

ஆன்லைன் மோசடியில் இருந்து நம் பணத்தை பாதுகாக்க முக்கியமான நிதி விவரங்களை யாருடனும் பகிராமல் இருப்பது, சந்தேகத்திற்குரிய அழைப்புகள், இணைப்புகளை தவிர்ப்பது, ஓடிபி பகிராமல் இருப்பது, அறியாத லிங்குகளை கிளிக் செய்யாமல் இருப்பது மற்றும் நம்முடைய வங்கி விவரங்களை ரகசியமாக வைத்திருப்பது போன்றவை மிகவும் அவசியமாகும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவரும் இந்நாட்களில் நம் வங்கிக் கணக்கு மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க சில முக்கிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
முக்கிய விவரங்களை ரகசியமாக வைத்திருக்கவும்:
OTP மற்றும் PIN பகிரவேண்டாம்:
நம் வங்கி கார்டின் PIN எண், UPI PIN மற்றும் மொபைலுக்கு வரும் OTP(one- time password) ஆகியவற்றை வங்கியாளர்கள் உட்பட யாரிடமும் எக்காரணம் கொண்டும் சொல்ல வேண்டாம்.
பணம் பெற PIN தேவையில்லை:
நம் கணக்கிற்கு பணம் வருவதற்கு நாம் UPI PINஐ உள்ளிடத் தேவையில்லை. யாராவது பணம் அனுப்ப யுபிஐ பின் கேட்டால் அது மோசடி.
CVV எண் பாதுகாப்பு:
CVV எண்களை யாரிடமும் கூறாமல் இருக்கவேண்டும். டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் பின்புறம் உள்ள 3 இலக்க எண்ணை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.
பரிமாற்ற இணைப்புகள் (links):
தெரியாத எண்களில் இருந்து வரும் லின்க்குகளை கிளிக் செய்யவோ அல்லது சந்தேகத்திற்கு இடமான செயலிகளை பதிவிறக்கம் செய்யவோ கூடாது.
இணையதளங்கள் மற்றும் செயலிகளில் கவனம்:
வாட்ஸ்அப், குறுஞ்செய்தி(SMS) மற்றும் மின்னஞ்சல்களில் வரும் தெரியாத நபர்களின் அல்லது சந்தேகத்திற்கு இடமான இணைப்புகளை கிளிக் செய்யாமல் இருப்பது நல்லது.
வங்கி செயலிகள் அல்லது இதர பணப் பரிவர்த்தனை செயலிகளை நம்பகமான அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யவேண்டும்.
பொது இடங்களில் வைஃபை இணைப்புகளைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யாமல் இருக்கவேண்டும்.
ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் பொழுது அல்லது நெட்பேங்கிங் பயன்படுத்தும் பொழுது, அந்த இணையதள முகவரி https:// என்று தொடங்குகிறதா என சரி பார்க்கவும்.
தெரியாத நபர்களின் பேச்சைக் கேட்டு போனில் ஸ்கிரீன் ஷேர்(Screen Share) செயலிகளை நிறுவவோ இயக்கவோ கூடாது.
சாதனங்கள் மற்றும் கணக்கு பாதுகாப்பு:
உங்கள் பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற எளிதில் யூகிக்கக் கூடியவற்றை பாஸ்வேர்டாக வைக்காமல் கடினமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தலாம்.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அல்லது உணவகங்களில் கிடைக்கும் இலவச பொது வைஃபை-ஐப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிர்க்கவும்.
அன்யிடெஸ்க் (AnyDesk), டீம்வியூவர் (TeamViewer) போன்ற ஸ்கிரீன் ஷேரிங் செய்திகளைத் தெரியாத நபர்கள் கூறும்போது பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது அவசியம். இது நம் மொபைல் திரையை அவர்கள் பார்க்க வழி வகுக்கும்.
செய்ய வேண்டியவை:
உங்கள் வங்கி கணக்கு மற்றும் யுபிஐ (UPI) செயலிகளில் நடக்கும் மாற்றங்களை உடனுக்குடன் கவனியுங்கள்.
வங்கி மற்றும் பேமெண்ட் சேவைகளுக்கு அவற்றின் அதிகாரப்பூர்வத் தளங்களை மட்டும் பயன்படுத்துங்கள்.
ஏதேனும் மோசடி நடந்தால் உடனடியாக உங்கள் வங்கிக்கு தகவல் கொடுத்து கணக்கைத் தடுத்து நிறுத்துங்கள்.
அவசர கால எச்சரிக்கை:
உங்கள் KYC காலாவதி ஆகிவிட்டது. உடனே புதுப்பிக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்றோ அல்லது உங்களுக்கு பம்பர் பரிசு விழுந்துள்ளது என்றோ வரும் போலி அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் நம்பி இறங்கவேண்டாம். இவை எப்போதுமே ஏமாற்று வேலையாகத்தான் இருக்கும்.
மோசடி நடந்தால் உடனடியாக செய்ய வேண்டியது:
ஒருவேளை நாம் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழக்க நேரிட்டால், முதல் 30 நிமிடங்களுக்குள் தேசிய சைபர் ஹெல்ப்லைன் (National Cyber helpline) எண்ணை அழைத்து உடனடியாக புகார் அளிக்கவேண்டும். மேலும் cybercrime.gov.in என்ற அரசு இணையதளத்திலும் நம் புகாரைப் பதிவு செய்து பணத்தை முடக்கலாம்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் ஏற்படும் தவறுகளைத் தவிர்த்து, உங்கள் சேமிப்புக் கணக்கை எந்தவித நிதி இழப்பும் இன்றி 100% பாதுகாப்பாக நிர்வகிக்கும் தன்னம்பிக்கையைப் பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: