

டிவிஎஸ் (TVS)மோட்டார் நிறுவனம் இந்தியாவின் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு மோட்டார் சைக்கிள் நிறுவனமாகும். டி.வி.எஸ் திருக்குருங்குடி சுந்தரம் ஐயங்கார் என்பவரால் நிறுவப்பட்ட இந்நிறுவனம் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மோட்டார் சைக்கிள்களை ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் 2-வது பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது.
அந்த வகையில் இந்த நிறுவனம் சமீபத்தில் தனது நவீன-ரெட்ரோ பைக்கான ரோனின் மாடலில், அகோண்டா எனும் புதிய ஸ்பெஷல் எடிஷனை (TVS Ronin Agonda Edition) அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த பிரதான மோட்டார் சைக்கிள் வடிவமைப்பு தனித்துவமான லுக்கை தருவதுடன், மற்ற பைக்குகளில் இருந்து இதனைத் தனித்து நிற்கச் செய்கின்றன. மேலும் பார்த்தவுடன் கண்களைக் கவரும் வகையில் இருக்கிறது. கோவாவின் அகோண்டா கடற்கரையை மையமாக வைத்து இந்தப் பெயரை சிறப்பு எடிஷன் மாடலுக்கு சூட்டியிருப்பதாகத் டிவிஎஸ் தெரிவித்துள்ளது.
இந்த பைக் இருக்கையின் உயரம் 795 மிமீ ஆகும். அதாவது உயரம் குறைவானவர்களும் ஓட்டுவதற்கு வசதியான வகையில் அகோண்டா எடிஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பைக்கின் எடை வெறும் 160 கிலோ என்பதால், இளைஞர்கள் எளிதாக கையாள முடிவதுடன் போக்குவரத்து நெரிசலிலும் ஓட்டுவதற்கு மிகவும் எளிதானது.
இதில் 225 சி.சி. சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 7,750 ஆர்.பி.எம்.மில் 20.4 எச்.பி. பவரையும், 3,750 ஆர்.பி.எம்.மில் 19.9 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இந்த 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் மூலம் பவர் பின்சக்கரத்திற்கு அனுப்பப்படுகிறது. இது 42.95 kmpl சான்றளிக்கப்பட்ட மைலேஜை வழங்குகிறது.
இந்த மோட்டார் சைக்கிளில் தனித்துவமாக, பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் வெள்ளை நிறத்தில் இடம் பெற்றுள்ளது. பெட்ரோல் டேங்க் 14 லிட்டர் கொள்ளளவு கொண்டது. பெட்ரோல் டேங்கில் வெள்ளை நிறத்தின் மீது நீல மற்றும் சிவப்பு நிற பட்டை கோடுகள், கிராஃபிக்ஸ் வடிவமைப்பு இதனைத் தனித்து நிற்கச் செய்கின்றன. அதன் மேல் அதாவது டேங்கின் மேற்புறம் AGONDA என்ற எழுத்துக்கள் பெரிதாக பொறிக்கப்பட்டிருப்பது கவர்ச்சிகரமாக உள்ளது.
சிங்கிள் சானல் ஏ.பி.எஸ்., எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புளூடூத் இணைப்பு வசதி உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் உள்ளது, எஸ்எம்எஸ் அலர்ட், SmartXonnect வசதி, மேலும் புளூடூத் வழியாக உங்கள் போனுடன் பைக்கை இணைக்க முடியும்.
ரோனின் தொடக்க வேரியண்டுக்கும், நடுத்தர வேரியண்டுக்கும் இடைப்பட்டதாக இது இருக்கும். அதாவது டிவிஎஸ் ரோனின் அகோண்டா எடிஷன் (TVS Ronin Agonda Edition) பழைய வடிவமைப்புடன் கூடிய நவீன மோட்டார் சைக்கிளாகும்.
இது மிட்நைட் ப்ளூ, கிளேசியர் சில்வர், கரி எம்பர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
அகோண்டா சிறப்பு எடிஷன் மாடல் சுமார் ரூ.1.31 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.