

அசெட் அலகேஷன் (Asset Allocation) என்பது முதலீட்டுக் கருவிகளான பங்குகள், பத்திரங்கள் மற்றும் பணம் போன்ற பல்வேறு சொத்துகளுக்கு இடையே பணத்தை பிரித்து முதலீடு செய்வதாகும். இதன் முக்கிய நோக்கம், முதலீட்டு அபாயத்தை குறைத்து, நம் நிதி இலக்குகளுக்கு ஏற்ப ரிஸ்கையும் வருவாயையும் சமநிலைப்படுத்துவதாகும். இது நம் முதலீடுகளை ஒரே இடத்தில் குவிக்காமல், பல்வேறு சொத்துக்களில் போடுவதன் மூலம், எந்த ஒரு சொத்தின் வீழ்ச்சியாலும் ஏற்படும் ஒட்டுமொத்த அபாயத்தை குறைக்க உதவுகிறது. இந்த உத்தி நம் நிதி இலக்குகள், இடர் சகிப்புத் தன்மை மற்றும் முதலீட்டு கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அபாயத்தையும் வருவாயையும் சமநிலைப்படுத்த உதவுகிறது. இது போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்துவதன் மூலம் ரிஸ்கை குறைத்து வருவாயை அதிகரிக்கும்.
வருமானம் தரும் சொத்துக்கள்:
வருமானம் தரும் சொத்துக்கள் என்பவை முதலீட்டாளரின் தீவிர முயற்சியின்றி நிலையான வருமானத்தை உருவாக்கும் முதலீடுகளாகும்.
பிக்சட் டெபாசிட்டுகள், ஈவுத்தொகை வழங்கும் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், வீடு ஆகியவை வாடகை, வட்டி, டிவிடெண்ட் போன்ற வருமானத்தை தரக்கூடியவை. வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இவை தரும் வருமானம் அவர்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும்.
பண மதிப்பை குறையாமல் காக்கும் சொத்துகள்:
பண மதிப்பை (வாங்கும் சக்தியை) குறையாமல் காக்கும் சொத்துகள் என்பவை பணவீக்கத்திற்கு ஈடு கொடுத்து மதிப்பை தக்க வைக்கும் அல்லது அதிகரிக்கும் சொத்துகளாகும். அவற்றுள் பங்குச்சந்தை முதலீடுகள், தங்கம், ரியல் எஸ்டேட் (நிலம் மற்றும் கட்டிடங்கள்) மற்றும் முதலீட்டு பத்திரங்கள் ஆகியவை அடங்கும். இவை பணத்தின் வாங்கும் சக்தியை பாதுகாக்க உதவுகின்றன. குறிப்பாக வட்டி விகிதங்கள் பணவீக்க வீகிதத்தை விட குறைவாக இருக்கும் போது இது மிகவும் முக்கியமாகும். வீடு, நிலம், தங்கம் போன்றவை முதலீட்டின் மதிப்பை காக்கும் சொத்துக்கள்.
பண மதிப்பை குறைக்கும் சொத்துக்கள்:
அதிக பண மதிப்புள்ள கார், செல்போன்கள், பைக் போன்றவை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் அதனை வாங்கிய அடுத்த நாளே வித்தாலும் பண மதிப்பு குறைந்து விடும்.
இவற்றை நாம் அவசர தேவைக்கு விற்று பணமாக்க முடியும் என்றாலும் இதனால் வருமானம் கூடுவதில்லை. வாங்கியதை விட குறைவான விலைக்கே விற்க வேண்டியுள்ளது. சிலர் இவற்றை சொத்துக்களாக எண்ணுகிறார்கள். ஆனால் இவை வருமானம், செலவு குறைப்பு, பண மதிப்பை காப்பாற்றுவது போன்ற எந்த பலனையும் தருவதில்லை என்பதுடன், வாங்கிய மறு நிமிடமே அவற்றின் பண மதிப்பும் குறைந்து விடுகிறது.
செலவை குறைக்க உதவும் சொத்துக்கள்:
ஹெல்த் இன்சூரன்ஸ் நம்முடைய மருத்துவ செலவுகளை குறைக்க உதவுகிறது. வீடும் நம்முடைய செலவை குறைக்க உதவும் சொத்தாகும். வருடங்கள் செல்லச் செல்ல வாடகை அதிகமாகும் சூழலில் வாடகை செலவை குறைக்க (மிச்சப்படுத்த) வீடு உதவுவதால் இது செலவை குறைக்கும் சொத்தாக கருதப்படுகிறது.