
பிரெஞ்சு வாகன உற்பத்தி நிறுவனமான சிட்ரோன் (Citroen) 2021 முதல் ஸ்டெல்லாண்டிஸ் குழுமத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும், இந்திய சந்தையில் விற்பனையை அதிகரிக்க புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகிறது. C3, eC3, மற்றும் C3 ஏர்கிராஸ், பசால்ட் X போன்ற கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த நிறுவனம், குறிப்பாக மின்சார வாகனங்கள் (EVs), மற்றும் பெட்ரோல் வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம், தற்போது சி3 வரிசையில் புதிய சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் ரேஞ்ச்-டாப்பிங் வேரியண்ட்டை சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப 1.2 லிட்டர் இயல்பான (NA) பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. என்.ஏ. பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 82 எச்.பி. பவரை வெளிப்படுத்தும்.
அதுவே 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 110 எச்.பி. பவரை வெளிப்படுத்தும்.
இதற்கு முன் வெளிவந்த C3 X மாடல்களில் டாப் வேரியண்டாக சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் இருக்கும் என்று கூறப்பட்டாலும், டெயில்கேட்டில் உள்ள C3 X பேட்ஜைத் தவிர, மற்ற மாடல்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடும் படியாக வேறு எந்த வெளிப்புற மாற்றங்களும் இதில் இல்லை என்பதே உண்மை. சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் மாடலில் உள்ள 360 டிகிரி கேமரா, பயணக் கட்டுப்பாடு மற்றும் குரூஸ் கன்ட்ரோல் போன்ற மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மட்டுமே மற்ற மாடல்களுடன் ஒப்பிடுகையில் சிறப்பு அம்சமாக கூறப்படுகிறது.
இது 30 லிட்டர்ஸ் பெட்ரோல் ஃபியூல் டேங்க் கெபாசிட்டிவுடன் வருகிறது. சி3 எக்ஸ் பேட்ச், புதிய அம்சங்களில் ஆட்டோ-டிம்மிங் இன்சைட் ரியர் வியூ மிரர், கீலெஸ் என்ட்ரி மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட், LED விளக்குகள், லெதரெட் டேஷ்போர்டு ஃபினிஷ் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக ஆறு ஏர்பேக்குகள், ESP, ABS, EBD, ISOFIX மவுண்ட்கள், TPMS, என்ஜின் இம்மொபைலைசர் மற்றும் ஒரு பெரிமெட்ரிக் அலாரமும் இதில் உள்ளது.
சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் மாடலில் புதிய கார்னெட் சிவப்பு நிறத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது கருப்பு நிற கூரையுடன் மோனோடோன் மற்றும் டூயல்-டோன் வடிவத்தில் கிடைக்கிறது.
இது ஐந்து மோனோடோன் (போலார் ஒயிட், ஸ்டீல் கிரே, காஸ்மோ ப்ளூ, பெர்லா நேரா பிளாக் மற்றும் கார்னெட் ரெட்) மற்றும் இரண்டு டூயல்-டோன் (போலார் ஒயிட் ரூஃப் உடன் காஸ்மோ ப்ளூ மற்றும் பெர்லா நேரா பிளாக் உடன் கார்னெட் ரெட்) போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த காரின் தொடக்க ஷோரூம் விலை சுமார் ரூ.7.91 லட்சம் எனவும் எக்ஸ் ஷைனில் டர்போ மேனுவல் டிரான்ஸ்மிஷன் சுமார் ரூ.9.11 லட்சம் எனவும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் சுமார் ரூ.9.9 லட்சம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது புதிய டாப்-ஸ்பெக் C3 X டிரிம்களின் விலை ரூ.7.91 லட்சம் முதல் ரூ.10.15 லட்சம் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி CNG கிட்டுக்கு சுமார் 93,000 ரூபாயும், 360 டிகிரியில் சுழலும் கேமரா பொருத்த சுமார் 25,000 ரூபாயும், டூயல் டோன் வண்ணத்துக்கு 15,000 ரூபாயை கூடுதலாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த அம்சத்துடன் கணக்கிடும் போது டாப்-ஸ்பெக் C3 X ஷைன் டர்போ-ATன் விலை ரூ.10.15 லட்சமாக உயரும்.
சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், செப்டம்பர் முதல் வாரத்தில் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.