்தது போக மிச்சத்தை செலவு செய்வதுதான் சிறந்த வழி. இதற்கு சம்பளம் வந்ததும் குறிப்பிட்டத் தொகையை சேமிப்பு கணக்குக்கு மாற்றிவிடுவது நல்லது. மீதமுள்ள பணத்தை மட்டுமே மாத செலவுகளுக்கு பயன்படுத்தலாம். குழந்தைகளின் கல்வி, வீட்டுக் கட்டுமானம் போன்ற வற்றிற்கு நீண்ட கால முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்குமே எதிர்கால முதலீடு என்பது மிகவும் அவசியம். எதிர்காலத் தேவைகளை முன்கூட்டியே கணித்து அதற்காக சிறிதளவு பணத்தை ஒதுக்குவது மிகவும் அவசியமானது.

மாத பட்ஜெட் - money saving tips
மாத பட்ஜெட் - money saving tipsImage credit - Gemini

கடன் தவணை செலுத்துவது:

கிரெடிட் கார்டு மற்றும் கடன் தொகைகளை உடனே கட்டி விடுவது அபராதத்திலிருந்து தப்பிக்க உதவும். அதிக வட்டி கொண்ட கடன்களை விரைவாக அடைக்க வேண்டும். கடன் சுமையை குறைப்பதற்கு தேவையற்ற கிரெடிட் கார்டு செலவுகளை தவிர்க்கவேண்டும். கடன் இல்லாத வாழ்வே நிம்மதியானது என்பதை உணரவேண்டும்.

அதற்கு ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு இது அவசிய தேவையா அல்லது தற்காலிக ஆசையா என்று சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம்.

விலையை ஒப்பிட்டு வாங்குவது:

மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்கும் பொழுது ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் விலைகளை ஒப்பிட்டு பார்த்து வாங்குவது நல்லது. முக்கியமாக மளிகைப் பொருட்களை வாங்கும்பொழுது தள்ளுபடி விலைகளை ஒப்பிட்டுப் பார்த்து வாங்கலாம். வீட்டுக்குத் தேவைப்படும் மளிகை பொருட்களை முன்கூட்டியே பட்டியலிடுவதும், மாதத்திற்குரிய மளிகையை மொத்தமாக வாங்குவதும் செலவை கட்டுக்குள் வைக்கும்.

சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்கச் செல்வதாக இருந்தால் பசியுடன் செல்லாமல் வீட்டில் நன்கு சாப்பிட்டுவிட்டு செல்லவும். இல்லையெனில் பார்த்த பொருட்கள் அனைத்தையும் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். எனவே பசி நேரத்தில் பொருட்கள் வாங்கச் செல்வதைத் தவிர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
மாதச் சம்பளக்காரர்கள் கோடீஸ்வரர் ஆகலாம்: கையில் பணம் தங்கும் 10 ரகசியங்கள்!
மாத பட்ஜெட் - money saving tips

வெளியே சாப்பிடுவதை தவிர்ப்பது:

ஹோட்டல் மற்றும் ஆன்லைன் உணவு ஆர்டர்களைக் குறைத்துக் கொண்டு வீட்டிலேயே ஆரோக்கியமான உணவை சமைத்து சாப்பிடுவது செலவையும் கட்டுப்படுத்தும்; உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதற்கு வார இறுதி நாட்களிலேயே அடுத்த வார உணவைத் திட்டமிடலாம்.

அலுவலகத்திற்கு வீட்டிலிருந்து மதிய உணவை எடுத்துச் செல்லலாம். இப்படி வெளி உணவுகளைக் குறைத்துக் கொண்டு சமையலை திட்டமிடுவது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது; மாதக்கடைசியில் கையை கடிக்காமலும் இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com