
இந்தியாவின் பாரம்பரிய கால்நடையான மாடு பல வழிகளில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறது. பசுவின் மூலம் பால் பொருட்கள் மட்டுமின்றி, கோமியம், சாணம் ஆகியவை கூட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு நல்ல வருமானத்தை பெற்றுத் தருகிறது. மாட்டு சாணம் (Cow dung) சிறந்த இயற்கை உரமாக விவசாயம் செய்வதற்கு பலன் அளிக்கிறது. பல நாடுகள் உடல்நல அபாயங்கள் ஏற்படுவதை தடுக்க செயற்கை உரங்களை தடை செய்து விட்டு இயற்கை உரங்களை நோக்கி செல்கின்றன.
மிக முக்கியமாக அரபு நாட்டவர்கள் தங்கள் உண்ணும் உணவு பூச்சி கொல்லி மருந்துகள் மூலம் விளையாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களின் ஆரோக்கிய சிந்தனை இந்தியர்களின் பாக்கெட்டுகளை பணத்தால் நிரப்புகிறது. அரபு நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் கூட இந்தியாவில் இருந்து மாட்டு சாணத்தை இறக்குமதி செய்கின்றன. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் சீனாவும் இதை இறக்குமதி செய்வது தான்.
அனைத்து ஏற்றுமதியிலும் முன்னணியில் இருக்கும் சீனா இந்த ஒரு விஷயத்தில் கோட்டை விட்டு விட்டது. சீனர்கள் பாரம்பரியமாக மாட்டுப் பாலுக்கு பழகாததால் அங்கு மாடுகள் மிகவும் குறைவு. அதனால், இந்திய இறக்குமதியை நம்பியுள்ளது. இவர்கள் மட்டுமின்றி அமெரிக்கா, மாலத்தீவுகள், நேபாளம், பிரேசில், இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளும் இந்தியாவிலிருந்து பசுவின் சாணத்தை இறக்குமதி செய்கின்றன.
இந்தியாவில் தினமும் எவ்வளவு மாட்டு சாணம்(Cow dung) உற்பத்தி செய்யப்படுகிறது?
இந்தியாவில் சுமார் 30 கோடி கால்நடைகள் உள்ளன. அவை தினமும் சுமார் 3 கோடி டன் சாணத்தை வெளியேற்றுகின்றன. இந்தியாவில், சாணம் முதலில் எரி பொருளுக்கான வறட்டிகள் தயாரிக்கப் பயன்பட்டன. அது மட்டுமல்லாது இயற்கை உரமாகவும், திருநீறு, ஊதுபத்தி போன்ற ஆன்மீக பொருட்கள் தயாரிப்பிற்கும் பயன்பட்டது. சீனா, பிரிட்டன் போன்ற நாடுகளில், இது மின்சாரம் மற்றும் உயிரி எரிவாயுவை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
இந்தியாவிலிருந்து எதற்காக பசும் சாணத்தை வாங்குகிறார்கள்?
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில், ரசாயன உரங்கள் பயன்படுத்தி வளர்க்கப்படும் பயிர்களால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன. இதனால் அவர்கள் தங்கள் உண்ணும் உணவு பாதுகாப்போடு இருக்க விழிப்புணர்வை பெற்றுள்ளனர். தற்போது மாட்டு சாண உரத்தை பயன்படுத்தி விவசாய பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
பசும் சாணத்தை உரமாக பயன்படுத்த மற்ற நாடுகள் விரும்புகிறதா?
இயற்கை வேளாண்மை உலகளவில் பிரபலமடைந்து வருகிறது. பல நாடுகளில் இயற்கை வேளாண்மைக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதனால், பல நாடுகள் ரசாயன உரங்களை கைவிட்டு இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றன.
பசுவின் சாணம் மண் வளத்தை மேம்படுத்துகிறது. அதனால், விளைச்சலும் அதிகரித்துள்ளது. இந்திய பசுவின் சாணப் பொடியைப் பயன்படுத்துவதன் மூலம் குவைத்தில் பேரீச்சம் பழங்களின் மகசூல் அதிகரிப்பதாக அந்நாட்டு விவசாய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மாட்டு சாணம் ஏற்றுமதி லாபம் உள்ள தொழிலா?
அரபு நாடுகளில் ஒன்றான குவைத் மட்டுமே இந்தியாவுடன் 192 மெட்ரிக் டன் பசுவின் சாணத்திற்கான ஆர்டரைச் கொடுத்துள்ளது. 2023-2024 ஆண்டு வாக்கில் சாண உரம் 400 கோடி அளவிற்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாட்டு சாணத்தின் விலை ஒரு கிலோவிற்கு 30 முதல் 50 ரூபாய் வரை இருக்கிறது.
அதே நேரம் இயற்கை உரம், சாணப் பொடி ஆகியவை விலையில் வேறுபடுகின்றன. சாணத்திற்கு பிரத்தியேகமாக எந்த ஒரு கூட்டு பொருள் தேவையும், பணம் கொடுத்து வாங்கும் பொருட்களின் தேவையும் இல்லை. அதிக மெனக்கெடல்கள் இல்லை. இதை வெயிலில் காய வைத்தால் போதுமானது என்பதால் அதிக செலவில்லாத லாபமான தொழிலாக உள்ளது.