
நாளையத் தேவைக்கு இன்றைய சேமிப்பே நமக்கு கவசமாகத் திகழும். பொதுமக்களிடையே சேமிப்பை ஊக்குவிக்க வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலங்களில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. இன்றைய நவீன உலகில் பங்குச்சந்தை முதலீடே குறுகிய காலத்தில் அதிக இலாபத்தைக் கொடுக்கக் கூடியதாக கருதப்படுகிறது. இருப்பினும் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம் என்று வருகையில் அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் தான் முதலிடத்தில் இருக்கின்றன.
சேமிப்பு என்றால் அதிக பணத்தைத் தான் முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை. நமக்கு ஏற்றத் திட்டங்களைத் தேர்வு செய்து நமது வருமானத்திற்கு ஏற்பவும் சேமிக்க முடியும். அப்படியான ஒரு திட்டம் தான் அஞ்சல் அலுவலகத் தொடர் வைப்புத் தொகை திட்டம் (Recurring Deposit).
தொடர் வைப்புத் தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் கணக்கைத் தொடங்க குறைந்தபட்சமே 100 ரூபாயே போதும் என்பது தான் இதன் சிறப்பம்சம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை.
சிறுகச் சிறுக சேமிக்க நினைக்கும் நடுத்தர மக்களுக்கு இத்திட்டம் ஏற்புடையதாக இருக்கும். தொடர் வைப்புத் திட்டத்தில் 5 ஆண்டுகள் வரை நம்மால் பணத்தை சேமிக்க முடியும். முதிர்வு காலம் முடிந்ததும் மேலும் 3 ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டித்துக் கொள்ளவும் முடியும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு 6.7% வட்டியை வழங்குகிறது. 18 வயது நிரம்பிய எவரும் இத்திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம்.
10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் உதவியுடன் கணக்கைத் தொடங்கலாம். பிறகு 18 வயது பூர்த்தியடைந்ததும் உரிய ஆவணங்களைச் செலுத்தி KYC பதிவு செய்ய வேண்டும்.
தொடர் வைப்புத் திட்டத்தை மாதத்தின் 15 ஆம் தேதிக்குள் தொடங்கினால், ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் தவணையை கட்டி விட வேண்டும். இல்லையெனில் 100 ரூபாய்க்கு 1 ரூபாய் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும். ஒருவேளை மாதத்தின் 15 ஆம் தேதிக்குப் பிறகு இத்திட்டத்தில் கணக்கைத் தொடங்கினால் மாதக் கடைசி வரையில் தவணையைச் செலுத்தலாம்.
உதாரணத்திற்கு மாதந்தோறும் 1,000 ரூபாயை தொடர் வைப்புத் தொகை திட்டத்தில் சேமித்து வருகிறோம் என வைத்துக் கொள்வோம். 5 ஆண்டுகள் முடிவில் முதலீட்டுத் தொகை ரூ.60,000 உள்பட வட்டித் தொகை ரூ.12,000 சேர்த்து ரூ.72,000 கிடைக்கும். அவசரத் தேவையில்லை எனில், முதிர்வுத் தொகையை மறு முதலீடு செய்தால் கூடுதல் இலாபம் கிடைக்கும். அதாவது இந்தத் தொகையை அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் திட்டத்தில் பிக்சட் டெபாசிட் முறையில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் முடிவில் நமக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும். முதலீட்டில் இலாபகரமாக இருக்க வேண்டுமெனில் தொடர்ந்து முதலீடு செய்வது அவசியம்.
முதலீடுகள் நாளையப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மட்டுமல்ல, அவசரத் தேவைக்கு கடன் பெறவும் உதவுகின்றன. முதலீட்டுத் திட்டங்களின் மீதும் கடன் பெற்றால் வட்டி குறைவு என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். டெபாசிட் செய்துள்ள மொத்த தொகையில் 50% வரை 2% தனிநபர் வட்டியில் கடன் பெறும் வசதி தொடர் வைப்புத் தொகை திட்டத்திலும் உண்டு.
தொடர் வைப்புத் தொகை திட்டத்தை தொடங்கிய 3 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டத்தை முடித்துக் கொள்ளும் வசதியும் உண்டு. நிதி நெருக்கடிக்கு ஆளாகும் நேரத்தில் இம்முடிவை எடுக்கலாம்.