
ஐந்தாண்டு திட்டங்களின் பொழுது நாட்டில் அவரவர் செய்யும் தொழில்களை குடிசைத் தொழில்களாக இடம் பெறச் செய்து, அதற்கான சங்கங்கள் அமைத்து அவர்கள் செய்யும் பொருட்களை கொண்டு மற்ற இடங்களில் சேர்ப்பது, அதற்கான விலை நிர்ணயம் செய்வது போன்றவற்றை சங்கங்கள் பார்த்துக் கொண்டன. இதனால் குடிசைத் தொழில் வளர்ந்தது. மக்களும் விவசாயம் போன்ற வேலைகளை அந்தந்த பருவ காலங்களில் முடித்துவிட்டு விவசாய வேலைகள் இல்லாத மற்ற நேரங்களில் அவரவர்க்கு தெரிந்த மற்ற சிறு சிறு தொழில்களை செய்ய முற்பட்டனர். இதனால் பெண்களுக்கும் அதிகமான வேலை வாய்ப்பு கிடைத்தது. அவரவர் வீட்டின் வருமானம் பெறுகியதோடு நாட்டுக்கும் வருவாய் கிடைக்கும்படி செய்தனர்.
பனைநார், தென்னை நார் இவைகளை செப்பனிட்டு கயிறு திரித்து தம் உழவுக்கு அவற்றைப் பயனுள்ள பொருட்களாக செய்யும் தொழிலில் ஈடுபட்டார்கள்.
அப்படியே ஓலைகளாலும், மூங்கில், பிரம்பு, கசங்கு முதலியவற்றாலும் கூடை, முறம் முதலியன செய்தார்கள். அதேபோல் ஓலை, கோரை முதலியவற்றால் பாய் நெய்வதையும், களிமண் கொண்டும் வண்ணம் கொண்டும் பொம்மை செய்வதும், நூல் நுற்பதும் ஆடை நெய்வதும் கூட பழங்காலத்தில் உழவர்களே தம் ஓய்வு கால வேலைகளாக செய்து வந்தனர்.
இன்று நாட்டில் பல்வேறு வகை தொழிற்சங்கங்கள் பணியாற்றுகின்றன. இரண்டாம் ஐந்தாண்டு திட்ட எல்லையில் இருந்து தொழில்துறை தம் வழி மக்களுக்கு உதவிய அமைப்புகள் மற்றும் அரசாங்க உதவி பெற்றும் பெறாமலும் வளரும் தொழில்கள், பல கிராமத் தொழில் சங்கங்கள் பல அமைக்கப்பட்டன. அப்பொழுது 31.3.60 முடிய மொத்தம் 334 தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டது. தொழில்நிலை வகையில் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் 124 மட்பாண்டம் செய்யும் சங்கம் 9, செங்கல் ஓடு உற்பத்தியாளர் சங்கம் 33, கைக்குத்தல் அரிசி சங்கம் 16, தேன் உற்பத்தி சங்கம் 11, தோல் பதனிடும் சங்கம் 10, கரும்பு வெல்லம் உற்பத்தி சங்கம் 4, இவை அல்லாத இன்னும் மற்ற தொழிற்சங்கங்கள் எல்லாம் மொத்தம் 13 ஆயிரத்து 657 உறுப்பினர் தம் ரூ.5,42,123 மூலதனத்தை கொண்டு திறம்பட தொழில் வளர்த்தனர்.
இத்தொகை பெரும்பாலும் கதர், கிராமக் கைத்தொழில் நெறியாளர் இடம் இருந்தே பெறப்படுகின்றது. இச்சங்கங்கள் கோடிக்கணக்கான மதிப்புடைய பொருட்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து நாட்டுக்கு உதவி தன் உறுப்பினர்களுக்கும் வாழ்வு அளித்தன, இன்றும் அளித்து வருகின்றன.
மேலும் பனைவெல்லம் உற்பத்தி செய்பவர்களும் நன்கு வளம் பெற்று சென்னையில் ஒரு மத்திய சங்கமும் நாடெங்கிலும் கிளை சங்கங்களும் அடிப்படை சங்கங்களும் பல வகையில் அமைத்து தொழில் மேம்பாடு அடையச் செய்தனர். உற்பத்தி, பண்டமாற்று, விற்பனை முதலிய எல்லா துறைகளிலும் இந்த சங்கங்கள் கலந்து பணியாற்றுகின்றன. இதனால் பயன் பெறுவோர் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் உள்ளனர்.
ஆதலால், சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது போல், சங்கங்கள் குடிசைத் தொழில், சிறு தொழில் உற்பத்தியாளர்களுக்கு, பல்வேறு விதமாக உதவி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவை வீட்டுக்கும், நாட்டுக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவி புரிகின்றன என்பதை உணரலாம்.