
இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை சாம்ராஜ்யத்தின் தலைவராக பரவலாக அறியப்பட்டவர் முகேஷ் அம்பானி. அம்பானி குடும்பம் இந்தியாவிலேயே பணக்கார குடும்பமாகும். மேலும் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றிருக்கிறார்.
முகேஷ் அம்பானி 120 பில்லியன் டாலர் மதிப்புள்ள (வருவாய்) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸைத் தலைமை தாங்கி நடத்தி வருகிறார், இது பெட்ரோ கெமிக்கல்ஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு, தொலைத்தொடர்பு, சில்லறை விற்பனை, ஊடகம் மற்றும் நிதி சேவை வரை பல்வேறு வணிகங்களில் கொடி கட்டி பறக்கிறது.
இன்று, இவரது ரிலையன்ஸ் ரீடெய்ல் இந்தியாவின் மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையாளராக உள்ளது. ரிலையன்ஸின் டிஜிட்டல் சேவை வணிகமான ஜியோவிற்கான வாடிக்கையாளர் கையகப்படுத்துதலில் அவர் உலகளாவிய சாதனைகளை படைத்தார். ரிலையன்ஸின் தொலைத்தொடர்பு மற்றும் பிராட்பேண்ட் சேவையான ஜியோவில் 490 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். அம்பானி ரிலையன்ஸை பசுமை எரிசக்தியாக விரிவுபடுத்தியுள்ளார்.
அம்பானி தனது மூன்று பிள்ளைகளையும் 2023-ம் ஆண்டு ரிலையன்ஸ் குழுவில் இணைத்தார்.
மகன் ஆகாஷ் ஜியோவுக்குத் தலைமை தாங்குகிறார்; மகள் இஷா சில்லறை விற்பனை மற்றும் நிதி சேவைகளை மேற்பார்வையிடுகிறார்; இளைய மகன் அனந்த் எரிசக்தி வணிகத்தில் உள்ளார்.
முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தொழில் நிறுவனம், 2025 நிதியாண்டில் $118 பில்லியன் நிகர மதிப்புடன் உலகின் முதல் 25 நிறுவனங்களின் பட்டியலில் நுழைந்து ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. பிரபல புளூம்பெர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கைபடி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களின் 21-வது இடத்தை பிடித்துள்ளது. அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் ரூ.10 லட்சத்து 73 ஆயிரம் கோடி (118 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என கணக்கீடப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலகின் பெரு நிறுவனங்களான மைக்ரோசாப்ட், ஆல்பபெட் (கூகுளின் தாய் நிறுவனம்), சவுதி அராம்கோ உள்ளிட்ட பெருநிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2025 காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.19,407 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 2.4 சதவீதம் அதிகமாகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் குறித்து முகேஷ் அம்பானி கூறுகையில், '2024-25ம் நிதியாண்டு உலகளாவிய வணிக சூழலுக்கு ஒரு சவாலான ஆண்டாக இருந்தது. செயல்பாட்டு ஒழுக்கம், வாடிக்கையாளர்கள் மையமாகக் கொண்ட புதுமை மற்றும் இந்தியாவின் வளர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தியதால் இந்த ஆண்டில் ரிலையன்ஸ் நிலையான நிதி செயல்திறனை வழங்க உதவியது' என்று தெரிவித்தார்.