60% பட்ஜெட் ஃபார்முலா: இது ஈஸி... ஆனால்... ?

A piggy bank and money
60% budget formula
Published on

தனிமனித நிதியில் நிதி திட்டமிடல் அதாவது பட்ஜெட் போடுவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றான 60% தீர்வு பட்ஜெட் முறையைப் பற்றி பார்ப்போம்.

60% தீர்வு பட்ஜெட் (60% budget) என்றால் என்ன?

கிபி 2002 ஆம் ஆண்டு தனிமனித நிதி பத்திரிகையாளர் ரிச்சர்ட் ஜென்கின்ஸ் அவர்கள் 60% தீர்வு என்ற பட்ஜெட் முறையை உருவாக்கினார். இது 60% solution என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. 60/40 பட்ஜெட் முறை என்றும் அழைக்கப்படுகிறது. அவரைப் பொறுத்தவரை ஏற்கனவே இருந்த பட்ஜெட் முறைகள் பல்வேறு செலவு வகைகளை உள்ளடக்கி, இறுதியில் பயனளிப்பதாக இல்லை. கடினமாக இருந்தன. பட்ஜெட் போடும் முறையை அவர் எளிமைப்படுத்த விரும்பினார். எனவே, 60% தீர்வு என்ற பட்ஜெட் முறையை உருவாக்கினார்.

60% தீர்வு பட்ஜெட் போடுவது எப்படி?

1. ஒரு மாதத்திற்கான வரவுகளை (வரிக்கு முன்பான) வரவு செலவு கணக்கு நோட்டுப் புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்.

2. ஒரு மாதத்திற்கான செலவுகளை (வரி உட்பட)  வரவு செலவு கணக்கு நோட்டுப் புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்.

3. படி இரண்டாவதில் எழுதிய செலவுகளை மாதாந்திர செலவுகள், பொழுதுபோக்கு சார்ந்த செலவுகள், சேமிப்பு சார்ந்த செலவுகள் என வகைப்படுத்த வேண்டும். உணவு , உடை, இருப்பிடம், வாகனங்கள், பயன்பாடுகள், குடும்பம், மருத்துவம், காப்பீடு, சுய பராமரிப்பு, பயணம், தொலைத்தொடர்பு, காப்பீடு, வரி போன்றவை மாதாந்திர செலவுகள்.  சுற்றுலா, திரையரங்கு செல்லுதல், வெளியே உணவருந்துவது போன்றவை பொழுதுபோக்கு சார்ந்த செலவுகள். குறுகிய காலக் குறிக்கோள்கள், நடுத்தர காலக் குறிக்கோள்கள், நீண்ட காலக் குறிக்கோள்கள் போன்றவை சேமிப்பு சார்ந்த செலவுகள்.

4. வரிக்கு முன்பான வரவுகளில் 60% பணத்தை மாதாந்திர செலவு வகைக்கென ஒதுக்க வேண்டும். மீதமுள்ள 40% பணத்தைச் சேமிப்புக்கென ஒதுக்க வேண்டும். அந்த சேமிப்பினைப் பின்வருமாறு பிரித்துக் கொள்ள வேண்டும்.

10% ஓய்வு காலத்திற்கான சேமிப்பு

10% நீண்ட காலக் குறிக்கோள்களுக்கான சேமிப்பு

10% குறுகிய காலக் குறிக்கோள்களுக்கான சேமிப்பு

10% பொழுதுபோக்கிற்கான செலவுகள்

5. மாத இறுதியில் ஏதேனும் பட்ஜெட்டை மீறி தவறு நடந்திருந்தால் அதற்கு ஏற்றவாறு அடுத்த மாத பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். நிதிக்குறிக்கோள்களை அடைந்த பிறகு, அதற்கு ஏற்றவாறு பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, குறுகிய காலக் குறிக்கோளான சிற்றுந்து வாங்குவதற்கு பணத்தை ஒதுக்கி இருந்தால், அதனை அடைந்த பிறகு, மற்றொரு குறுகியகாலக் குறிக்கோளுக்கு பணத்தை ஒதுக்கலாம்.

60% தீர்வு பட்ஜெட்டின் நிறைகள் யாவை?

எளிமையான பட்ஜெட் முறை - 60/40 என்று இரண்டே வகைக்குள் பட்ஜெட் போடுவதால் எளிமையான முறை.

சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சேமிப்பிற்கு அதிக சதவிகிதம் ஒதுக்குவதால், சேமிப்பு அதிகரிக்கிறது.

சேமிப்பு குறிக்கோள்களுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளது - சேமிப்பு வகைக்குள்ளாக நீண்ட கால, குறுகிய கால, ஓய்வு காலக் குறிக்கோள்கள் என சேமிப்பு பிரிக்கப்படுவதால், அந்தந்த வகைக் குறிக்கோள்களுக்கு சேமிப்பது எளிதாகிறது.

60% தீர்வு பட்ஜெட்டின் குறைகள் யாவை?

மேலோட்டமானது - செலவு வகைகளுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கி திட்டமிடாததால், தனிப்பட்ட செலவுகளைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது.

எல்லாருக்கும் பொருந்தாது - அதிக விலைவாசி உள்ள இடங்கள் மற்றும் குறைவான சம்பளம் வாங்குபவர்களுக்கு 60% க்குள் மாதாந்திர செலவுகளை வைத்திருப்பது கடினமானது.

தேவைகள் மற்றும் வேண்டல்களை வித்தியாசப்படுத்தவில்லை - 50/30/20 பட்ஜெட்டைப் போல் தேவைகள், வேண்டல்கள், செலவுகள் என வித்தியாசப்படுத்தாமல், தேவைகள் மற்றும் வேண்டல்கள் சார்ந்த செலவுகளை 60% என்ற விகிதத்திற்குள் கொண்டுவருவதால், தேவையற்ற செலவுகளைக் குறைப்பது கடினமாகிறது.

இதையும் படியுங்கள்:
பங்கு, பத்திரம், தங்கம்... எதில் எவ்வளவு போட வேண்டும்? எங்க போட்டா டபுள் ஆகும்? 'அசெட் அலகேஷன்' ரகசியம்!
A piggy bank and money

60% தீர்வு பட்ஜெட்டினை மேம்படுத்துவது எப்படி?

ஒருவருக்கு கடன்கள் இருப்பின், மீதமுள்ள 40% க்குள் கடன்களுக்கென பணத்தை ஒதுக்க வேண்டும். பொழுதுபோக்கு பணத்தைக் குறைத்தோ, தவிர்த்தோ, அதனை கடன்களுக்கென ஒதுக்க வேண்டும். 60% மாதாந்திர செலவுகளைக் குறைத்து, 50% என குறைக்க முடியுமா? எனப் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
லாபம் முழுவதையும் மீண்டும் பிசினஸில் போடுவது சரியா?
A piggy bank and money

ஒருவரது மாதாந்திர செலவுகள் அதிகமாக இருப்பின், 70% 30% என பிரித்துக் கொண்டு, பட்ஜெட் போட வேண்டும்.

60% தீர்வு பட்ஜெட்டைப் பயன்படுத்தி நிதி சுதந்திரத்தை அடைய வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com