

மனித வாழ்வில் பணத்தின் அவசியம், நியாயமான வழியில் சம்பாதித்து திட்டமிட்டு செலவிடுதல், அவசரத் தேவைகள், கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கான சேமிப்பு முக்கியத்துவம் விளக்கப்படுகிறது. 3 வயதிலிருந்து 18 வயது வரை குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பு, சேமிப்பு பழக்கம், வங்கி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை அறிவு, பகுதி நேர வேலை போன்றவற்றை படிப்படியாக கற்றுக்கொடுக்க வேண்டிய முறைகள் கூறப்படுகின்றன.
உலகில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பணம் தேவை. "பணம் இல்லாதவன் பிணம்" என்றொரு பழமொழி கூட தமிழில் கூறப்படுவதுண்டு. நம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளாக, 'உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம்' ஆகிய மூன்றைத்தான் நம் முன்னோர்கள் பிரதானமாகக் கூறியுள்ளனர்.
இம்மூன்றையும் பெறுவதற்கு நமக்கு பணம்தானே முதலில் தேவைப்படுகிறது. எனவே பணத்தை நியாயமான வழியில் சம்பாதிக்கவும், நமது தேவைக்கேற்ப அதை செலவழிக்கவும், சம்பாதித்ததில் ஒரு பகுதியை அவசரத் தேவை, குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக சேமித்து வைக்கவும் முழுமையாக வளர்ந்து விட்ட ஒவ்வொரு மனிதரும் அறிந்திருப்பது அவசியமாகிறது.
இதற்கான அறிவு ஒரே நாளில் வந்துவிடாது. குழந்தை களுக்கு சிறு வயதிலிருந்தே பெற்றோர் படிப்படியாக நிதி மேலாண்மை (Financial Management) பற்றிய அறிவை ஊட்டி வளர்ப்பது அவசியமாகிறது. அது எப்படி என்பதையும், குழந்தைகள் வளர்ந்து ஆளான பின் தனது மற்றும் தன் குடும்ப செலவுகளை சிரமமின்றி எதிர்கொள்ள தேவைப்படும் பணத்தை சேர்த்து வைத்துக்கொள்வது எப்படி என்பதையும் இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு 3-5 வயது இருக்கும்போது அவர்களுக்கு ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களை காட்டி, அவற்றின் மதிப்பை அவர்கள் தெரிந்துகொள்ள உதவவேண்டும். பணத்தைக்கொடுத்து பொருட்களை நாம் வாங்கமுடியும் என்பதையும் விளக்கிக் கூறவேண்டும். சிறு உண்டியல் ஒன்றை வாங்கி கொடுத்து அதில் அவ்வப்போது பணத்தை போட்டு வைக்க சொல்லி, சேமிப்பின் அவசியத்தை கற்றுக்கொடுக்கலாம். தேவைக்கு பொருள் வாங்குவதற்கும் விருப்பப்பட்டதையெல்லாம் வாங்க வேண்டுமென்று நினைப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளக்கிக் கூறுவதும் அவசியம்.
6-8 வயதிருக்கும் குழந்தை, உடனே ஒரு பொம்மை வேண்டும் என்று அடம்பிடிக்கையில் உண்டியலில் போட்டிருக்கும் பணம் பொம்மை வாங்க தேவையான அளவு சேர்ந்தவுடன் வாங்கலாம்னு சொல்லி சமாதானப்படுத்தி, சேமிப்பின் அவசியத்தை குழந்தை அதிகமாக உணரச்செய்யலாம்.
பொருட்களை வாங்கும்போது அவற்றின் விலையை ஒன்றிற்கும் மேலான கடைகளில் ஒப்பிட்டுப் பார்த்து, பொருளின் தரத்தையும், விலையில் வித்யாசத்தையும் குழந்தை தெரிந்துகொள்ளச் செய்யலாம்.
குழந்தைக்கு 9-12 வயதாகும்போது சிறு சிறு செயல்களை திட்டமிடவும், பணம் சேமிக்க ஓர் இலக்கை நிர்ணயம் செய்து கொள்ளவும் கற்றுத் தரவேண்டும்.
பணம் சம்பாதிக்க உழைப்பும் நேரமும் அதிகம் தேவைப் படும் என்பதை குழந்தைக்கு உணரச் செய்வது மிக முக்கியம். பிறரிடமிருந்து பரிசாக பெறப்படும் பணத்தில் இருபது சதவிகிதத்தை சேமிப்பில் சேர்த்துவிடவும் இப்போதே கற்றுக்கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு 13-15 வயது ஆகும்போது, அதனிடம் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து அது தன் செலவுகளை தானே செய்து கொள்ளப் பழக்குவது குழந்தை பொறுப்புணர்ச்சி பெற்று செயல்பட நல்ல துவக்கமாகும். அதே நேரம் குழந்தைக்கு வங்கி செயல்பாடுகளையும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை களையும் விளக்கி கூறுவது அறிவாற்றல் மேம்பட உதவும்.
16-18 வயதாகும்போது குழந்தை முழு வளர்ச்சி பெற்ற மனிதன் (adult) என்ற நிலைக்குள் செல்ல தயாராகி விடுகிறான். அப்போது அவனுக்கு பள்ளிக்கட்டணம், போக்குவரத்து செலவு, தனிப்பட்ட செலவுகள் என செலவுகளை பிரித்துப் பார்க்கவும் அதற்காக திட்டமிடவும், பகுதி நேர வேலை செய்து வருமானத்தை கூட்டிக்கொள்ளவும் கற்றுத்தருவது அவசியம்.
பண முதலீடு, வரி கட்டுதல், அவசர தேவைகளை சரிக்கட்ட மாதம் தோறும் குறிப்பிட்ட அளவு பணத்தை தனியாக சேமிப்பது போன்ற பெரிய விஷயங்கள் பற்றி அந்த வளர்ந்த குழந்தை அறிந்துகொள்ள மென்மையான முறையில் வழிகாட்டுதல் சிறப்பு.
எதிர்பாராத, எதிர்கால செலவுகளை சமாளிக்க சேமிப்பு அவசியம். பணத்தை சேமிக்க குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு விதமான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1.கையில் இருக்கும் பணத்தில் செய்யும் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.
2.ஒரு பொருளை வாங்க நினைக்கையில் அந்தப் பொருள் உடனடியாக தேவையா அல்லது அந்த செலவை தள்ளிப் போட வாய்ப்புள்ளதா என குறைந்த பட்சம் 24 மணி நேரம் யோசிப்பது நலம்.
3.துணிமணி, பொம்மை போன்றவற்றை வாங்கும்போது தரமான, நீண்ட காலம் உழைக்கக் கூடியதை பார்த்து வாங்கவும்.
4.ஒரு அறையிலிருந்து வெளியேறும்போது அங்கு ஓடிக்கொண்டிருக்கும் மின் சாதனங்கள் அனைத்தையும் அணைத்து விட்டு செல்வது மின் கட்டணத்தை குறைத்து சேமிப்பு அதிகரிக்க உதவும்.
5.வெளியே செல்லும் போது குடிக்க தண்ணீர் மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளை கையில் எடுத்து செல்வது, அவற்றை கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்குவதை தடுத்து, சேமிப்பிற்கு உதவும்.
6.தரமான சணல் பை மற்றும் காட்டன் பைகளை அவ்வப்போது தூக்கி வீசி விடாமல், சுத்தப்படுத்தி மறு பயன்பாட்டிற்கு வைத்துக்கொண்டால் செலவு குறையும்.
7.செலவை அதிகரிக்கச் செய்யும், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களை அடிக்கடி பின் பற்றுவதை தவிர்த்து, பீச், பார்க் போன்ற இயற்கை முறை உருவாக்கங்களை ரசிக்க கற்றுக்கொள்வதன் மூலமும் செலவை குறைக்கலாம்.
8.நாம் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாய் விவரத்தையும் டைரியில் எழுதும் பழக்கத்தை மேற்கொள்ளலாம். இது குழந்தைகளை, மேலும் மேலும் சேமிப்பதற்கு ஊக்குவிக்கும்.
பணம் சம்பாதிப்பது எளிதான காரியமல்ல. அதை புத்திசாலித்தனமாக செலவு பண்ணவும், அதில் ஒரு பகுதியை சேமிப்பது அவசியம் என்பதையும் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்ளும் குழந்தையின் வாழ்க்கை என்றும் சிறப்புற்று விளங்கும்.
இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே பணத்தின் மதிப்பை உணர்ந்து, பொறாமைப்படத்தக்க பொறுப்பான நிதிப் பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொண்டு, வளர்ந்த பின் தங்களுடைய எதிர்கால நிதித் தேவைகளை எவரிடமும் எதிர்பார்க்காமல் சுயமாகவும் சுதந்திரமாகவும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: