

1967-ல் நிறுவப்பட்ட ஹூண்டாய் நிறுவனம் தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு வாகன உற்பத்தியாளர் நிறுவனமாகும். ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் செயல்படும் இதன் துணை நிறுவனமாகும். இது கார்கள் மற்றும் பிற வாகனங்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனம், சப் 4-மீட்டர் எஸ்.யூ.வி. கார் பிரிவில், 2026 வென்யூவை இன்று (நவம்பர் 4-ம் தேதி)அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய வென்யூ மாடல், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், முழுமையாக மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதுடன் பெரிய அளவில் மாற்றங்களையும் செய்துள்ளது. அதாவது அசத்தலான அம்சங்களுடன், வாடிக்கையாளர் விரும்பும் வகையில் அனைத்து விதமான வசதிகளுடன் இந்த கார் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் புதிய வென்யூ மாடலின் ஸ்டாண்டர்ட் மற்றும் என் - லைன் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த இரு மாடல்களின் விலை குறித்த விவரங்களை இன்று அறிவிக்கப்பட உள்ளது. புதிய வென்யூ மாடலை வாடிக்கையாளர்கள் ரூ.25,000 முன்பணம் செலுத்தி, அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் டீலர்ஷிப் அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாக முன்பதிவு செய்யலாம்.
முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட வென்யூ கார் என்பதால், புதிய வென்யூவில் பக்கவாட்டு வடிவமைப்பிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ரூப் ரெயில்கள் உயரமாக உள்ளன. மேலும், ஜன்னல் கண்ணாடிகள், பின்பக்க குவார்ட்டர் கிளாஸ் பேனல் ஆகியவையும் புதிய டிசைனில் மாற்றப்பட்டுள்ளன.
முன்பக்க பம்பர் பகுதியில் உள்ள சில்வர் ஸ்கிட் பிளேட்கள், முந்தைய மாடலை விட இப்போது பெரிதாக உள்ளன. சிவப்பு காலிபர் (முன் & பின்புறம்) கொண்ட டிஸ்க் பிரேக்குகள், விங் டைப் ஸ்பாய்லர்கள், வீல் ஆர்ச் கிளாடிங், N லைன் பிரத்யேக விங் வகை ஸ்பாய்லர்களும் உள்ளது.
காரின் உட்புறம் கருப்பு நிற இன்டீயருடன் சிவப்பு நிற ஹைலைட்களைக் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். உட்புற வடிவமைப்பை பொறுத்தவரையில், 2026 வென்யூ முழுமையான மேம்பட்ட வடிவமைப்பை பெற்றுள்ளது.
காரின் உட்புறம் கருப்பு நிற லெதர் சீட்கள், கிராஷ்பேடு மற்றும் சென்டர் கன்சோலில் ஆம்பியன்ட் லைட்டிங் ஆகிய சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.
பழைய காரின் டேஷ்போர்டை விட, புதியது தட்டையாக உள்ளது. அதில் ஒரு Subwooferம் பொருத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட சுற்றுப்புற விளக்குகளும் (அம்பியன்ட் லைட்டிங்) உள்ளன. ஏ.சி. கண்ட்ரோல் இப்போது வட்டமாக இல்லாமல், சிங்கிள்-ஸோனாக வந்துள்ளது.
புதிய வென்யூ காரில் முக்கிய கவர்ச்சிகரமான அம்சமாக, 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே, 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்டு சிஸ்டம் உள்ளது.
இவற்றுடன், 2 ADAS பாதுகாப்பு அம்சங்கள், ஆட்டோ-டிம்மிங் வசதியுடன் காரின் பின்புறத்தை காண காருக்குள் வழங்கப்படும் கண்ணாடி, ஆட்டோ ஹோல்ட் உடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்(EPB), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கான சென்டர் ஆர்ம்ரெஸ்ட்கள் போன்ற வசதிகளும் உள்ளன.
போஸ் சவுண்ட் சிஸ்டம், பின்பக்க சன்ஷேட் கவர் மற்றும் புதிய டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை புதிய வென்யூ காருக்கு ரம்யம் சேர்க்கிறது. மற்றபடி என்ஜின்களில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யவில்லை.